மனிதம் சாகவில்லை | தினகரன் வாரமஞ்சரி

மனிதம் சாகவில்லை

ஹோட்டல் மீள திறக்கப்பட்டபோது

மர்லின் மரிக்கார்

லங்கையில் பள்ளிவாசல்களையும் முஸ்லிம்களின் வியாபார நிலையங்களையும், சொத்துக்களையும் இலக்கு வைக்கும் செயற்பாடுகள் 2012ஆம் ஆண்டின் பின்னர் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலைமை முஸ்லிம்களை மாத்திரமல்லாமல் அமைதியையும் சமாதானத்தையும், சக வாழ்வையும், நாட்டின் சுபீட்சத்தையும் விரும்பும் சகலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.  

இவ்வாறான நிலையில் கடந்த (2018) பெப்ரவரி மாத இறுதியில் அம்பாறையிலும், மார்ச் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் திகன, தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், சொத்துக்கள் மீதும் இலக்கு வைத்து தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இதன் விளைவாக கண்டி மாவட்டம் உட்பட முழுநாட்டிலிருந்தும் 445 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 423 முறைப்பாடுகள் கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டது என்றும், இக்காலப்பகுதியில் மத வழிபாட்டுதலங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடெங்கிலிருந்தும் 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 19 முறைப்பாடுகள் கண்டி மாவட்டத்திலிருந்து கிடைத்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகத்துறைப் பேச்சாளர் ருவன் குணசேகர கடந்த 13 ஆம் திகதி நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திக்கின்றார்.  

அதேநேரம் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளன. அத்தோடு நாட்டின் வேறு சில பிரதேசங்களிலும் சிற்சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இச்சம்பவங்கள் முஸ்லிம்களை அச்சம் பீதிக்கும் மாத்திரமல்லாமல் பெரும் கவலைக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளன.

பல நூற்றாண்டுகளாக இந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற நாம் இந்நாட்டுக்கோ, நாட்டின் இறைமைக்கோ அணுவளவு கூட குந்தகம் விளைவிக்காதவர்கள். அதேநேரம் நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக ஆரம்ப காலம் முதல் பெரும்பான்யினரோடு இணைந்தே போராடியுள்ளோம். அத்தோடு நாட்டின் சுபீட்சத்திற்கும் ஆரம்ப காலம் முதல் சகல வழிகளிலும் பங்களிப்புக்களை நல்கி வருகின்றோம். இருந்தும் இப்போது பள்ளிவாசல்களும் எமது சொத்துக்களும் இலக்கு வைக்கப்ட்டுள்ளனவே. ஏற்கனவே தர்காநகர், அளுத்கம, பேருவளை, அதன் பின்னர் கிந்தோட்டை, தற்போது அம்பாறை, திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்கள் என்றபடி திட்டமிட்ட அடிப்படையிலான தாக்குதல்கள் நடாத்தப்பட்டு அழிவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலைமை நீடித்தால் எம் நிலை என்னவாவது என்று முஸ்லிம்கள் வேதனையால் புழுங்கிப் போயுள்ளனர்.  

உண்மையில் முன்னொரு போதுமே இல்லாத வகையில் அண்மைக் காலமாகத் தான் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் கலவரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு முஸ்லிம்கள் தொடர்பில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் திட்டமிட்ட அடிப்படையில் பரப்பப்படுகின்ற தவறானதும் பிழையானதுமான வதந்திகள் தான் அடிப்படைக் காரணங்களாக உள்ளன. ஆனால் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டுக்கு இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.  

ஏற்கனவே 30 வருட யுத்தத்திற்கு முகம் கொடுத்து சொல்லண்ணா வேதனைகளைச் சுமந்துள்ள இந்நாடு இவ்வாறான அழிவுகர நடவடிக்கைகளை இனியும் ஏற்றுக் கொள்ளவும் அது தயாரில்லை. அதன் காரணத்தினால் இந்நாட்டில் இனங்கள் மத்தியில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேலும் விரிவான அடிப்படையில் வலுவாக முன்னெடுக்க வேண்டும். அதன் அவசியத்தை அம்பாறை, திகன, தெல்தெனியா உட்பட கண்டி மாவட்ட சம்பவங்கள் பலமாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. 

