பொறுப்புக் கூறல்: ஜெனீவா அமர்வோடு முடிவதல்ல | தினகரன் வாரமஞ்சரி

பொறுப்புக் கூறல்: ஜெனீவா அமர்வோடு முடிவதல்ல

இந்தப் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு என்பது சாதாரணமானதல்ல. நடந்த நீதியின்மைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கும் காரணமான தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும். அப்படிப் பொறுப்பேற்கும் நிலை ஏற்படும்போது, அதற்கான தண்டனை, நிவாரணமளித்தல் அல்லது இழப்பீட்டை வழங்குதல் எல்லாம் அவசியமாகும்

 

“இலங்கை தொடர்பான விடயத்தில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்போம்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் (Zeid Al Hussein) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே அல் ஹூசெய்ன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அதோடு கடந்த வாரங்களில் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் இருப்புக்குச் சவாலான (முஸ்லிம்கள் மீதான ) வன்முறைகள் நடந்திருக்கும் சூழலில் அல் ஹூசெய்னின் இந்த அறிவிப்பு வந்திருப்பதால், அவருடைய இந்தக் கருத்துக்கு – அறிவிப்புக்கு – கூடுதலான அழுத்தம் ஏற்படுகிறது. மற்றும்படி இந்த மாதிரியான பலருடைய அறிவிப்புகளை பாதிக்கப்பட்ட மக்கள் பல தடவை கேட்டிருக்கிறார்கள்.

ஒரு காலம்வரையில் அவற்றையெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் நம்பியிருந்ததும் உண்டு. ஆனால், பின்னர் இந்த அறிவிப்புகள் எல்லாம் அரசியல் உள்நோக்கமுடையவை அல்லது சம்பிரதாயமானவை என்று புரிந்து கொண்டனர்.

இப்பொழுது ஐ.நாவுக்கே நெருக்கடியை ஏற்படுத்துகின்ற அல்லது ஐ.நாவின் மனித உரிமை நிலைப்பாடுகள் பற்றிய கேள்வியை எழுப்புகிற விதமாக இலங்கையின் நிலவரங்கள் இருப்பதால் தவிர்க்க முடியாமல் அல் ஹூசெய்ன் சற்று இறுக்கமாக அல்லது அழுத்தமாக அறிவிப்பை விடுக்க வேண்டியதாகி விட்டது.

மனித உரிமைகள் விடயத்தில் அல் ஹூசெய்னையும் விட அதிகம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தவர் ஐ.நா மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் திருமதி நவிப்பிள்ளை. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நிச்சயமாக நவிப்பிள்ளையின் காலத்தில் தீர்வு கிடைக்கும், நீதி கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தன்னுடைய பதவி ஓய்வுக்கு முன்பாக நவிப்பிள்ளை இலங்கைக்கு வந்தபோது, இந்த நம்பிக்கையோடு பாதிக்கப்பட்டவர்கள் நவிப்பிள்ளையைச் சந்தித்திருந்தனர். அப்பொழுது அவர்கள் தங்கள் நியாயமான எதிர்பார்ப்புகளை கண்ணீருடன் நவிப்பிள்ளையிடம் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால், நவிப்பிள்ளை பணியை விட்டுப்போனதோடு அந்த நம்பிக்கையும் போய் விட்டது. இப்போது நவிப்பிள்ளையின் இடத்தில் அல் ஹூசெய்ன் இருக்கிறார். அல் ஹூசெய்ன் தன்னுடைய வீச்செல்லைக்குட்பட்டுச் செயற்படுகிறார் என்பது உண்மை. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பான எண்ணத்தோடு அல் ஹூசெய்ன் இருந்தாலும் ஐ.நாவின் தீர்மானங்களுக்கு வரையறைகள் உண்டு. சக்தி மிக்க நாடுகளின் விருப்பங்களும் தீர்மானங்களுமே ஐ.நாவின் நடைமுறைகளாகும். இப்பொழுதும் அதற்கான சாத்தியங்களே அதிகமாக உண்டு.

ஆனாலும் இதில் ஒரு சிறியதொரு ஒளிக்கீற்று தற்போது தென்படுகிறது. அண்மையில் முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலையும் நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளையும் பற்றி ஐ.நா கவனம் கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளன. ஐ.நா கவனம் கொள்ளுதல் என்பது சக்திமிக்க நாடுகளின் நிலைப்பாடுதான். இந்த நாடுகளுக்கும் இலங்கையில் நடந்த அண்மைய சம்பவங்கள் ஒரு வகையில் நெருக்கடியையே ஏற்படுத்தியுள்ளன. இந்த நாடுகளின் செல்லப் பிள்ளையே தற்போதைய அரசாங்கம் என்பதால், இதனுடைய ஆட்சிக் காலத்தில் நடக்கின்ற சம்பவங்கள், பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் இவையும் பொறுப்பாளிகள். பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாக உள்ளனர். இந்த அரசாங்கத்தை உருவாக்குவதிலும் பின்னர் இதைப் பாதுகாப்பதிலும் இந்தச் சக்தி மிக்க கூட்டாளிகள் தொடர்ந்தும் செயற்பட்டுக்கொண்டேயிருப்பதால் இது தவிர்க்க முடியாததாக உள்ளது. 

