அரசியலில் வன்முறை கலாசாரம் | தினகரன் வாரமஞ்சரி

அரசியலில் வன்முறை கலாசாரம்

விசு கருணாநிதி

 

அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டு மக்கள் மதிப்பும் மரியாதையும் வழங்கவேண்டுமேயொழிய அச்சம்கொண்டு அடங்கி ஒடுங்கக் கூடாது

 

அரசியல் என்பது சமுதாய வாழ்க்கைக்கு அமைதியைத் தருவது; அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் அல்லது கொள்கை என்பது மேதைகளின் கருத்து. உண்மையும் அதுதான். ஆனால், இன்று கல்வி கற்றோர் மத்தியில் அரசியல் என்பது சாக்கடை என்று வரைவிலக்கணப்படுத்தும் நிலைக்குச் சென்றிருக்கிறது இலங்கை அரசியல்.

அரசியல் என்பது வாழும் முறை அல்லது வாழ்க்ைக முறை என்று கற்றுக்கொண்டிருந்தாலும் இன்று அரசியல் என்றதுமே அது வன்முறையாளர்களின் வாழ்க்ைக முறை என்றாகிவிட்டிருக்கிறது. இதற்குக் காரணம், இன்று அரசியலில் ஈடுபட்டிருப்போரின் செயற்பாடுகள், வன்முறை தெரியாதவர் அல்லது அடாவடித்தனங்களுக்குப் பழக்கப்படாதவர்களால் இன்று அரசியலில் நிலைக்க முடியாது என்ற ஒரு தோற்றப்பாடு சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளமை விசனத்திற்குரியது. 

சமுதாயத்தில் பலர் கூடி வாழ்வதற்கும் பொருளியல் ஒழுங்கு முறைகளுக்கும் அரசியலே வழிவகுக்கிறது. அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி வாழ்வதை உறுதிப்படுத்தவே அரசியல் தோன்றியது. சிறந்த அரசியல் நிலவும் நாட்டில் ஒழுங்கும் நிலவும்; வாழ்க்ைகயை வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் எளிதில் கிடைக்கும்; கிடைக்க வேண்டும்! அறிவுத்துறை மேம்படும்; பகை ஒடுங்கிப் பண்பாடு ஓங்கிடும். ஆனால், இன்று இலங்கையில் நடப்பது என்ன? 

அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பவரை அரசியல்வாதி என்கிறோம். அதாவது கட்சித் தொண்டர்கள், தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கு அரசியல்வாதி என்ற பதம், அடையாளம் பொருந்தும். ஆனால், சேவை நோக்கத்தில் அரசியல் வாழ்வில் முழுமையாக ஈடுபட்டவர்களை அரசியல்வாதி என்று அழைப்பதுதான் சாலப்பொருந்தும். அதனால்தான், அரசியல்வாதிகளின் குறிப்பாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் சமூகத்திற்கு இன்றியமையாதவையாகின்றன. 
இந்த நிலையில், நாட்டில் எந்தவொரு சமூகமும் விரும்பித் தம்மை ஏற்றுக்ெகாள்கின்ற நிலைக்கு அரசியல்வாதிகள் தம்மைக் கட்டமைத்துக்ெகாண்டிருக்கிறார்களா? என்றால், இல்லை! என்றே பதில் வரும். அதற்கு அண்மையில் அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தைக் குறிப்பிட முடியும். 

கணவன் அரசியல்வாதி என்றால், அவரது அதிகாரம் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வந்துவிடுகிறது. இஃது அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை நீடித்து வருகிறது. 
அதிகாரம் என்பது ஜனநாயக அரசியல் முறைமையில் அரசியல் உறுதிப்பாட்டினையும், திறனையும் தீர்மானிக்கின்ற பிரதான காரணியாகவும், தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ளது. அரசை உருவாக்கியவர்கள் தமது அரசியல் கலாசாரத்துடன் அரசியல் முறைமை இணங்கிச் செல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ப அதிகாரம் வெளிப்படும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையேல் அரசியல் கலாசாரம் என்பது தொழிற்பட முடியாத ஒரு நிலைக்குச் சென்றுவிடும் என்பது நல்ல அரசியல் தலைவர்களின் கருத்து. என்றாலும் அரசியல் என்றால் என்ன என்பதைப் பற்றிய அறிவு துளியளவும் இல்லாதவர்கள் அரசியலுக்குள் பிரவேசித்துத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதுதான் மக்கள் மத்தியிலிருந்து அரசியல் அந்நியப்படுவதற்குக் காரணமாகிறது. 

