காடுகளாகி வரும் தேயிலை மலைகளும் கண்டுகொள்ளாத பாவனையில் சங்க அரசியல் தலைமைகளும் | தினகரன் வாரமஞ்சரி

காடுகளாகி வரும் தேயிலை மலைகளும் கண்டுகொள்ளாத பாவனையில் சங்க அரசியல் தலைமைகளும்

பன். பாலா

கடந்த வாரம் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் விடுத்திருந்த அறிக்கை தொடர்பிலான எமது பார்வையை இங்கு குறிப்பிட்டிருந்தோம். இதனையடுத்து நண்பர் ஒருவர் பெருந்தோட்டத்துறை நிர்வாக சீர்கேடுகள் பற்றிய முக்கிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். இக்கட்டுரை அந்த விடயங்களையும் தொட்டுச் செல்கின்றது. 
1972 இல் பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனி நிர்வாகங்களிடம் கையளிக்கப்பட்டன. அப்போதிருந்தே இத்துறையின் வீழ்ச்சி ஆரம்பமானது என்பதே பொதுவாக பதிவாக இருக்கின்றது. இதன் ஒரு  கிடுக்குப்பிடியாக தோட்ட மக்களின் வேதனம், நலன் தேவைகள் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் ஒரு கபட நாடகம் அரங்கேற்றம் கண்டது. இவ்வொப்பந்தத்தில் தொழிலாளர்களை தொழில் ரீதியாக அழுத்தத்துக்கு ஆளாக்கக்கூடிய சங்கதிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.  

வருடாவருடம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பல கைவிடப்பட்டன. சுண்ணாம்பு பக்கட், பிரஷ், நீலம் போன்ற பண்டிகைக்கால இலவசங்கள் நிறுத்தப்பட்டன. தொழிலாளர்களது குடியிருப்புகளுக்கு கூரைத் தகரம் மாற்றும் வழக்கம் கூட கைவிடப்பட்டது. தோட்டப்பாதைகள் கவனிக்கப்படாமல் மிகமோசமான நிலைக்கு விடப்பட்டுள்ளன. முன்னைய காலங்களில் நடந்த முக்கிய பராமரிப்பு வேலைகள் கூட நிறுத்தப்பட்டுள்ளன. புல்லுக்கு மருந்து அடிப்பது, காண் வெட்டுவது, முள்ளுக்குத்துவது போன்றவை கவனத்துக்கு எடுக்கப்படுவதில்லை. இன்று தேயிலை மலைகள் அனைத்துமே காடு மண்டிக்கிடக்கின்றன.  தாராளமாக சிறுத்தைகள் சஞ்சாரம் செய்யும் பிரதேசங்களாக மலையகம் மாறிக்கொண்டிருக்கின்றது.

தோட்ட வைத்தியசாலைகள் கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த வைத்தியர்கள் இல்லை, மருந்துகள் இல்லை, அம்பியூலன்ஸ் வசதிகள் இல்லை, ஆங்கிலேய காலத்தில் மூவேளை கொழுந்து நிறுப்புகள் இடம்பெற்றன. அவ்வாறு நிறுக்கப்படும் கொழுந்து அவ்வப்போதே தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்நடைமுறை அரச நிறுவனங்களின் பொறுப்பில் தோட்ட நிர்வாகங்கள் இருந்தபோது  சிறிது  சிறிதாக மாற்றமடைய தொடங்கின. தற்போது கொழுந்து எடுத்துச் செல்வதென்பது பகல், மாலை என இருதடவையாகவோ அல்லது ஒட்டுமொத்தமாக மாலைவேளைகளில் மட்டும் ஒரே தடைவையாகவோ இடம் பெறுகின்றது. இதற்கு தனியார்துறை வாகனங்களைப் பயன்படுத்துவதிலேயே சில தோட்ட நிர்வாகங்கள் அக்கறை காட்டுகின்றன. 

பல்வேறு காரணங்களைக்காட்டி பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் சுமார் 50 வரையிலான தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. சில தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து பெறுமதியான இயந்திரங்கள். உபகரணங்கள் நிர்வாகங்களால் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. இவைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி யாருக்குமே தெரியாது. மரங்கள் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே கம்பனி பல தோட்டங்களை நிர்வாகிப்பதால் கேந்திரமாக ஒரு தொழிற்சாலையை மட்டும் பயன்படுத்திக் கொண்டு ஏனையவைகளை மூடிவிடுகின்றன. இதனால் நிர்வாக செலவு குறைவதால் கம்பனிகளுக்கு பெருத்த லாபம் கிடைக்கின்றது. ஆயினும் உற்பத்தி திறன் வீழ்ச்சி, ஆளணிப் பற்றாக்குறை, உற்பத்திக்கான செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களாலேயே தொழிற்சாலைகள் மூடவேண்டி நேர்ந்ததாகவே கம்பனித் தரப்பு சொல்லிக் கொள்கின்றது. 

ஹாலிஎல பகுதியில் மூடப்பட்டுள்ள ஒரு தொழிற்சாலையை இராணுவத் தேவைக்காக பயன்படுத்த முனைப்பு காட்டப்பட்டது. தொழிற்சாலைகளை மீள் திறக்க வைப்பதில் தொழிற்சங்கங்களோ அரசாங்கமோ அக்கறை காட்டுவதில்லை. தொழிலாளர்களின் போராட்டங்களும் வெற்றியளிப்பதாயில்லை. இதனால் தொழிற்சாலைகளில் பணியாற்றிய உத்தியோகத்தர்களும் வேலை இழப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். விருப்பமின்றியே வேறு வேலைகளில் ஈடுபட வேண்டிய நிலைமை. 

