தமிழகத்தில் அரசியல் அனல் பறக்க திரிசங்கு சொர்க்கத்தில் எடப்பாடி அரசு | தினகரன் வாரமஞ்சரி

தமிழகத்தில் அரசியல் அனல் பறக்க திரிசங்கு சொர்க்கத்தில் எடப்பாடி அரசு

அருள் சத்தியநாதன்

கடந்த மாதம் 29ம் திகதியோடு தமிழகத்தின் இயல்பு நிலையில் ஒரு பெறும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதை 1965 இந்து எதிர்ப்பு போராட்ட மன நிலையோடு தான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், அது ஒரு மாகாணம் தழுவிய இளைஞர் - மாணவர் – எழுச்சி. அடுத்த இரண்டு வருடங்களில் அதன் அரசியல் பலன்களை அமோகமாக அறுவடை செய்த தி.மு.க, காங்கிரஸை படுதோல்வியடையச் செய்து அரியணையில் அமர்ந்தது.

காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினை நீண்ட காலமாக கர்னாடகத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே இழுபறியாக இருந்து வருகிறது. எப்படி காஷ்மிர் பிரச்சினை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீராத தலைவலியாக இருந்து வருகிறதோ அதே போலத்தான் இந்த நதி நீர் பிரச்சினையும். தஞ்சையும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களும் காவிரி டெல்டா மாவட்டங்களாக அறியப்படுகின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இப்பிரதேசம் விளக்குகிறது. இங்கே விளையும் அபரிமிதமான நெல் குறித்து பேசும்போது, ‘மாடு கட்டி போரடித்து மாளாது செந்நெல் என யானை கட்டி போராடித்த தமிழகம்’ என்று பெருமையுடன் சொல்லும் ஒரு வழக்கு உண்டு. தமிழன் விவசாயத்துக்கு எப்போதும் முதலிடம் தந்தவன் என்பதற்கு சங்க நூல்களில் போதிய ஆதாரங்கள் உள்ளன. சங்கப் பாடல்கள் காதலுக்கும் வீரத்துக்கும் அடுத்ததாக காடு, களனி, நீர்நிலைகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றன. அது காவிரிக்குக் குறுக்கே அணைக் கட்டுகள் இல்லாத காலம்.

ஆனால் இன்று தமிழகம் வானம் பார்த்து விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு, காவிரி நீர் போதிய அளவில் கிடைக்காத காரணத்தால், தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு கோடி விவசாயிகள் உள்ளனராம். காவிரி தான் எங்களுக்கு ஜீவ நீர். பயிருக்கு தேவையான நீர் எங்களுக்கு கர்நாடகத்தில் இருந்து திறந்துவிடப்பட வேண்டும், என்பதுதான் இவர்களின் ஒற்றைக் கோரிக்கை. இந்த நதிநீர் பங்கீடு இந்தியாவுக்கு பொதுவானதுதான். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினை இருப்பினும் இருநாட்டு அரசுகளும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் நீர்ப் பங்கீடு பிரச்சினையின்றி நடந்து வருகிறது. அங்கே பிரச்சினை என்றால் யுத்தம், வரை அது இட்டுச் செல்லும் என்பதால் இந் நாடுகள் அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை.

ஆனால் கர்நாடகாவில் இது அரசியலாக்கப்பட்டுள்ளது. தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மீது எப்படி வெறுப்புணர்வையும் சந்தேகத்தையும் கிளப்பி விடுவதன் மூலம் இலங்கையின் தேர்தல் அரசியலில் இலாபங்களைக் கட்சிகள் ஈட்டிக் கொள்கின்றனவோ அதேபோலத்தான் கர்நாடகத்திலும் காவிரி நீர்ப்பங்கீடு அரசியலாக்கப்பட்டுள்ளது. தமிழனுக்கு காவிரி நீர் தரப்படலாகாது. காவிரி எங்களுக்கு சொந்தமானது. எமது விவசாய மற்றும் குடிநீர் தேவை போக வேண்டுமானால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப் படலாம் என்பதே கர்நாடகத்தில் பதவிக்கு வரும் எந்த அரசானாலும் அவற்றின் மாறாத கொள்கையாக இருந்து வருகிறது. அது, தமிழர் மீதான வெறுப்பாகவும், தேர்தல் அரசியலில் யாருக்கு வெற்றி என்பதைத் தீர்மானிப்பதாகவும் கர்நாடகாவில் மாறிப்போயிருப்பதால், கர்நாடக அரசியல்வாதிகளுக்கு தமிழகத்தின் நியாயங்கள் நன்றாகவே புரிந்தாலும் கூட, வெளியே அதைக் காட்டிக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.