சகவாழ்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்து வருகின்றது. இருந்த போதிலும் அச்செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள இதேநேரம் இச்செயற்பாடுகளில் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் உட்பட சகல மட்டப் பொது மக்களும் பங்குபற்ற வேண்டிய தேவையும் தோற்றம் பெற்றிருக்கின்றது. சகவாழ்வு மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்களைப் பரவலாக்க வேண்டிய தேவை அதிகரித்துக் காணப்படுகின்ற சூழலில் ஒரு புறம் அழிவுகர நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ள போதிலும் சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் முன்மாதிரி மிக்க நிகழ்வுகளும் இடம்பெறவே செய்திருக்கின்றன. அவை இந்நாட்டு பெரும்பான்மை சமூகம் முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிரானவை அல்ல என்ற நல்ல செய்தியைச் சொல்லி வைத்திருக்கின்றன. இதன்படி ஒரு சிலரின் காழ்ப்புணர்வு மற்றும் அற்ப நலன்களுக்காகவே பள்ளிவாசல்களும், முஸ்லிம்களின் சொத்துக்களும் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகின்றது. 

தெல்தெனிய, கோமரகொட விகாரையில் 

அந்தவகையில் மார்ச் 04 ஆம் திகதி திகன, தெல்தெனிய முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட காட்டுத்தர்பார் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதனால் அருகிலுள்ள கோமகொட கிராமத்தில் வசிக்கும் சில முஸ்லிம் குடும்பங்கள் தம் பிள்ளைகள் சகிதம் அங்குள்ள விகாரைக்கு இடம்பெயர்ந்து சென்று தஞ்சம் கோரினர். முஸ்லிம் குடும்பங்கள் விகாரைக்கு வருகை தந்திருந்ததை அவதானித்த விகாராதிபதி கஹகல தம்மானந்த தேரர், வந்திருந்த முஸ்லிம்களை இன்முகத்தோடு வரவேற்று, அவர்களைப் பன்சலை மண்டபத்தில் தங்கி இருக்க ஏற்பாடு செய்தார். அத்தோடு அவர்களுக்கு உடனடியாக தேனீரும், பிஸ்கட்டும் வழங்கி உபசரித்தார். ஆனால் இக்குடும்பங்களுக்கு பசியை விடவும் பாதுகாப்பு தேவை, மரண பயம் இருப்பதை உணர்ந்து கொண்ட தேரர் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களுக்கு தங்கி இருப்பதற்கான இடத்தை விகாரையில் வழங்கியதோடு அவர்களுக்கு பாய், தலையணை உட்பட ஏனைய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

அத்தோடு கிராமத்தைச் சேர்ந்த சில பௌத்த சகோதரர்களை உடனடியாக வரவழைத்து, 'இங்கு வாழும் எவரும் கலவரத்தில் பங்கு கொள்ளக் கூடாது. நாங்கள் யாவரும் மனிதர்களே. சிங்களவர்கள் முஸ்லிம்களைத் தாக்குகின்றார்கள் என்று முஸ்லிம்கள் இங்கு தஞ்சம் கோரி வந்துள்ளனர். அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதற்கேற்ப அக்கிராம முஸ்லிம்கள் மீது எதுவித வன்முறையும் கட்டவிழ்த்து விடப்படவில்லை.
 
வத்துரம்ப தம்மானந்த தேரரின் ஏற்பாடு 

இதேவேளை இக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பேராதனையில் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தெஹிகம, முறுத்தலாவ, குருகம பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்திற்கும், பீதிக்கும் உள்ளாகினர். இதனை அறிந்த நெல்லிகம பௌத்த மத்திய நிலையத்தின் ஸ்தாபகர் வத்துரம்ப தம்மானந்த தேரர் சில பௌத்த தேரர்களையும், சிங்கள வாலிபர்களையும் இணைத்துக் கொண்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகக் களத்தில் இறங்கினார். இது தொடர்பில் பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவித்த தம்மானந்த தேரர், 'இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் மீது இனவாதிகள் தாக்குதல் நடாத்துவதற்கு இக்காலப்பகுதியில் நான்கு சந்தர்ப்பங்களில் முயற்சி செய்தனர். அம்முயற்சிகளை நாம் முறியடித்தோம். இங்கு 14, 15 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுக்கு நாம் பாதுகாப்பு வழங்கினோம். முஸ்லிம்களுக்கும் எவ்வித பாதிப்பு இடம்பெறவும் இடமளிக்கவில்லை. பெரும்பான்மையினரின் பொறுப்பு சிறுபான்மையினரைப் பாதுகாப்பதே' என்பது தான் எனது கருத்து. அதற்கு ஏற்பவே நாம் செயற்பட்டோம்' என்றார்.  