அதேநேரம், இலங்கையின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அரசியலை நன்கு கற்றுணர்ந்த மேதாவிகளும் அதிகாரத்தை வரம்பு மீறிப்பயன்படுத்தி, சமூகத்தில் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் ெகாள்வதற்கு வன்முறைக் கலாசாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகும். 1956, 1971, 1977, 1980-,81,83, 87 காலப்பகுதியை மீட்டிப்பார்த்தால், அரசியலைக் கற்றுத் தேர்ந்தவர்கள் கற்றுக்குட்டிகளை வைத்து வன்முறைக் கலாசாரத்தை ஏவிவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தலைவர்களாக இருந்தவர்கள் நேரடியாக அல்லாவிட்டாலும் அவர்களுக்கென்று ஒரு கூலிப்படையை வைத்து இயக்கி வந்திருக்கிறார்கள். அவ்வாறு கூலிக்காகச் செயற்பட்டவர்கள், தலைவர்களை அடியொற்றியவர்களாகப் பின்னாளில் அரசியலில் கோலோச்சும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

அன்றைய வரலாறு இலங்கையில் இன்னமும் தொடர்கதையாகி வருவது சாபக்ேகடான நிலவரம் என்பது ஸ்ரீமான் பொதுசனத்தின் கருத்து. இந்தத் துரதிர்ஷ்டமான வரலாறு 1978ஆம் ஆண்டிற்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாரத் தேர்தல் முறைமையுடன் வலுவடைந்து வளர்ச்சியடைந்து வந்துவிட்டது. அதன் காரணமாகவே வலியவர் வெல்ல எளியவர் தோற்கும் நிலை ஏற்பட்டது. அஃது எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்றால், கணவனின் அரசியல் வலிமையை மனைவி அரங்கேற்றும் படுபாதக நிலை வரை முன்னேற்றமடைந்திருக்கின்றது. 

பொதுவாக அரசியலில் சொந்தபந்தங்களுக்குப் பதவிகளையும் வாய்ப்புகளையும் வழங்கும் கலாசாரம் (Nepotism) இலங்கையில் மாத்திரமன்றி வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியமாகியிருக்கிறது. என்றாலும், இலங்கையைப் போன்று உறவினரின் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்ெகாள்ளும் போக்கு அங்கு அரிது. 

ஒரு மாகாண சபை உறுப்பினரின் சொகுசு வாகனம் வீதியை மறித்துக்ெகாண்டு தரித்திருக்கிறது. அதற்குப் பின்னால் வரும் பஸ் வண்டி வழிகேட்டு ஒலியெழுப்புகிறது. விளைவு? அந்த பஸ்ஸின் சாரதிக்கு அடி, உதை! அதை நையப்புடைப்பு என்றே சொல்ல வேண்டும். கணவர் மாகாண சபை உறுப்பினர். அவரது மெய்க்காப்புத் துப்பாக்கி மனைவியின் கரத்தில். அதனையும் இலாவகமாகப் பிடித்துக்ெகாண்டு பஸ் சாரதியைப் புரட்டி எடுக்கிறார் ஒரு பெண்! இஃது அரசியலுக்கு மட்டுமல்ல, முழு ஆணினத்திற்கே அவமானம்! 

அரசியலில் அவமானத்தைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? 

அரசியல்வாதி என்றால், அடாவடித்தனம் தெரிந்திருக்க வேண்டும். அல்லது அவரைச் சூழவுள்ளவர்களுக்காவது அது தெரிந்திருக்க வேண்டும். இது நாட்டின் எல்லாப் பகுதியிலும் எல்லாச் சமூகத்தினர் மத்தியிலும் பீடித்துள்ள ஒரு நோய்! மனித நேயத்துடனும் மாண்புடனும் செயற்பட்டால், அந்த அரசியல்வாதியை நோஞ்சான் என்று பட்டம் சூட்டும் சமூகம், அதே அரசியல்வாதி தனது பலத்தைக் காண்பித்தால், மறுவலத்தில் குறைகூறும். இதன் உள்ளார்த்தம் எந்தச் சமூகமும் வன்முறைக் கலாசாரத்தை விரும்பவில்லை என்பதுதான்.
 
மக்கள் எதிர்பார்ப்பது வன்முறையை அன்றிச் செயல்வீரத்தை; ஆளுமையை. அந்தச் செயல் வீரர்கள்தான் இற்றைவரை மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறார்கள். வன்முறையாளர்களைப் போற்றிப் புகழும் சமுகம் இன்றில்லை; மாறாக சமூகம் ஆளுமை மிகுந்த அரசியல்வாதிகளையே எதிர்பார்க்கின்றது, சண்டியர்களை அல்ல. அரசியல்வாதிகள் தமது ஆளுமையை வெளிக்காட்டுவதாக எண்ணிக்ெகாண்டு, வன்முறையைக் கையாள்கிறார்கள்; சண்டித்தனம் புரிகிறார்கள்.  இந்த வேறுபாட்டைச் சமூகம் கண்டுகொண்டுள்ள அளவிற்கு அரசியல்வாதிகளுக்குத் தெளிவில்லை. ஆளுமை வேறு சண்டித்தனம் வேறு என்பதை அரசியல்வாதிகள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்பது சமூகத்தின் குற்றச்சாட்டு! 

