நம்பிக்கையில்லா பிரேரணை | தினகரன் வாரமஞ்சரி

நம்பிக்கையில்லா பிரேரணை

விசு கருணாநிதி

பிணை முறி விவகாரம்!  நிதியமைச்சர் மாற்றம்!   அர்ஜுன் அலோசியஸ் கைது!   அர்ஜுன் மகேந்திரன் மாயம்!   நல்லாட்சி அரசாங்கத்திற்கான உடன்பாட்டைப் புதுப்பிப்பது!   அமைச்சரவையை மாற்றியமைப்பது!   பிரதமர் தொடர்வாரா, புதியவரா?  உதயங்க வீரதுங்கவை  இலங்கைக்குக் கொண்டு வருவது!   உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேற்றுப்பரபரப்பு!  

குட்டி அரசாங்கங்களுக்குத் தலைவர்களை நியமித்தல் போன்ற அரசியல் நெருக்கடிகள் தணிந்து இப்போது கடைசியாக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்னிலை வகித்துக் ெகாண்டிருக்கிறது. 

இவையெல்லாம் வீண் பரப்புரையும் பரபரப்புமாகும் என்கிறார்கள் அரசாங்கத் தரப்பினர். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்பும் ஒரே காரணத்திற்காகக் கூட்டு எதிரணியினர் இவ்வாறு வீண் பரபரப்புகளைத் தோற்றுவிக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள். அது மெய்யா, இல்லையா என்பது உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேற்றுக்குப் பின்னர் அவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதையின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

தேர்தல் நடந்தது உள்ளூராட்சி மன்றங்களுக்கு. ஆனால், அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் உள்ளவர்களே கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். அஃது ஏனென்பதற்கான சரியான காரணத்தையும் அவர்கள் சொல்லவில்லை. ஒரேயொரு காரணம்தான்! அதாவது, நல்லாட்சி அரசாங்கத்திற்கான உடன்பாடு டிசம்பர் 31உடன் நிறைவுக்கு வந்துவிட்டது. அதனால், உடன்பாட்டை ஒன்று புதுப்பிக்க வேண்டும், இல்லையேல் யாரேனும் தனித்து ஆட்சியமைக்க வேண்டும்.அதனால்தான், இரண்டு தரப்புகளில் இருந்தும் அவ்வாறு கருத்துகள் வந்தன. வெளியில் பார்த்தால், உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை கிடைக்காமை காரணம் என்ற தோற்றப்பாட்டில் கதைகள் உலாவின. அஃது அவ்வாறு உண்மையல்ல. 

உடன்படிக்ைக டிசம்பருடன் நிறைவுக்கு வந்தாலும், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கிடைக்கும் பெறுபேற்றைப் பார்த்து கூட்டு ஆட்சி ஒப்பந்தத்தை மீளவும் ஏற்படுத்திக் ெகாள்ளலாம் என்றுதான் இரண்டு தரப்பினரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்ததைப்போல் தேர்தல் முடிவுகள் அமையவில்லை. இதுதான் உண்மை.  

பின்னர் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களுக்கிடையில் பொறுப்புகளை மாற்றிக் ெகாண்டார்கள்; மாற்றப்பட்டார்கள். எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்த எதிர்மறை விளைவு எதுவுமே நிறைவேறாமல் போய்விட்டது. அதனால், உருவான தொடர் முயற்சிதான் இந்த நம்பிக்ைகயில்லாத் தீர்மானம் என்கிறது ஐக்கிய தேசிய கட்சி. இப்போது அதனைப் புரிந்துகொண்டுள்ள அந்தக் கட்சியினர், செயற்குழுவைக் கூட்டிப் பிரதமருக்கு ஆதரவான தீர்மானத்தை எடுத்துள்ளனர். அதாவது, பிரதமருக்கு எதிரான நம்பிக்ைகயில்லாப் பிரேரணையை எவ்வாறேனும் ஒன்றுபட்டுத் தோற்கடிப்பது என்பதுதான் அந்தத் தீர்மானம். அதேவேளை, கட்சியின் தலைமைப்பீடத்துடன் முரண்பட்டுக் ெகாண்டிருக்கும் தரப்பினர் கூடத் தமது ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார்கள். எனினும், கட்சி மறுசீரமைப்பை இரண்டு மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்ைகயை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். இதற்குப் பிரதமரும் செயற்குழுவும் இணங்கியிருக்கின்றது. இஃது எவ்வாறென்றால், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து வெளியே வந்து தேசிய மட்டத்தில் செயலாற்றத் தயாராகுங்கள் என்று அமைச்சர் சஜீத் பிரேமதாசவிற்குப் பிரதமர் அன்புக் கட்டளையிட்டுள்ளதன் மூலம் உணர்த்தப்பட்டிருக்கிறது.  

ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சிகளைப்பொறுத்தவரை பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே தமது ஆதரவைப் பிரதமருக்குத் தெரிவித்துள்ளன, ஒரு சிலவற்றைத் தவிர. அந்த ஒரு சில கட்சிகள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறுவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமருக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதா, எதிர்ப்பதா? என்பதைப்பற்றிச் சரியாக; தீர்க்கமாக முடிவெடுக்க முடியாமல் அவை குழம்பிப்போய் உள்ளன.  