இதில் துயரமும் வேடிக்கையும் நிறைந்த உண்மை என்னவென்றால், யுத்த முடிவுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நிலைமாறுகாலகட்ட நீதிச் செயற்பாடுகளில் அரசாங்கம் காட்டிய கபடத்தனமும் இதற்கு ஐ.நா விட்டுக் கொடுத்த தளர்வுப்போக்குமாகும். நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால், பொறுப்புச் சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்.

இந்தப் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு என்பது சாதாரணமானதல்ல. நடந்த நீதியின்மைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கும் காரணமான தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும். அப்படிப் பொறுப்பேற்கும் நிலை ஏற்படும்போது, அதற்கான தண்டனை, நிவாரணமளித்தல் அல்லது இழப்பீட்டை வழங்குதல் எல்லாம் அவசியமாகும். இதற்குப் பொறுப்புக் கூறுதலின் அடிப்படையில் நடந்தவற்றைச் சீராக ஆராய்தல், நடந்தவற்றுக்கான நீதி விசாரணைகளை நம்பகத்தன்மையோடு மேற்கொள்ளுதல், குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை வழங்குதல், அரசு சார்பான தவறுகளுக்கான பொறுப்பேற்றல், பாதிப்புகளுக்கு நிவாரணமளித்தல், நீதி வழங்குதல், நீதி வழங்குதலை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுடன் குற்றங்களும் தவறுகளும் மீள நிகழாமல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவும் வேண்டும்.
  
ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை ஐ.நாவும் கொடுக்கவில்லை. சக்தி மிக்க நாடுகளும் (சர்வதேச சமூகமும்) கொடுக்கவில்லை.

எனவே தவறிழைத்த அத்தனை தரப்புகளும் தங்கள் குற்றங்களிலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பி விட்டன. பொறுப்புச் சொல்லுவதிலிருந்தும் பொறுப்பேற்பதிலிருந்தும் விடுபட்டு விட்டன. என்பதால் அரசுக்கும் அதைச் சார்ந்தோருக்கும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எத்தகைய நிர்ப்பந்தமும் இவற்றுக்கு இல்லாமல் போய் விட்டது. இதன் விளைவே சிறுபான்மை இனங்களின் மீதான அச்சுறுத்தலும் வன்முறையுமாகும். கடந்த வாரங்களின் வன்முறைச் சம்பவங்களும் அதற்கு முன்பு நடந்த ஒடுக்குமுறைகளும் இதன் விளைவானவையே.

உண்மையில் நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்குமாக இருந்தால் நல்லிணக்கப் பொறிமுறை சிறப்பாக முன்னேறியிருக்கும். நல்லிணக்கச் செயற்பாடுகளும் வெற்றிகரமாக நடந்திருக்கும்.

படைவிலக்கல் – பொதுமக்களின் காணிகள் மீளளிக்கப்படுதல் தொடக்கம் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடு, நட்ட ஈடு வழங்குதல், காணாமலாக்கப்பட்டோரைக் கண்டறியும் நடவடிக்கை எனப் பல விசயங்கள் நடந்திருக்கும். அரசியல் சாசன உருவாக்கமே – இடைக்கால அறிக்கையே - வேறு விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதாவது விசேடமாக “பௌத்தத்திற்கு முன்னுரிமை“ அளிக்கப்படாமல், “அனைத்து மதங்களுக்கும் சமனிலை அந்தஸ்து” என்று எழுதப்பட்டிருக்கும். அதைப்போலவே ஒருமித்த, ஒற்றையாட்சி என்ற தடுமாற்றங்களுக்குள் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்க வேண்டி வந்திருக்காது. 

