கனவான் விளையாட்டுக்கு இழுக்கு | தினகரன் வாரமஞ்சரி

கனவான் விளையாட்டுக்கு இழுக்கு


கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பதால் அதில் சில சம்பிரதாயங்களை மதிப்பது அவசியம். கிரிக்கெட் சட்டங்களின் 41ஆவது விதி அப்படியான சம்பிரதாயங்களையே கூறுகிறது. அதனை பொதுவாக ‘நியாயம் மற்றும் நியாயமற்ற ஆட்டம்’ என்றும் அழைப்பார்கள்.

விதி 41, பிரிவு 3: போட்டியின் போது பந்தை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ‘பந்தை பளபளப்பூட்ட செயற்கை பொருள் பயன்படுத்தக் கூடாது. நடுவரின் மேற்பார்வையில் பந்து ஈரலிப்பாக இருந்தால் துணி மூலம் உலரவைக்கவும், சேறு இருந்தால் அதனை அகற்றவும் முடியும். இதுவல்லாமல் பந்தை தரையில் தேய்ப்பது, விரல் நகத்தால் அல்லது ஏதேனும் கூர்மையான பொருளாள் உராய்ப்பது பந்தை சேதப்படுத்துவதாக இருக்கும்.
இது ஒரு அப்பாட்டமான மோசடி வேலை. ஒருவகையில் திருட்டு ஆட்டம்.

ஸ்விங் செய்வதற்கு வசதியாக கிரிக்கெட் பந்தின் ஒரு பக்கத்தை பளபளப்பாக வைத்திருப்பது, மற்றைய பக்கத்தை சொரசொரப்பாக வைத்திருப்பது அவசியம். ஆனால் அதனை வீரர்கள் இயற்கையான முறையில் தான் செய்ய வேண்டும்.

1970களில் பந்தை காற்றிலேயே திசைமாறி சுவிங் செய்ய வைக்கும் உத்தியை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சர்ப்ராஸ் நவாஸ் அறிமுகம் செய்தபோது அது கிரிக்கெட் உலகில் கண்கட்டி வித்தையாகவே ஆரம்ப தசாப்தங்களில் இருந்து வந்தது. ரிவர்ஸ் ஸ்விங் என்று அழைக்கப்படும் இந்த உத்தி சர்ப்ராஸ் நவாஸிடம் இருந்து இம்ரான் கானுக்கும் அவரிடம் இருந்து வசீம் அக்ரமுக்கும் அவரிடம் இருந்து வக்கார் யூனிசுக்கு கடத்தப்பட்டது.

1990களின் ஆரம்பத்தில் இந்த உத்தியை ஏனைய அணிகளும் பின்பற்ற ஆரம்பித்தன. இயற்கையாக பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு பந்து பழசாக வேண்டும். ஆனால் இப்போதேல்லாம் சற்று புதிய பந்திலேயே ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியுமாகியுள்ளது. அதற்கு பந்துகளின் வகை ஒரு காரணமாக இருந்தாலும் பந்தை சேதப்படுத்துவது முக்கிய காரணியாக மாறியிருக்கிறது.

கேப்டவுனில் நடந்த நாடகம்

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் கடந்த மார்ச் 24ஆம் திகதி நடந்தது.

பந்து ஆரம்ப ஓவர்களிலேயே அசாதாரணமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆவது பற்றி போட்டியின் ஒளிபரப்பு உரிமை பெற்றிருக்கும் சுபர்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அல்வின் நைகருக்கு சந்தேகம் இருந்தது.

’25 ஓவர்களுக்கு பின் பந்து அதிகம் ரிவர்ஸ் ஸ்விங் ஆவது பற்றி நாம் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தோம். எனவே, பந்து யார் கையில் இருந்தாலும் அது பற்றி அதிக கவனம் செலுத்தும்படி நாம் எமது கமரா குழுவுக்கு அறிவுறுத்தி இருந்தோம். பந்தை பளபளப்பூட்டுவது சாதாரண விடயம் அதனை புரிந்துகொள்ள முடியும்’ என்கிறார் நைகர்.

கமராக் குழு தோண்டித் தோண்டி தேடியதற்கு பலன் கிடைத்தது. அவுஸ்திரேலிய ஆரம்ப வீரர் கெமரூன் பான்க்ரொப்ட் மஞ்சள் நிற சிறிய பொருள் ஒன்றால் பந்தை தேய்ப்பதும், தான் மாட்டிக் கொண்டது தெரிந்ததும் உள்ளாடைக்குள் அதனை மறைப்பதும் நேரடி ஒளிபரப்பாக முழு உலகுக்கும் அம்பலமானது.

சுற்றிவர 30க்கும் அதிகமான கமராக்கள், நடுவர்கள் எல்லோருக்கும் இடையே இப்படி மோசடி வேலை செய்யப்போனால் மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. எனவே, மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்ததும் நடந்த செய்தியாளர் மாநாட்டில், பந்தை சேதப்படுத்த முன்கூட்டியே திட்டமிட்டதை பான்க்ரொப்டும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும் ஒப்புக்கொண்டார்கள்.