ஆரம்பத்தில் இரு மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பதங்களாக இருந்து வந்த காவிரி நீர் பங்கீடு பின்னர் மத்திய அரசின் பஞ்சாயத்துக்குப் போனது. அங்கே கர்நாடக மாநிலத்தில் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் அதிகரித்துக் கொள்ள முடியுமா என்ற அளவில் மத்தியில் ஆளும் காங்கிரசும் பா.ஜ.க.வும் காவிரி நீர்ப்பிரச்சினையைக் கையாளத் தொடங்கின. இதனால் பிரச்சினை மேலும் சிக்கலானாது. தமிழகத்தில் 1967 இன் பின்னர் காங்கிரஸால் தலைதூக்க முடியவில்லை. அது எப்போது சாத்தியமாகும் என்பதும் தெரியாது. பா.ஜ.கவுக்கும் தமிழகம் ஒரு பாறாங்கல் பூமி. பா.ஜ.க விதை இங்கே முளைவிடாது. ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். தற்போதும் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அங்கே மே மாதம் சட்ட சபைத் தேர்தல் வரவுள்ளது. இம்முறை காங்கிரசை வீழ்த்தி தம்மால் ஆட்சி அமைக்க முடியும் என பா.ஜ.க உறுதியாக நம்புகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதற்கு வேறு பல காரணங்கள் இருப்பினும், அதன் காவிரி தண்ணீர்க் கொள்கையும் ஒரு காரணம். சரி, காங்கிரஸை வீழ்த்த என்ன செய்ய வேண்டும்? தற்போது நடைமுறையில் உள்ள பங்கீட்டுக்கு புறம்பாக ஒரு சொட்டுத் தண்ணீரும் தமிழகத்துக்கு வழங்க மாட்டோம் என்றும் மேலும் புதிய அணைகள் கட்டி தண்ணீரை சேமிப்போம் என்றும் சொன்னால்தானே கன்னடர்களினதும் குறிப்பாக கன்னட விவசாயிகளினதும் வாக்குகளைப் பெறக் கூடியதாக இருக்கும்!
இதைத்தான் தற்போது பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது.

நதி நீர் பங்கீடு தொடர்பாக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருந்தன. காவிரி நடுவர் மன்றம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி மேலாண்மை வாரியம் என்ற அதிகார சபை ஒன்றை அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. இது தமிழகத்துக்கு வாய்ப்பானது. தமிழகத்தின் வரட்சி நிலை, சாகுபடிக்கான காணி அளவு, நதி நீர் கொள்ளளவு, மழை வீழ்ச்சி என்பனவற்றைக் கண்காணித்து தமிழகத்துக்கு அவ்வப்போது எவ்வளவு நீர் திறந்துவிடப்பட்ட வேண்டும் என்பதை அதிகார பூர்வமாகத் தீர்மானிக்கும் ஒரு பொறிமுறையே காவிரி மேலாண்மை வாரியம்.

காவிரி தொடர்பான வழக்குகளை ஒன்று சேர்ந்து விசாரித்த டில்லி உச்ச நீதிமன்றம், பத்து ஆண்டுகளின் பின்னர் தனது தீர்ப்பை வெளியிட்டது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்துக்கு திறந்துவிடப் படவேண்டிய தண்ணீரின் அளவைச் சற்றுக் குறைத்த நீதிமன்றம், காவிரி நதிநீர் வேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி டில்லியிக்கு உத்தரவிட்டதோடு 42 நாள் அவகாசமும் அளித்தது. ஆனால் காவிரி நதி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தமது தீர்ப்பில் குறிப்பிடாமல் ‘ஸ்கீம்’ (திட்டம்) என்ற சொல்லையே அது பயன்படுத்தியிருக்கிறது. இதைத் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட மோடி அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படவில்லை என்று கூறியதோடு ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்கலாம் என்று மாற்று யோசனையை முன்வைத்துள்ளது.

இதே சமயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதாவது கர்நாடக காங்கிரஸ் அரசு. அதற்கு மாறாக பா.ஜ.க.வும் ஏதாவது கன்னடர்களைக் கவரும் வகையில் செய்ய வேண்டாமா? அதற்காகத்தான் மோடி அரசு, 42 நாள் கால அவகாசத்தை சட்டை செய்யவில்லை. தாமதத்துக்கு ஒரு காரணமாக, ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன என்று உச்சநீதிமன்றத்தையே கேட்டிருக்கிறது. மொத்தத்தில் கர்நாடக தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் வயிற்றில் அடித்து வருகின்றன இரண்டு தேசிய கட்சிகளும். இலங்கையின் இரு தேசிய கட்சிகளும் எவ்வாறு தமது சிங்கள வாக்கு வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக தமிழர்களின் பிரச்சினைகளை இழுபறியில் வைத்துள்ளனவோ அதே போலத்தான் காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இவ்விரு கட்சிகளும் நடந்து கொள்கின்றன என்பது தெளிவானது.