இதைச் செய்வதற்கான தயக்கம் ஏன் நீடிக்கிறது? இதுதான் நாம் கவனிக்க வேண்டியதாகும். இலங்கையில் எதையும் கட்சி அரசியலுக்குள்ளால், கட்சி நலனின் அடிப்படையில் சிந்திக்கும் பழக்கம் அரசியல் வாதிகளிடம் வலுப்பெற்றிருப்பதே இதற்குக் காரணமாகும். இன்னொரு காரணம், இனரீதியாகவே எதையும் அளவிடுவதும் அணுகுவதுமாகும். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடுகள் எதுவுமே கிடையாது. இதன் திரண்ட வடிவமே நிலைமாறுகாலகட்டச் செயற்பாடுகள் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டமையாகும்.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்திலிருந்து நிலைமாறுகாலகட்ட நீதிச் செயற்பாடுகளைப் பற்றிப் பேசப்படுகிறது. ஒவ்வோராண்டும் இதை வற்புறுத்துகிறது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம். அடிக்கடி இதைப்பற்றிப் பிரஸ்தாபிக்கின்றன வலுமிக்க நாடுகள். ஆனால் இலங்கை அரசோ இதைப் பற்றிப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் காலம் கடத்தி வருகிறது.

நல்லாட்சி அரசாங்கம் ராஜபக்ஸக்களின் மந்தத்தனத்தையும் இனவாத ஆட்சியையும் கண்டித்துக்கொண்டு ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்த அரசாங்கம் தன்னுடைய வேலைத்திட்டங்களின் மூலமாக தன்னை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை அது. பதிலாக இங்கும் கட்சி நலன் அரசியல் சிந்தனையே மேலோங்கியது. “நிலைமாறுகாலகட்ட நீதிச் செயற்பாடுகள் சிங்கள மக்களின் மனதில் தவறான விளக்கத்தை ஏற்படுத்தி விடும். நிலைமாறு கால கட்டச் செயற்பாடுகள் சிங்கள மக்களுக்கும் இலங்கைத்தீவுக்கும் பாதகமானவை” என்ற பிம்பத்தை எதிர்த்தரப்புகள் உருவாக்கி விடும் என்ற அச்சத்தில் நல்லாட்சி அரசாங்கமும் தடுமாறத் தொடங்கியது.

அத்துடன், இயல்பாகவே இந்த ஆட்சியில் பங்கு வகிக்கும் ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இனவாதக் கட்சிகளாக இருப்பதால் இவை அதைக் கடந்து புதிதாக சிந்திக்க முற்படவில்லை. அத்தகைய புதிய பண்பு இவற்றிடம் உருவாகவும் இல்லை. செறிவாகச் சொல்வதென்றால், போரின் முடிவுக்குப் பிறகான அரசியலை முன்னெடுப்பதற்கு இலங்கைத்தீவில் எந்தத் தரப்பும் முற்படவில்லை. இதில் எல்லாக் கட்சிகளுக்கும் பொறுப்புண்டு. எல்லாச் சமூகத்தினரும் இதிலிருந்து தப்ப முடியாது.
ஆனாலும் அரசுக்கும் சிங்களப் பெரும்பான்மையினருக்குமே இதில் கூடுதலான பொறுப்பிருக்கிறது. ஆட்சி அதிகாரத்துடன் பெரும்பான்மைச் சமூகத்தினராகவும் போரில் வெற்றி பெற்ற தரப்பாகவும் சிங்களத் தரப்பினர் இருப்பதால், அவர்களுக்கே அதிக பொறுப்புண்டு. 

இதை கடந்த வாரங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சர்வதேச சமூகத்தினர் புலப்படுத்தியுள்ளனர். கண்டி வன்முறைச் சம்பவங்களைப் பற்றி பிரதமருடன் பேசிய அனைத்துத் தரப்பினரும் சிங்களத் தரப்பினரைக் குறித்தே தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால்தான் கண்டிச் சம்பவங்களுக்காக நாம் (சிங்களச் சமூகத்தினர்) பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். வெளியே இந்த வன்முறையையிட்டு எந்த நியாயத்தையும் சொல்ல முடியாமலிருக்கிறோம் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஆகவே ஏறக்குறைய இனியும் பொறுப்புக் கூறுதலில் இருந்தும் நிலைமாறுகாலகட்ட நீதிச் செயற்பாடுகளில் இருந்தும் அரசாங்கமும் சிங்களத்தரப்பும் வழுகிச் செல்ல முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், இது எந்த நேரத்திலும் தளர்வடையக் கூடும். அரசியல் நிலைமைகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவை எந்த நேரத்திலும் எந்த வடிவத்தையும் எடுக்கலாம்.

பொருத்தமான சந்தர்ப்பங்கள் வரும்போது அதைக் கெட்டியாகப் பிடித்து நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை செயலாக்குவதிலேயே அரசியல் வெற்றிகள் ஏற்படும். இதையே பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். ஆம், இது தனியே ஜெனிவாவுக்குக் காவடி எடுப்பதுடன் மட்டும் முடிந்து விடும் காரியமல்ல. அதற்கும் அப்பால், வாய்ப்புகளைச் செயலுருவாக்குதில் பெறவேண்டிய அரசியல் செயற்பாடாகும்.     

Comments