இந்தக் குழப்பத்திற்குக் காரணம் லங்கா சுதந்திரக்கட்சியின் அறிவிப்பாகக்கூட இருக்கலாம். அவர்கள் பிரேரணையை ஆதரிப்பதாகக் கூறுகிறார்கள். சில வேளை பிரேரணை தோல்வியுற்றால், அன்றைய தினமே, நல்லாட்சி அரசாங்கத்திற்கு முடிவுகட்டப்படும் என்றும் மிரட்டுகின்றார்கள். பிரேரணையை எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்பது சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு. இதனை ஒவ்வோர் அமைச்சரும் வெவ்வேறு கோணத்தில் தமது கருத்துகளைக் கூறுகிறார்கள். இந்தக் கருத்துகள் ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றுக்குக் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கின்றன.  

இதில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் ஒரு தர்மசங்கடமான நிலை. பிரதமரை ஆதரிக்கக்கூடாது என்று சுதந்திரக்கட்சியினர் உள்ளிட்ட சிலர் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். புலம்பெயர் சமூகமா, தமிழ் மக்களா? என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முடிவெடுக்க வேண்டும் என்று அத்துரலியே ரத்தனதேரர் புத்தி கூறியுள்ளார். கூட்டமைப்பு மற்றவர்களின் சொல் கேட்டு நடக்கும் அமைப்பு இல்லை என்றாலும், இந்த விடயத்தில் அதுவும் குழம்பிப்போய்தான் இருக்கிறது. இன்னமும் அதன் குழப்பம் தெளிந்துவிட்டதாகத் தெரியவில்லை. இன்னும் சிலர், உடம்பைக் காப்பாற்றிக் ெகாள்ளுமாப்போல் பதில் அளித்திருக்கிறார்கள். அதாவது நான்காந்திகதியன்று தங்களின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.இன்னுஞ்சிலர் நாளை இரண்டாந்தகதி தெரிய வரும் என்கிறார்கள். 

இப்படி எத்தனை பரபரப்புகள் நிலவினாலும், பிரதமருக்கு எதிரான பிரேரணையை முறியடித்தே தீருவோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடமாகத் தெரிவித்திருக்கிறார்கள். பிரதமர் ரணிலுக்குப் பின்னர் அந்தப் பதவியை வகிக்கக்கூடிய ஆளுமை உள்ள எவருமே இல்லை! தனித்துவமான ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார் திருமதி ஹிருனிகா பிரேமச்சந்திர. ஒரு வகையில் அதுதான் உண்மை. சிலவேளை பிரதமர் பதவிக்கான வாய்ப்பு வேறு ஒருவருக்குச் செல்வதாக இருந்தாலும், அதனை ஏற்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று தற்போதே சில அமைச்சர்கள் தங்கள் இயலாமையை மரியாதையாக விளக்கியிருக்கிறார்கள்.  

அரசியல் ரீதியாக இந்த விடயங்களைப் பார்ப்பதற்கும் அரசியலமைப்பு ரீதியாகப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசியலமைப்பின்படி, அதாவது பத்தொன்பதாவது திருத்தத்தின்படி பிரதமருக்கு எதிராக ஒரு நம்பிக்ைகயில்லாப் பிரேரணையைக் கொண்டு வர முடியாது என்கிறார்கள் சட்டம் தெரிந்த வல்லுநர்கள். இதில் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் ஒருவர். அவர் சொல்கிறார், பிரதமருக்கு எதிராகப் பிரேரணையொன்றைக் கொண்டு வர முடியாது; மாறாக ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிராகவே முன்வைக்க முடியும். கூட்டு எதிரணியினர் முன்வைத்துள்ள நம்பிக்ைகயில்லைப் பிரேரணையானது அரசாங்கத்திற்கு எதிரானது எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால்தான், சபாநாயகர் அதனை ஏற்றுக்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், அந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியும் ஓர் அங்கமே! அவரை விடுத்துப் பிரமருக்கு மாத்திரம் இஃது ஏற்புடையதாகாது. சிலவேளை பிரேரணை வெற்றிபெற்றால், ஜனாதிபதியின் பதவியையும் அது பாதிக்கும் என்கிறார் அமைச்சர் வஜிர அபேவர்தன. அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கும் அவர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புகளுக்கும் தற்காலிகமாக சபாநாயகரே பொறுப்பானவராக இருப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

இந்தப் பின்னணியில் ஆழச் சிந்தித்துப் பார்த்தால், பிரேரணை நிச்சயம் தோல்வி காணும் என்பதில் சந்தேகமில்லை என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில், இந்தப் பிரேரணைக்குப் புறம்பாக அரசாங்கத்திற்குச் சவாலாக மேலும் சில முக்கிய விடயங்களும் எஞ்சியிருக்கின்றன. இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனைக் கைதுசெய்து கொண்டு வருவது; மிக் விமானக் கொள்வனவில் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள உதயங்க வீரதுங்கவை நாட்டுக்குக் கொண்டுவருவது; மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என்பவற்றைவிடத் தலைக்கு மேலாக உள்ள பிரச்சினை, ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது.  

இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில், அரசாங்கத்திற்கு மற்றொரு நெருக்கடியாக நம்பிக்ைகயில்லாப் பிரேரணையும் அமையுமானால், பதவிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் எதனையுமே நிறைவேற்றிக்ெகாள்ள முடியாத ஒரு கையாலாகாத அரசாங்கம் என்ற விமர்சனத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையே ஏற்படும்.   

Comments