தோல்வியடைந்தோரின் குறுகிய அரசியல் இலக்குக்கு பலியாகலாமா? | தினகரன் வாரமஞ்சரி

தோல்வியடைந்தோரின் குறுகிய அரசியல் இலக்குக்கு பலியாகலாமா?

இலங்கை இன்று இக்கட்டானாதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிந்ததோடு உருவான ஸ்திரத்தன்மையற்ற அரசியல் நிலைமைகளைப் பயன்படுத்தி அதிகார வெறி கொண்ட சக்திகள் ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, முஸ்லிம் – சிங்கள சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்ட கண்டிக் கலவரம், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் உருவான அதிகார மோதல் என அனைத்துமே நாட்டை பின்னடைவை நோக்கி இட்டுச் செல்வதாக உள்ளது. போதாக்குறைக்கு பணத்தின் பெறுமதி வீழ்ச்சி பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்திருக்கிறது. ஒருபோதும் காணப்படாத அளவுக்கு டொலரின் விலை அதிகரித்துள்ளது. இவற்றுக்கு முகம் கொடுக்க முடியாத பெரும் நெருக்கடி நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

குறுகிய காலத்துக்குள் அதாவது பெப்ரவரிமாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் உற்சாகமடைந்திருக்கும் கூட்டு எதிரணியினர் இத் தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பு என்பதாகக் கருதிக்கொண்டு 2020 பொதுத்தேர்தலை இலக்கு வைத்து காய் நகர்த்தல்களை முன்னெடுத்துவருகிறது. 
இதே வேளை ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் மோதல் ஏற்பட்டிருப்பதாக காட்டும் ஒரு முயற்சியும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. உண்மையிலேயே ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே எந்த விதமான மோதலும் இல்லையானாலும் இருவருக்குமிடையில் கொள்கை ஒருமைப்பாடின்மை உள்ளது. இதனையே மோதலாகக் காட்ட சிலர் முனைகின்றனர். 

இந்த ஒருமைப்பாடின்மை நாட்டின் ஆரோக்கியமான பயணத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இது நாட்டுக்கு நல்லதல்ல. அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை எட்டுவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை நம்பிக்கையுடையதாக மாறமுடியும். தலைமைகளின் அணுகுமுறையிலே எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்த முடியும்.
  
இன்று உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியானது மொட்டுக்கட்சியினர் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சதி முயற்சிகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதாகக் கூட அனுமானிக்க முடிகிறது. அதற்கான வாய்ப்பைக் கொடுக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கின்றது. அரசு இது விடயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். சதித்திட்டத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசுக்குள் இருந்து கொண்டே காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது. 

அரசாங்கம் கக்தி முனையில் நிற்பது போன்ற நிலை தென்படுகிறது. எனவே அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை கூர்ந்து நோக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  
பொருளாதார ரீதியில் நோக்கும்போது 1978ல் ஜே.ஆர் ஜயவர்தன ஆட்சியில் நாடு திறந்த பொருளாதார வலயமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. அதன் மூலம் பல நலன்களை எட்டமுடிந்த போதும் மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கமைவான திட்டங்களையே ஆட்சிகளால் முன்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்துக்குள் நாடு தள்ளப்பட்டது. இந்த உலக மாற்றங்களோடு நாமும் இணைந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 

இவ்வாறான சூழலில் அரசாங்கம் பலவீனப்படும் நிலை ஏற்படுமானால் அது விபரீதமான விளைவுகளுக்குள் நாட்டை இட்டுச் செல்லலாம். பொருளாதார ரீதியான பின்னடைவை ஏற்படுத்தும் எனவே அரசியல் தலைமைகள் பலவீனப்பட்டுவிடக்கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் நிதானமாகவும், பொறுமையுடனும் பயணிக்க வேண்டும் அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் போர்க் காலத்தில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைபோன்று இன்றும் பொருளாதார பலவீனங்களுக்குள் நாடு உள்வாங்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பாரிய கடப்பாட்டை அரசு கொண்டுள்ளது. 
இவ்வாறானதொரு நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கூட்டு எதிரணியினர் கையாளும் தந்திரோபாயங்கள், சதித்திட்டங்களை முறியடிப்பதற்கான வலுவான செயற்பாடுகளை அரசு முன்னெடுக்கவேண்டும். நாட்டை ஸ்திரத்தன்மை கொண்டதாக உறுதிப்படுத்தும் விடயத்தில் இரு கட்சியினரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. இதில் எந்தவொரு தரப்பும் விலகிச் செயற்பட முடியாது. 

