முழி விசளம் | தினகரன் வாரமஞ்சரி

முழி விசளம்

கலந்தர்ஸா வீடு அன்று என்றுமில்லாதவாறு ஏனோ களைகட்டியிருந்தது. ஏகப்பட்ட சனக்கூட்டம். கலகலப்புக்குப் பஞ்சம் இருக்கவில்லை. ஆட்கள் வருவதும் போதுமாக அலைமோத, மனைவி ஆயிலா உம்மா அனைவரையும் தனக்கே உரித்தான பாணியில் வரவேற்பதற்காக முந்தானைச் சேலையை இறுகக் கட்டிக் கொண்டு முழு மூச்சாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.

இத்தனை பிஸிக்கும் காரணம் தனது மூத்த மகன் சலீம் சவூதியில் இன்ஜினீயராக தொழில் புரிந்துவிட்டு வெகேசன் வந்து இரண்டு மாதங்கள், தான் பிறந்த ஊரில் குடும்பத்தினருடன் ​ெஜாலியாக வாழ்ந்த பின் மீண்டும் சவூதி செல்பவனை ஒருமுறை பார்த்து ஆசீர்வாதத்துடன் வழியனுப்பி வைப்பதற்காக நண்பர்கள், அயலவர்கள், குடும்பத்தினர் சங்கமித்து தத்தம் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளும் பிரியாவிடை ஒன்று கூடல்தான் இதற்கான முக்கியகாரணம்.

நாளை இரவு ஏழுமணி ‘Flight’றுக்காக இன்று, சாய்ந்தமருதில் இருந்து தனியார் ஏ.சி வாகனமொன்றில் பயணம் செய்வதற்கான முஸ்தீபு தடபுடலாக நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறுசம்பவம் எதிர்பாராதவிதமாக நடந்தது, தாய் ஆயிஸா உம்மாவுக்கு அறவே கொஞ்சம் கூடப்பிடிக்கவில்லை.

மகன் வீட்டில் இருந்து வந்தோர் அனைவரிடமும் விடைபெற்று வெளியேற்க காலடி வைத்ததுதான் தாமதம், சடுதியாக எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு கடுவன் பூனை குறுக்கிட்டுவிட்டதாம். பழைய பாரம் பரியத்திற்குள் குடிமூழ்கிப் போன ஆயிஸா உம்மாவுக்கு இது அடிவயிற்றில் இடிவிழுந்ததான பயம் பற்றிக் கொள்ள முழி விசளம் சரியில்லமனே,

'அபசகுனம் இண்டைக்குப் போகாதடா நாளைக்கிப் போ மகன்' என்று அழாக்குறையாக அவள் பட்டபாட்டை ஆச்சரியத்தோடு மூக்கில் விரல் வைத்தவாறே பார்த்துக் கொண்டிருந்தார்கள் வந்திருந்தோர் அனைவரும்.

தாயின் இச்செயலைப் பார்த்த மகனுக்கும் அழுவதா? சிரிப்பதா? என்றேபுரியாமல் ஆடிக் கொண்டிருந்தான். பன்னாட்டுக்காரர்களுடனும் நன்கு பழகி நவீனயுகத்திற்குள் நீச்சலடித்துக் கொண்டிருந்த சலீம், தாயின் கண்மூடித்தனமான பழைய பாரம்பரியத்தை இட்டு உள்ளூர் சலிப்படைந்திருந்தாலும், தாய் சொல்லைத் தட்டுவது கூடாதென்பதும் அவனுக்குப் புரியாததல்ல.

என்னசெய்ய? இன்றைய நிலைக்கு அவன் தட்டித்தான் ஆகவேண்டும். இல்லை என்றார். விஸா காலாவதி அடைந்து விடும் என்ற காரணத்தினால் எப்படியோ தாயை ஆசுவாசப்படுத்தி சமாளிப்பதில் அவனோடு அங்கு வந்திருந்த சிலரும் சேர்ந்து கொண்டார்கள்.

ஒருவாறு அவளை சமாதானப்படுத்திக் கொண்டு வீட்டைவிட்டு தனக்கான பேக்குகளுடன் வெளியேறினான்.

அந்த நேரம் பார்த்து, காகங்களும் பறந்து... பறந்து... கா... கா... என்று கரைந்து கொண்டதையும் பொல்லாத அபசகுனமாகக் கருதிய இவளுக்கு மேலும் இருமடங்கு பயத்தை ஊட்டியதால், அவளால் இருப்புக்கொள்ளவே முடியவில்லை.

ஆயிஸாவின் வயிற்றில் உதித்த மூன்றுபிள்ளைகளில் இருவர் பெண்கள். மூத்த பிள்ளைதான் சலீம் அதனால் தானோ என்னவோ இவனிடம் அளவு கடந்த பாசம்.
'தங்கமகனே! அல்லாட உதவியால போயிற்றுவாடா', என்று முத்தமழை பொழிந்து விரும்பியும், விரும்பாமலும் விடை கொடுத்த இவளுக்கு அன்று இரவு பூராதூக்கமே வரவில்லை.

ஆடி, அசைந்து, புரண்டு புரண்டு மகனின் ஞாபகத்திலேயே தத்தளித்துக் கொண்டிருந்தாள். ஆழ்கடலில் நங்கூரம் இல்லாத படகைப்போல கணவனும் பாரிசவாதத்தால், வீட்டுக்குள் முடங்கி பல வருடங்கள் ஆனதால் அவரின் பணி விடைகளையும் இவளால் தான் நிறைவேற்ற  வேண்டிய இக்கட்டான கடப்பாடு இவளுக்கிருந்து எப்படியோ இரண்டு குமருகளையும் கரையேற்றிய திருப்தியில் மகனின் ஆறுதலோடு வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ஆயிஸா உம்மா மகனுக்கு ஏதொன்றும் நடந்திரக் கூடாதே என்ற ஏக்கம் பாசம் தூக்கத்தைவிரட்டி தொந்தரவு செய்தது.
 