சில சமயம், தமிழகத்தில் ஆட்சியமைக்கக்கூடிய அளவுக்கு இவ்விரு பிரதான கட்சிகளுக்கும் செல்வாக்கு இருந்திருக்குமானால் காவிரி பிரச்சினை இந்த அளவுக்கு தமிழகத்துக்கு பாதகமாக அமைந்திருக்காது.

கடந்த 29ம் திகதியோடு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைந்து விட்டது. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இறுதித் தீர்ப்பென்றும் காவிரி தொடர்பான எந்த வழக்குகளையும் இனி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

தீர்ப்பு வெளியான பின்னர் சரி, காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கப்பட்டு காவிரி பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துவிடும் எனத் தமிழகம் பெருமூச்சு விட்ட போதுதான் அத் தீர்ப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத டில்லி அரசு, தமிழகத்தில் மற்றொரு அரசியல் புயலைக் கிளப்பி விட்டிருக்கிறது.

பா.ஜ.கவின் கர்நாடகம் சார்பான போக்கினால், தமிழக அ.தி.மு.க அரசு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறது. எடப்பாடி அரசு பா.ஜ.க வின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு என்பது தெரிந்த விஷயம் தான். எனினும் இந்த விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்பதை அறியாமல் எடப்பாடி திண்டாடிக் கொண்டிருக்கிறார். அவரால் பா.ஜ.க.வை எதிர்த்து ஒன்றும் செய்யவும் முடியாது; தமது செல்வாக்கு மேலும் சரிவதைத் தடுக்கவும் இயலாது என்ற இக்கட்டான சூழலில், மத்திய அரசுக்கு எதிராக உண்ணவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார் எடப்பாடி.

இதை தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டிருக்கும் தி.மு.க, கறுப்புக்கொடி போராட்டத்தை கையில் எடுத்திருப்பதோடு, தமிழகத்துக்கு வருகை தரவிருக்கும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டப் போவதாகவும் அறிவித்துள்ளது. கடந்த 12 தினங்களாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி டில்லி பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி சபை நடவடிக்கைகளை முடக்கி வரும் அ.தி.மு.க எம்.பி மாரை காங்கிரஸ் வேறொரு காரணம் காட்டி கண்டித்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.கமீது நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை கொண்டுவர உத்தேசித்துள்ளன.

தொடர்ந்து சபை நடவடிக்கைகள் முடக்கப்படுவதால், தீர்மானத்தை சபையில் சமர்ப்பிக்க முடியாதிருப்பதாகவும் இந்த சபை முடக்கம் என்பது பா.ஜ.கவைக் காப்பாற்றவதற்காக அ.தி.மு.க மேற்கொண்டுவரும் ஒரு உத்தி என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு. இச் சந்தேகத்துக்கு முகாந்திரம் இருக்கத்தான் செய்கின்றன.
அ.தி.மு.க எம்.பிமார் 12 நாட்களாக கூச்சல் குழப்பம் விளைவித்து வந்தாலும், பா.ஜ.க அமைச்சர்கள், உங்கள் பிரச்சினைதான் என்ன என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அதே சமயம், கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி காவிரி பிரச்சினை பற்றி சபையில் வாயே திறக்கவில்லை!
இதே சமயம் பாராளுமன்றத்தில் கூச்சல் போடுவதை நிறுத்திவிட்டு, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க எம்.பிமார் அத்தனைபேரும் கூண்டோடு இராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு இராஜிநாமா செய்யும்போது தமிழகக் காங்கிரஸ், தி.மு.க உட்பட அத்தனை தமிழக எம்.பிமாரும் இராஜிநாமா செய்து ஒரு அரசியல் நெருக்கடியை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் ஒரு யோசனையை முன் வைத்துள்ளார்.

இராஜிநாமா செய்யத் தேவையில்லை என்றும் காங்கிரஸ் தலைமையில் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அ.தி.மு.க எம்.பிமாரும் ஏனைய தமிழக எம்.பிமாரும் ஆதரவு வழங்குவதன் மூலம் தமது எதிர்ப்பை மோடி ஆட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எல்லாமே கர்நாடகத் தேர்தல் முடியும் வரைதான். அதன் பின்னர் மத்திய அரசு வழிக்கு வந்துவிடும் என்றும் சில அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Comments