மீவதுர வஜிர நாயக்க தேரரின் மனித நேயம்


மேலும் இக்கலவரத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டதிலுள்ள உடுநுவர தொகுதியில் நாலாபுறமும் சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்திற்கு மத்தியிலுள்ள மீவலதெனிய கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களும் அச்சம் பீதிக்கு உள்ளாகினர். இதனை அறிந்த மீவலதெனிய கபுராதெனிய டிகிரி போகஹகொட ஸ்ரீ சங்கராஜ பிரிவெனாவின் பிரதம தேரர் மீவதுர வஜிர நாயக்க தேரர், மீவலதெனிய முஸ்லிம்களை விகாரைக்கு அழைத்து 'நீங்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை. உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு. நாம் மனித நேயத்தை விரும்புபவர்கள். இவ்விகாரையுடன் முஸ்லிம்கள் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர்.  

இவ்விகாரையின் கிணற்றில் வெள்ளிக்கிழமைகளில் சிங்களவர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு செல்வதற்காகக் குளிப்பதற்கு முஸ்லிம்கள் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு நீர் தேவை என்பதற்காகவே அவ்வாறு செய்கின்றோம். எமது விகாரையின் பிக்குகள் எவராவது நோய் வாய்ப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை பெறச் செல்லும் போது சஹீத் நானாவையே விகாரைக்கு பாதுகாப்புக்காக விட்டு செல்கின்றோம் என்று குறிப்பிட்டதோடு நீங்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற நாம் பாதுகாப்பு வழங்குவோம்' என்றார்.  

ஏனைய பிரதேசங்களில் பௌத்த தேரர்கள் 

இவை மாத்திரமல்லாமல் இக்காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் வேறு பல பிரதேசங்களிலும் பள்ளிவாசல்களையும், முஸ்லிம்களின் வியாபார நிலையங்களையும் பாதுகாக்கும் பணியில் பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்களும் குறிப்பாக ஆட்டோ வண்டிச் சாரதிகளும் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் கண்டி கலவரத்தைத் தொடர்ந்து கெக்கிராவ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஷமிகள் ஏதும் தீங்கு விளைவித்து விடலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில் கடந்த 8ஆம் 9 ஆம் திகதிகளில் கெக்கிராவ போதிராஜ விகாரையின் விகாராதிபதி தலைமையில் பௌத்த தேரர்கள் கெக்கிராவ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இரவு பகலாகப் பாதுகாப்பு வழங்கினர்.  
இரத்மலானையிலுள்ள பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை முடிந்தது பௌத்த தேரர்கள் முஸ்லிம்களுடன் சினேகபூர்வ நல்லெண்ணக் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். அத்தோடு அவிசாளையிலுள்ள ஒரு பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கடந்த 09 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையில் ஈடுபட பௌத்த தேரரொருவர் நேரே பள்ளிவாசலின் நுழைவாயிலில் இருந்து பாதுகாப்பு வழங்கினார். 

ஆனமடுவவில் சகவாழ்வுக்கான முன்மாதிரி  

இவை இவ்வாறிருக்க, புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ நகரிலுள்ள அல் மதீனா ஹோட்டல் கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு நாசகாரிகளால் எரித்து சாம்பலாக்கப்பட்டது. அங்கிருந்த ஒரே ஒரு முஸ்லிம் ஹோட்டல் தான் அது. அக் ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தீயை அணைக்கத் தொடங்கியது முதல் அக் ஹோட்டலை அதே இடத்தில் அதே தினம் 18 மணித்தியாலயங்களுக்குள் முழுமையாக மீளமைத்து திறந்து வைப்பதற்காக அந்நகரிலுள்ள சிங்கள மக்களும், வர்த்தக சங்கத்தினரும் முழு அர்ப்பணிப்போடு செயற்பட்டனர். இந்த ஹோட்டலுக்கு தேவையான பொருட்களையும் கூட அவர்களே பெற்று கொடுத்தனர். இந்த ஹோட்டலைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதேசத்தின் பௌத்த தேரர்கள், இராஜாங்க அமைச்சர் பாலித ரங்ககே பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் பிரயங்கர ஜயரட்ன உட்பட பொலிஸ் உயரதிகாரிகளும், பிரதேச மக்களும் கலந்து கொண்டனர். 