நல்லிணக்க அரசாங்கத்தை உறுதியான முறையில் முன்னெடுத்து இலக்கு நோக்கிய பயணத்தை தொடர்வதில் அனைவரும் உறுதிபூண்டவர்களாக ஒன்றுபட வேண்டிய கட்டாய நிலை இன்று உருவாகியுள்ளது. முரண்பாடுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர, தவறான நோக்கங்களாக அவை மாறிவிட இடமளிக்கப்படக் கூடாது.
 
இரண்டு பிரதான கட்சிகளுக்குள்ளும் இனவாத அரசியல் புகுந்திருப்பதை நன்றாக அவதானிக்க முடிகிறது தேசிய அரசியல் என்பது இனவாதத்தை மேலோங்கச் செய்வதே என்ற மாயை தலைதூக்கியிருப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. இது ஜனநாயக அரசியலுக்கு மிகப்பெரிய ஆபத்து என்பதை அரசியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் இனவாதம் வென்றதை வெளிப்படையாகவே காணமுடிகிறது. பொதுஜன பெரமுனையின் வெற்றிக்கு மத வழிபாட்டுத்தலங்கள் தாராளமாக பங்களிப்புச் செய்தமை பகிரங்க இரகசியமாகும். கிராம மட்டத்தில் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி நிற்பதை பார்க்க முடிகிறது. கிராம இராஜ்ஜியங்களை தம் வசப்படுத்துவதன் மூலம் தமது அடுத்த கட்ட நகர்வுக்குள் நுழைவதே மொட்டுத் தரப்பினரின் இலக்காகும். 
அதற்கான பாதையை சீர்ப்படுத்துவதில் அக்கட்சி முழுமூச்சாக ஈடுபட்டுக்காண்டிக்கின்றது. மொட்டுக்கட்சியை கைக்கேடயமாக வைத்துக் கொண்டு சுதந்திரக் கட்சியை தமதாக்கிக் கொள்ளும் திட்டத்தில் இன்று கணிசமான தூரம் மொட்டுத்தரப்பு பயணித்துள்ளது.
 
நீண்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு பிரதான அரசியல் சந்தித்திருக்கக் கூடிய பின்னடைவு தற்காலிகமானது; சீர் செய்யக் கூடியது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். கட்சிக் கட்டுப்பாடுகள், கொள்கை, கோட்பாடு என்பன சீராக பின்பற்றப்படாததன் பிரதிபலன்களாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. பலம் பொருந்தி கட்சிகள் படிப்படியாக பலவீனப்படுத்தப்படுவதில் பங்களிப்பு ஆற்ற முடியும் சர்வதேச சக்திகளும் இருப்பதை மறுக்கமுடியாது. 

அதிகார வெறி கொண்ட ஜனநாயக விரோத சக்திகளிடமிருந்து ஜனநாயக தேசிய அரசியலை பாதுகாக்கும் கடப்பாடு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மீதானதாகும். சர்வாதிகாரத்தின் பக்கம் மீண்டும் நாடு செல்வதற்கு இடமளிக்கப்படக்கூடாது. பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் தரப்பு வெற்றி பெறுவதோ தோற்பதோ அல்ல இங்குள்ள பிரச்சினை. நாட்டை மீண்டும் பாதாளத்தினுள் தள்ளுவதா என்பதுதான் பிரச்சினை. சுயநல அரசியல் நோக்கம் கொண்ட தீய சக்திகளுக்கு வாய்ப்பை பெற்றுக்கொடுத்து நாட்டை அழிவுக்குக் கொண்டுசெல்ல உதவுவோர் பக்கம் கைகோர்க்கமுடியுமா என்பதை ஒரு தடவை எண்ணிப்பார்க்க வேண்டும்.  
ஜனநாயக அரசியல் கட்சிகளுக்குள் கோட்பாடுகள் மாறுபடலாம். ஆனால் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும். யாருடைய முதுகில் குத்தியாவது பழி தீர்த்துக்கொள்ளும் சதித்திட்டத்துக்கு ஜனநாயக சக்திகள் துணைபோக முடியுமா? குறுகிய நோக்கம் கொண்ட இந்தப் பாதை சரியான பயணத்துக்குரியதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கட்சி அரசியலுக்கு அப்பால் நாட்டு மக்களைப்பற்றியும், நாட்டைப் பற்றியும் சிந்தியுங்கள். இதில் தெளிவு பெற்றால் நிச்சயம் எதிர்காலம் வளமானதாக அமையும்.    

Comments