அதிபரை முழந்தாளிட வைப்பது, மன்னிப்புக்ேகாரச் செய்வது, கிராம சேவையாளரை மரத்தில் கட்டிவைப்பது, பொலிஸ் பொறுப்பதிகாரியைக் கன்னத்தில் அறைவது, அதிபரைக் கன்னத்தில் அறைவது, வெளிநாட்டவன் மனைவியைத் துஷ்பிரயோகம் செய்து கணவரைக் கொலை செய்வது, செய்தி வெளியிடாத பணிப்பாளரைத் தாக்குவது, இரவு விடுதிக்குச் சென்று பொலிஸாருடன் முரண்படுவது, தேர்தலின்போது வாக்குச் சீட்டுகளைப் பறித்தெடுப்பது, மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, துப்பாக்கிப்பிரயோகம் செய்வது, காதலித்தால் கடத்திக்ெகாண்டு செல்வது, அடியாட்களைக்ெகாண்டு கப்பம் பெறுவது, பென்னம்பெரிய தொழில் அதிபர்களை மிரட்டிப் பெருந்தொகைப் பணம் பெறுவது, வியாபாரத்தில் பங்கு கேட்பது, அழகான வீடுகளைக் கண்டால், அதனை விற்கக்ேகாருவது, காணிகளை அபகரித்துக்ெகாள்வது என அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் வளர்ந்து கொண்டே செல்கிறது. இது அண்டை நாடான இந்தியாவிலும் விதிவிலக்கல்ல.

எனவே, இந்த வன்முறைக் கலாசாரம் என்று ஒழிகிறதோ அப்போதுதான் உண்மையான அரசியல் கலாசாரம் உயிர்ப்புப்பெறும். தூய்மையான அரசியல் கலாசாரம் என்பது உறுதியான நம்பிக்கைகள், உணர்வுகள், மனோபாவங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். மக்கள் தமது அரசியல் பெறுமானங்களாகிய உரிமைகள், சுதந்திரம், தத்துவம், நீதி, சட்டமும் விதியும், பத்திரிகைச் சுதந்திரம், நீதித்துறையின் சுதந்திரம் போன்றவற்றை எவ்வாறு பொறுப்புடன் மதிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து அரசியல் கலாசாரம் பெறப்படுகின்றது. 

பொதுவாக மக்கள் தமது உணர்வுகள், செயல்கள் மூலம் இதனை வெளிப்படுத்துவார்கள். அரசியல் முறைமை ஒன்றின் வெற்றி அல்லது தோல்வியினைத் தீர்மானிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்! ஏனெனில், அவர்களின் செயற்பாடுகளைக் கண்டு மக்கள் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்க வேண்டுமேயொழிய அச்சங்கொண்டு அடங்கி ஒடுங்கும் நிலை கூடாது; அஃது அவர்களுக்கு நாகரிகமானது அல்ல. பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்கள் தம்மைக் கண்டு அஞ்சி நடக்க வேண்டும் என்ற மனப்பிரமையில் இருக்கிறார்கள்.

அதன் மூலம் ஒரு போலிக் கௌரவத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இவர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நன்கு புரிந்து கொண்டுள்ள வாக்காளர்கள், இப்போதெல்லாம் வேட்பாளர்களைப் பெரிதாகக் கருத்தில் கொள்வதில்லை என்பது கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் புலப்பட்டுள்ளது.
விசேடமாகத் தேர்தலில் தாம் விரும்பிய கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள், வெற்றிபெற்றது யார் என்பதைத் தேர்தல் முடிந்த பின்னரே அறிந்துகொண்டுள்ளனர். வெற்றியின் பின்னர் நன்றி தெரிவிக்கச் சென்றபோதுதான் வெற்றிபெற்றது இன்னாரென்று வாக்காளர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. 

ஆதலால், நிறைவாக மக்கள் விரும்பிய கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலையைவிடவும் தாம் விரும்பும் அரசியல்வாதிக்காக அந்தக் கட்சிக்கு வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்திக்ெகாள்ள வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். அதற்கு ஏற்ற வகையில் அரசியல் செயற்பாடுகளில் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவை தற்கால அரசியல்வாதிகளுக்கு எழுந்திருக்கிறது.

இந்த இடைவெளியை நிரப்பும் அரசியல்வாதியே எதிர்காலத்தில் சிறந்த தலைவராகப் பிரகாசிப்பார்.  

Comments