இவ்வாறு ஒரு முன்னுதாரண நிகழ்வு முற்றிலும் சிங்கள பௌத்த மக்கள் வாழும் ஆனமடுவ நகரில் எவ்வாறு நிகழ்ந்தது. அது முற்றிலும் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வு. ஆம். இந்த ஹோட்டலின் உரிமையாளர் ஆனமடுவ நகரிலிருந்து 16 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள சங்கட்டிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் இங்கு 29 வருடங்களாக இந்த ஹோட்டலை நடாத்தி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் தினமும் வியாபாரம் முடிந்ததும் வீடு சென்று விடுபவராவார்.  
இருந்த போதிலும் இந்த ஹோட்டல் உரிமையாளர் அந்த நகரிலுள்ள எல்லா சிங்கள மக்களோடும் மிகவும் நெருக்கமான சினேகபூர்வ உறவைப் பேணி வரக் கூடியவராக இருந்திருக்கின்றார். இவர் ஒரு முஸ்லிமாக இருந்த போதிலும் அவரை தங்களில் ஒருவராகவே பௌத்த சகோதரர்கள் நோக்கியுள்ளனர். அதன் வெளிப்பாடு தான் இந்தப் பங்களிப்பு. இந்நாசகார செயலினால் முஸ்லிம் பாதிக்கப்பட்ட போது அவருக்கு சிங்கள சகோதரர்கள் கை கொடுத்திருக்கின்றார்கள். இங்கு மனித நேயமும், மனிதாபிமானமும் தான் மேலோங்கி இருந்துள்ளது. இந்நாட்டில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப இது நல்ல முன்னுதாரணமாகும்.  

சகவாழ்வின் தேவை 

ஆக இந்த நிகழ்வுகள் அனைத்துமே திகன, தெல்தெனிய முஸ்லிம்களுக்கு எதிரான காட்டுத்தர்பாரில் வெளிப்பட்ட மனித நேயமும் மனிதாபிமானமும் ஆகும். இவை இந்நாட்டில் மனிதாபிமானம் சாகவில்லை என்பதை எடுத்துக் காட்டி நிற்கின்றன.
 
இவ்வாறான இன, மதம் கடந்த மனித நேயமும் மனிதாபிமானமும் தான் இந்நாட்டிற்கு உடனடித் தேவையாக உள்ளது. இதனைக் கட்டியெழுப்புவதற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் அப்போது தான் இனவாதத்தையும். மதவாதத்தையும் தோற்றகடிக்கக் கூடியதாக இருக்கும். இதைவிடுத்து தாம் உண்டு, தம் பாடு உண்டு என்ற படி மூடுண்ட சமூக நிலையில் இருந்தால் இனவாதமும் மதவாமும் பலம் பெறவே வழிவகுக்கும். 

அம்பாறை திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு பின்னர் முஸ்லிம்களுக்காக பல பௌத்த தேரர்களும், அரசியல் வாதிகளும், சிவில் அமைப்புக்களும் குரல் கொடுத்துள்ளனர். அவர்களுடனான நல்லெண்ண உறவை முஸ்லிம்கள் கட்டியெழுப்ப வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் தாம் வாழும் பிரதேசத்திலுள்ள இதர சமூகங்களுடன் சகவாழ்வையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவது மிகவும் அவசியமாது. இதனை கிராம மட்டம் முதல் முன்னெடுக்க வேண்டும். அப்போது மதவாதமோ, இனவாதமோ தோற்றம் பெற வழி இருக்காது. 

எந்த சமூகத்திலும் விரல்விட்டெண்ணக் கூடியவர்கள் தான் இன மதவாதிகளாக இருப்பர். ஆனால் மனித நேயமும் மனிதாபிமானமும் நிறைந்தவர்கள் தான் எல்லா சமூகங்களிலும் அதிகமுள்ளனர். அவர்களுடன் சகவாழ்வையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். மனித நேயமும், மனிதாபிமானமும் இந்நாட்டை ஆளும் நிலை ஏற்படும் போது இன மதவாதிகளையும் கூட நல்லிணக்கத்தின் மூலம் வெற்றி கொள்ளக் கூடியதாக இருக்கும்.  
கடந்த 30, 40 வருட காலப்பகுதியில் முஸ்லிம்கள் இதர சமூகங்களுடனான நல்லுறவில் இருந்து தூரமாகி ஒரு மூடுண்ட சமூக நிலைக்கு சென்றுள்ளனர் என்ற ஒரு தோற்றப்பாடும் காணப்படுகின்றது.  

ஆகவே இந்த நிலைமையைத் தோல்வியுறச் செய்வதற்கான ஒரே வழி இதர சமூகங்களுடன் நெருக்கமான உறவைப் பேணி சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் வலுவான முறையில் கட்டியெழுப்புவதன் மூலமே முடியும். ஏனெனில் இந்நாட்டில் மனிதம் இன்னும் சாகவில்லை. அதனை செழிப்பாக தளைத்தோங்கச் செய்ய வேண்டும். அதுவே இன்றைய உடனடித் தேவை.

Comments