உரோம கட்டடக்கலையின் உச்சம் | தினகரன் வாரமஞ்சரி

உரோம கட்டடக்கலையின் உச்சம்

லோரன்ஸ் செல்வநாயகம்  

 

(படங்கள் – கிண்ணியா ரிபாஸ்)

 

‘ஜெரசா’ மாளிகைப் பகுதியின்  வியக்கத்தக்க அதிசயங்கள்!   

 

 உரோமானிய நகரம் என அழைக்கப்படும் ‘ஜெரசா சிட்டி’க்கு பயணித்தோம். வெற்றியின் சின்னம் என்ற மிக உயரமான கோபுரம் எங்களை வரவேற்றது. பாறைகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்த மாபெரும் கோபுரம் மகா அலெக்சாண்டர் மன்னன் தமது வெற்றியின் சின்னமாக கட்டியெழுப்பிய வரலாற்றுச் சின்னமென எமது கைட்ஹனி அதனைப் பற்றி விளக்கமளித்தார்.

ஜெரசா ஜோர்தானின் ஒரு முக்கியமான சுற்றுலா மையம். அதன் முகப்புப் பகுதியை நாம் அடைந்த போது உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வகையிலான பொருட்களைக் கொண்ட வர்த்தக நிலையங்கள் காணப்பட்டன.

அநேகமாக அரேபியர்களின் கடைகளே இருந்ததுடன் அப்பகுதிக்குள் நாம் பிரவேசிக்கும்போது சில வர்த்தகர்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் நாம் கேட்காமலே அரேபியர்கள் தலையில் கட்டும் முண்டாசுச் சால்வையை எமது தலைகளில் கட்டி விட்டனர். எமக்கு மிக அழகாகவும் அம்சமாகவும் இருப்பதாகக் கூறிய அவர்கள் அதனைப் பார்க்குமாறு கண்ணாடியின் முன் எம்மை நிறுத்தினர். அதற்குப் பின்னர் அதற்கான விலையாக எம்மிடம் சால்வையொன்றுக்கு ஏழு ஜோர்தான் தினார் (இலங்கை நாணயப்படி 1,500 ரூபா எம்மிடமிருந்து வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்டனர். இங்கு சுமார் 300 ரூபாவுக்கு வாங்கக்கூடியதை அங்கு 1,500 ரூபாவுக்கு பெற நேர்ந்தது.
வெற்றியின் சின்னம் கோபுரத்தினூடாக நாம் பிரவேசித்த போது அங்குள்ள பிரதான வாயிலினூடாக எம்மைப் போகவிடாமல் இடது பக்கமிருந்த வாசலினூடாகவே போகுமாறு எமது கைட்ஹனி கேட்டுக்கொண்டார். பிரதான வாசலினூடாக பாவிகளே பயணித்ததாகவும் நல்ல மனிதர்கள் இடது – வலது பக்கவாயில் மூலமே பிரவேசித்தார்கள் என்வும் கூறிய அவர், அங்கு மகா அலெக்சாண்டர் காலத்தில் நல்லவர்கள் பாவிகள் என பிரிக்கப்பட்டிருந்ததாக விளக்கினார்.

கி.பி முதலாம் இரண்டாம் நூற்றாண்டு காலம் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் நகரமொன்றை நாம் அங்கு கண்டோம். அரசர்கள் பலர் ஆட்சி செய்துள்ள அப்பகுதியில் ஆரம்ப கால கட்டடங்கள் மண்ணில் அமிழ்த்து விட்டதாகவும் மகா அலெக்சாண்டர், ஒட்டோமன் போன்ற பேரரசர்கள் வாழ்ந்த மாளிகைகள் மற்றும் பாரிய கட்டடங்கள் அங்கு காணப்படுகின்றன.

சில கிலோ மீற்றர் நீளம் கொண்டபாரிய மதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அரச மாளிகைகள் நிர்வாகக் கட்டடங்கள், மண்டபங்கள் பல பாரிய ஆலயங்கள் சிதைவடைந்த நிலையில் அங்கு காணப்படுகின்றன. அரச குலத்தவரும் செல்வந்தர்களும் அப்பகுதியிலிருந்து வெளியில் செல்ல அவசிய மில்லாதவாறு விளையாட்டுத் திடல் குதிரைப் பந்தயத்திடல், உடற்பயிற்சிப் பிரதேசம், உல்லாசமாகப் பொழுகை கழிப்பதற்கான பிரதேசங்கள் அரங்குகள் மற்றும் அங்கு இறப்பவர்களை அதற்குள்ளேயே அடக்கம் செய்ய கல்லறைகளும் அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்ததை ஹனி எமக்குச் சுட்டிக்காட்டினார். 

தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத அக்காலத்தில் பெரும் கற்கலை வெட்டி உயரத்திற்குக் கொண்டு சென்று எவ்வாறு இக்கட்டடங்களை நிர்மாணித்தார்கள் என்பதை சிந்திக்கும் போது பெரும் வியப்பாக உள்ளது.

மகா அலெக்சாண்டர் தமது வெற்றிக்குப்பின் கட்டிய வெற்றியின் சின்னம் மிக உயரமானது. அது மேலும் உயரமாகக் காட்சி அளித்ததாகவும் காலத்துக்குக் காலம் அது சிறிது சிறிதாக சிதைவடைந்தாகவும் அருகில் அடுக்கப்பட்டிருந்த பாரிய கற்கள் அந்த சிதைவுகளின் பாகங்களே எனவும் ஹனி தெரிவித்தார்.

