இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கையில் கொரியாவின் 785.07 மில்லியன் டொலர் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கையில் கொரியாவின் 785.07 மில்லியன் டொலர்

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைக்காக கொரியா 785.07 மில்லியன்  அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது என கொரிய 'எக்ஸிம்' வங்கியின் இலங்கைக்கான  பிரதம வதிவிட பிரதிநிதி சங்சூங் ஜங் தெரிவித்துள்ளார்.  

கொரியாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி  நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்திய போதே அவர்  மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:  

கொரிய மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையிலான புரிந்துணர்வின்  அடிப்படையில் ஏற்கனவே கொரிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன்  இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
இந்த நிலையில் கொரியாவின் எக்ஸிம் வங்கியானது இலங்கையில்  மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 785.07 மில்லியன் அமெரிக்க  டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.  

இந்த நிதியில் 385 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில்  போக்குவரத்துத்  துறை சார் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் 205 மில்லியன்  அமெரிக்க டொலர் செலவில் நீர் வழங்கல் மற்றும் கழிவு முகாமைத்துவ  அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.  

கொரிய நிதி மற்றும் மூலோபாய அமைச்சின் கீழ் இயங்கும்  பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக அபிவிருத்தி  நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசுக்குத் தேவையான கடன்களை வழங்குதல்  மற்றும் இலங்கையின் சர்வதேச வர்த்தக,முதலீட்டு நடவடிக்கைகளுக்கான நிதி  ரீதியான வழங்குநராக தொழிற்படல் ஆகிய இரு பிரதான தொழிற்பாட்டு நடவடிக்கைகளை  கொரிய எக்ஸிம் வங்கி மேற்கொள்ளவுள்ளது.  

கொரிய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான  மூலோபாய புரிந்துணர்வு கட்டமைப்பு மூலம் இனங்காணப்பட்ட  துறைகளான கல்வி, போக்குவரத்து நீர்வழங்கல் முகாமைத்துவம், கழிவு  முகாமைத்துவம் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்தி என்பன  தொடர்பில் பிரதான கவனம் செலுத்தப்படவுள்ளது. மேற்குறித்த ஒழுங்கின் படி  கொரிய நிதி மூலம் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  

கொரிய எக்ஸிம் வங்கியானது பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு  நிதியத்தின் ஊடாக கொழும்பு-, காலி வீதி அபிவிருத்திக்காக 1990 இல் முதன்  முதலில் நிதி ஒதுக்கீடு செய்தது.  

Comments