அதற்குள் கூரையில் இரைதேடிக் கொண்டு காரியத்தில் கண்ணாயிருந்த பல்லிதன்றின் துல்லியமான ஓசை சாவுமணிபோல அவன் காதில் அபாயச்சங்கொலி எழுப்ப மேலும்... மேலும்... பயத்தை அதிகரிகச் செய்ததே தவிர அவளால் படுக்க முடியவில்லை.
‘என்ர புள்ளைக்கு என்ன நடத்திருச்சோ அல்ல? நீதாண்டா துணை என்றவாறே புரண்டு கொண்டிருந்த அவளுக்கு பகலெல்லாம் ஓடிக் களைத்த அசதியில் சற்று தூக்கம் வருவதற்கான சமிக்ைஞயின் அறிகுறி விழிகள் ஊடாக வெளிப்பட்டது.

விழிகள்தான் இமைச்சாளரத்தை இழுத்து மூடியதே தவிர உள்ளம் மட்டும் மகனின் ஞாபகத்தால், உறங்காது திறந்திருந்தது.
அதற்குள் நித்திராதேவி தன்னை அரவணைத்து. ஆராரோ இசைப்பதற்குள் எங்கிருந்தோ ஒரு அழைப்புக்கான ஓசை தனது பழைய சம்சுங்போனில் இருந்து ஒலிப்பது அவள் காதல்விழ, திடீரென வாலைச்சுருட்டிக் கொண்டு காதிற்குள் போனைத் திணித்தபோது...

'ஹலோ...' என்ற குரலுக்கு பதற்றப்பட்டவளாக 'ஹலோ... நீங்க ஆரு?' என்றதும் தான் தாமதம் பூமி சூரியனைச் சுற்றுவதுபோல அவள் தலை சுற்றிக் கொண்டிருந்தது.... ஆகாய மண்டலத்தை நோக்கி அவசரப்பட்டவளாக மண்டை தெறிக்கக் கத்தினாள் ஆயிஸா. கொஞ்சம் பொறுமையா இருங்க. பதற்றப்படாதீங்க.
'சலீம் உங்குறது ஆரு?' 'என்ர மகன்தான் என்ன நடந்தது சொல்லுங்க?' அம்மா அப்படியொண்டும் சீரியஸா இல்ல சின்ன விஷயம்தான்.

'அவரு வந்த வாகனம் பள்ளத்தில் விழுந்து...' சிங்களமும் தமிழும் கலந்த வார்த்தை சொல்லி முடிப்பதற்குள்ளே அவளின் உயிர் அவளைவிட்டுப் பிரிந்திடும் போல்தான் இருந்தது.

மேலும் துடித்துக் கொண்டே கேட்டாள்... 'என்ர மகன் இப்ப எங்கே?' 'கண்டி ஜெனரல் ஓஸ்பிரல் ஐந்தாம் வாட்டுல இரிக்காரு, அவசரமாக வரவும்' என்று தொடர்பை முடித்ததும் தான் தாமதம். ஒப்பாரி ஓங்காரமாக எழுந்தது. அந்த அர்த்தராத்திரியில். 'நான் படிச்சிப் படிச்சி சென்னனே பூன குறுக்கறுத்த முழிவிசளம் சரியல்ல.
இப்பபோகாத நாளைக்கிப் போயெண்டு. ஆரும் எண்ட கதை​ையக் கேட்டார்களா? பழைய பாண்டல் பிடிச்ச கொள்கையாம். அது இதுண்டு என்ன மட்டந்தட்டிப் போட்டு, கனக்கப் படிச்சதுகள் கவடிப் பானைக்க விழுந்தாப் போல பாத்தியனா? இப்ப என்ர ஈரக் கொழுந்து மகனாரு வாட்டுல படுக்கானாம் அதுவும் கண்டி பெரியாஸ்பத்திரியில' தாய் ஆயிஸா உம்மா நடுச்சாமம் தன்னஞ்தனியாக புலம்பிக் கொண்டிருப்பதை பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த இரண்டு பெண்பிள்ளைகளும் அவளைத்தட்டி யெழுப்பி, எண்ணம்மா? இந்த நேரம் கனவுல கெடந்து கீருவாருண்டு புலம் புறீங்க. எங்கடியம்மா? என்ர மகன் சலீமூ. 'நானா சவூதில போய் சந்தோஸமா இரிக்காரு. இப்பகொஞ்ச நேரத்துக்கு முதல்லான் எங்களுக்குக் கோல் எடுத்தவரு'.

பாசத்தின் உச்சம் அதக் கூட நம்ப மறுத்த அவள் மகன் சலீமோட நேரடியா மனம்குளிர பேசினத்துக்குப் பிறகுதான் அவளின் போன உயிர் திரும்பிவந்தது சுயநினைவுக்கு.
ஆயிஸா உம்மாவின் முகத்தில் அசடு வழிய கடுவன் பூனையும், பல்லியும், காகமும் ஏளனமாய் அவளைப் பார்த்து சிரிக்க பக்குளும் பக்குவமாக அவற்றோடு இணைந்து கொண்டதைக் காண சகிக்க முடியாத அவள் தன்போர்வையை இழுத்து மூடிக் கொண்டாள்.

எல்லாமே இந்த முழிவிசளத்தால வந்தவின. சிக்... என்றவாறே. 

பாவம் ஆயிஸா உம்மா. 

Comments