உள்ளே வாகனம் செல்ல முடியாது. சில மைல்கள் கால் நடையாகவே சென்றோம். நூற்றுக்கணக்கில் பல நாடுகளையும் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் அங்கு பயணித்தனர். அங்கிருந்த அழகான வியக்கத்தக்க இடங்களிலிருந்து அவர்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக் கொண்டனர்.

அவர்களோடு வந்துள்ள ‘கைட்’ மார் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் முயற்சிகளில் மும்முரமாகச் செயற்பட்டனர்.

கிறிஸ்தவ அடிப்படையில் பார்க்கும்போது இயேசு கிறிஸ்து அப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் பல்வேறு புதுமைகள் அங்கு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. இயேசு கிறிஸ்து பேய் பிடித்தவர்களை சுகமாக்கிய சம்பவமொன்று பைபிளில் புனித லூக்கா, மாற்கு, மத்தேயு நற்செய்திகளில் கூறப்படுகிறது. மேலும் அதிசயங்களின் பூமி என்றும் வர்ணிக்கப்படுகிறது.

மேற்குப் பகுதி கட்டடங்கள் நிறைந்து காணப்பட்ட போதும் தெற்குப் பகுதி தரை மட்டமாக காணப்பட்டது. இப்பகுதியில் ‘கோல்டன் ரிவர்’ என்ற ஆறு பிரசித்தி பெற்றதாக இருந்ததுள்ளது.

இயேசு இங்கு கால் நடையாகச் சென்றுள்ளார். அப்போது அந்த இடத்தைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு எதிரே வந்தார். பேய் பிடித்த அவர் நெடுநாளாய் ஆடை அணிவதில்லை: வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கி வந்தார்.

இயேசுவைக் கண்டதும் கத்திக்கொண்டு அவர்முன் விழுந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? என்னை வதைக்க வேண்டாம் என்று உம்மிடம் மன்றாடுகின்றேன்” என்று அவர் உரத்த குரலில் கூறினார். ஏனென்றால், அவரை விட்டு வெளியேறுமாறு இயேசு அத் தீய ஆவிக்கு கட்டளையிட்டிருந்தார். அது எத்தனையோ முறை அவரைப் பிடித்திருந்தது. அவ்வேளைகளில் அவர் சங்கிலிகளால் கட்டப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்ததும் அவற்றை உடைத்து எறித்து விடுவார்.

அது மட்டுமல்ல, தீய ஆவி அவரை பாலை நிலத்திற்கும் இழுத்துச் செல்லும். இயேசு அவரிடம் “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “லேகியோன்” என்றார்’. ஏனெனில் பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன. அவை தங்களை பாதாளத்துக்குள் போக பணிக்க வேண்டாமென அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பேய்கள் அவரைவிட்டு வெளியேறி பன்றிகளுக்குள் புகுந்தன. பன்றிக் கூட்டம் ஏரியில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் நடத்ததைக்கண்டு ஓடிப்போய், நகரிலும் நாட்டுப் புறத்திலும் அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்ப்பதற்கு மக்கள் இயேசுவிடம் வந்தனர்; பேய்கள் நீங்கப்பெற்றவர் ஆடை அணிந்து அறிவுத் தெளிவுடன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.

நடந்ததைப் பார்த்தவர்கள் பேய்பிடித்தவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதை அவர்களுக்கு அறிவித்தார் என்ற அந்த நற்செய்திகள் இப்பகுதியில் நடந்த அற்புதங்கள் பற்றி கூறுகின்றன.

கட்டடங்களின் மத்தியில் நெடுந்தூரம் சென்ற நாம் மலைப் பாங்கான ஒரு பிரதேசத்திற்குள் பிரவேசித்தோம். அங்கு ஒரு பிரமாண்டமான அரங்கு காணப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து பார்க்கக் கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்த அரங்கு பற்றிய வித்தியாசமான விடயங்களை ஹனி எமக்கு விளக்கினார்.
அந்த நகரத்தில் வாழும் மக்களுக்கு அந்த அரங்கத்திலிருந்தே ஒலி – ஒளிப்பரப்பு இல்லாத அக் காலத்தில் அரசர்களால் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டதாக ‘ஹனி’ தெரிவித்தார். அந்த ஒடிட்டோரியத்தின் மத்தியிலிருந்து ஒருவர் சத்தமாக பேசினால் படிக்கட்டுகளால் அமைத்துள்ள கடைசி வரிசைஆசனங்களுக்கும் அது தெளிவாக கேட்கிறது. நாம் அங்கு அமர்த்திருந்து பரீட்சித்து பார்த்தோம். ‘ஒலி’ எதிரொலிப்பது மிக தெளிவாக உள்ளது.

அரசர் காலத்து பாடகர்கள் போன்று அரேபிய உடைகளில் காணப்பட்ட சிலர் அங்கு வாத்தியக் கருவிகளுடன் இருந்தனர். அவர்கள் இசைத்த இசையை உல்லாசப் பிரயாணிகள் இரசித்த சில தினார்களை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தனர். நாம் பல மணித்தியாலயங்கள் அந்த அரங்கப் பகுதியில் செலவிட்டோம்.         

  (தொடரும்)

Comments