அண்மைக்காலமாக தேயிலைப் பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் முக்கியத்துவம் உணரப்படாத நிலையில் மாற்றுப் பயிர்ச்செய்கை பற்றிய கவனமெடுப்புத் தொடர்கின்றது. இறப்பர், கறுவா, கமுகு, முள்ளுத்தேங்காய் போன்றப் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேயிலைத் தொழிற்துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் காட்டும் அக்கறையை அத்துறையை மீள் கட்டியெழுப்பும் முயற்சிகளில் காட்டுவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. பெண் தொழிலாளர்களுக்கு கூடுதலான வேலை வழங்க நிர்ப்பந்தித்தல், வேலை நாட்களை குறைத்தல், பிற தோட்டத் தொழிலாளர்களையும் கொத்தணி முறையில் தொழிலுக்கு இணைத்தல், கைக்காசு முறையில் வேலைக்கு அமர்த்தல், ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தல் போன்ற ஏற்பாடுகள் மூலம் செலவீனத்தை குறைத்து ஆதாயத்தை அதிகரிக்கும் உபாயத்தை கம்பனி தரப்பு கையாள்வதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இன்று தேயிலைக் கைத்தொழில் என்பது இப்போது பெருந்தோட்டங்களை மையமாக கொண்டதாக காணப்படவில்லை என்கிறார் ஆய்வாளர் கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ். ஏனெனில் உற்பத்திச் செய்யப்படும் தேயிலையில் 75 வீதமானமை இன்று கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களில் உள்ள சிறு தோட்ட உரிமையாளர்களிடம் இருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றன. சுமார் 4,00,000 சிறு தோட்ட உரிமையாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளதையும் அவர் பதிவிடுகிறாரர்.  
இதேநேரம் பெருந்தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் வரும் காணிகளில் சுமார் 60 சதவீதமான தேயிலைச் செடிகள் 150 வருடகால பழமையானது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது மீள் பயிர்ச்செய்கையைக் கம்பனிகள் கைவிட்டு விட்டன. இந்த போக்கு தொடருமானால் அடுத்து வரும் 20 வருடங்களில் பெருந்தோட்டக் கம்பனிகள் தேயிலை பயிர்ச்செய்கை பராமரிப்பை முற்றாகக் கைவிட்டு விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இன்று பெருந்தோட்டக் கம்பனிகளின் பராமரிப்பின் கீழ் வரும் காணிகளின் எண்ணிக்கை 1,18,000 ஹெக்டயர் ஆகும். இவற்றுள் தேயிலை பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படும் காணிகளின் அளவு 85,000 ஹெக்டயர் மட்டுமே. எஞ்சிய 33,000 ஹெக்டயர் காணிகள் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்காணிகளை தொழிலாளர்களது பயன்பாட்டிற்கு விடுவதற்கு கம்பனித் தரப்பு தயாரில்லை. வீடமைப்புத் தேவைகளுக்காக பாதுகாப்பான இடங்களில் காணிகளை ஒதக்குவதில் கம்பனித்தரப்பு போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்பதை மலையக தலைமைகளே அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே நேரம் வகை தொகையின்றி பெருந்தோட்டக் காணிகள் கிராம மக்களுக்கான வீடமைப்பு, மற்றும் அரச கட்டுமாண தேவைகளுக்காக கையகப்படுத்துவது சர்வ சாதாரணமாகி விட்டது. கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் கராம்பு, ஏலம் பயிரிடல் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் என்று பயன் படுத்தப்படுகின்றன. இதனால் இம்மக்களின் வாழ்வியலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடிந்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை நலிவடைந்து செல்லும் நிலையில் காடுகளுக்கு மத்தியில் மலையக மக்கள் தொடர்ந்தும் வாழவேண்டி நேரிடுமா என்ற அச்சமும் மேலோங்கி வருகின்றது. தோட்டப் பயிர்ச்செய்கை அழிந்துபோகும் பட்சத்தில் பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்தும் அங்குதான் வாழ வேண்டுமா என்ற கேள்வியும் எழவே செய்கின்றது. அதே போது இவர்கள் புலம் பெயரக்கூடிய ஏதுக்களும் காணப்படவில்லை. உண்மையில் ஆங்கிலேயர் வசமிருந்து பெருந்தோட்டங்கள் தேசிய மயப்படுத்தப்பட்டபோதே இங்கு வாழ் மக்களின் எதிர்காலம் குறித்து மலையகத் தலைமைகள் தொலைநோக்கோடு சிந்தித்திருந்திருக்க வேண்டும். அனால் அது அவ்வாறு நிகழவில்லை. தோட்டக் குடியிருப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளோ உரிமைகளோ பெற்றுத்தராதது தலைமைகள் விட்ட தவறு. அதன் பலாபலன்களை இன்று அச்சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

வீட்டுப்பிரச்சினைக்கு ஒரு புறம் தீர்வு எட்ட ஆரம்பித்திருக்கும் நிலையில் வாழ்வாதாரத்துக்கான வழிவகைகள் கேள்விக் குறியாகி வருகின்றன.  

பெருந்தோட்டத் துறைக்குப் புத்துயிர் அளித்து வருவதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூறியிருந்தாலும் கூட அங்கு வாழ்வோரின் நிலைமையிலும் வாழ்வாதாரத்திலும் காலத்துக்கேற்ற மாற்றமோ அபிவிருத்தியோ காணப்பட முடியாமலிருக்கின்றது. தவிர குறைபாடுகளுக்கு எதிராக குரல் எழுப்பப்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே காடாய் கிடக்கும் நிலங்களை வெளியார் உற்பத்தி முறைமை என்ற பெயரில் தொழிலாளரின் தலையில் கட்டிவைக்க அவை முனைகின்றதோ என்ற ஐயமும் தோன்றவே செய்கின்றது.

Comments