எனவே, அதற்கு பின்னர் சர்ச்சைகள் வலுத்தன. வெட்கித் தலைகுணிந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டது, அவுஸ்திரேலிய அரசு கூட தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தது. பல கிரிக்கெட் வீரர்களும் கண்டம் வெளிட்டார்கள்.

பொறுக்க முடியாமல் அணித்தலைவர் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோர் தமது பொறுப்பில் இருந்து நீங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. விக்கெட் காப்பாளர் டிம் பெயினிடம் அவசரமாக தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.

பரபரப்பு காட்டாத ஐ.சி.சி

இத்தனை சர்ச்சைக்குரிய ஒரு நிகழ்வு பற்றி சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் (ICC) பெரிதாக பரபரப்பு காட்டியதாக தெரியவில்லை. போட்டி மத்தியஸ்தர் அண்டி பைக்ரொப்ட் வழக்கம் போல் சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். ஸ்மித்தும், பான்க்ரொப்டும் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தண்டை கொடுப்பது வசதியாகிப்போனது.
வீரர்கள் மற்றும் வீரர் உதவியாளர்களுக்கான ஐ.சி.சி ஒழுக்க விதி 2.2.1 இன் கீழ் ஸ்மித் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஸ்மித் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் தடையும் 100 வீத போட்டிக் கட்டணத்தை அபராதமாகவும் விதித்தது ஐ.சி.சி.

ஆனால் பந்தை தெரியத் தெரிய சேதப்படுத்திய பான்க்ரொப்ட்டுக்கு தண்டனை குறைவு. அவருக்கு 75 வீத போட்டிக் கட்டணமும் 3 தகுதி இழப்பு புள்ளிகளுமே வழங்கப்பட்டன. இவ்வளவுதானா? என்று பலரும் வாய் மேல் விரல்வைத்தார்கள்.

‘இந்த பிரச்சினையை சரியான முறையில் கையாண்டு எமது விளையாட்டுக்கு தலைமை வகிக்கும் சந்தர்ப்பம் ஒன்றை ஐ.சி.சி. தவறவிட்டதாகவே நான் நினைக்கிறேன். தாம் மோசடி செய்ததை இரண்டு வீரர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய விடயம் என்று நான் நினைக்கிறேன்’ என்று தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கிராம் ஸ்மித் ஐ.சி.சி முடிவு பற்றி அதிருப்தியாக கூறியிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிடினி ஐ.சி.சியின் முடிவை நேரடியாகவே நையாண்டி செய்கிறார். ஸ்மித்துக்கு வழங்கப்பட்ட ஒரு போட்டித் தடை நகைச்சுவையானது என்கிறார்.

‘வேறு எந்த நாடாவது இதே விடயத்தில் சிக்கிக் கொண்டால் அவுஸ்திரேலியர்களை விடவும் அதில் மாட்டிக் கொண்டவர்கள் அதிக தண்டனையை பெறுவார்கள்.
காலஞ்சென்ற ஹன்சி கிரொன்யேவுக்கு என்ன ஆனது என்று நினைவுகூர்ந்தால், நாம் சார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக ஆடியபோது இதேபோன்ற நிலைமை தான் ஏற்பட்டது. அது மிகப்பெரிய விவகாரமானது.

அடுத்து நீங்கள் தென்னாபிரிக்காவுக்கு வந்தால், இதே நபருடன் (ஸ்மித்) (ககிசோ) ரபாடாவின் தோள்பட்டை பட்டதற்கு இரண்டு போட்டித் தடைக்கு முகம்கொடுத்தார். பந்தை சேதமாக்கிய ஸ்மித்துக்கு ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் தடை, இது என்ன? இது முழுக்க முழுக்க தவறானது’ என்றார் நிடினி.

ஐ.சி.சியின் மெத்தனம்

1981ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி, அவுஸ்திரேலியாவின் தகிடுதத்தங்களுக்கு நல்ல உதாரணம்.

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த போட்டியை சமநிலையில் முடிக்க வேண்டுமானால் நியூசிலாந்து அணி கடைசி பந்துக்கு 6 ஓட்டங்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்போது அவுஸ்திரேலிய அணித் தலைவராக இருந்த கிரேக் செப்பல் பந்து வீசிக்கொண்டிருந்த தனது சகோதரர் டிரவர் செப்பலுக்கு அபூர்வமான ஆலோசனை ஒன்றை வழங்கினார். அதனை கேட்டு டிரவர் செப்பல் பந்தை கீழால் உருட்டிவிட ஒட்டுமொத்த நியூசிலாந்துமே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வசை பாடியது.
பந்தை கீழால் உருட்டுவது அப்போது சட்ட ரீதியில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கிரிக்கெட் போட்டிக்கான உணர்வை கிரேக் செப்பல் மதிக்க தவறிவிட்டார். அதற்கு பின், பந்து வீசுவது குறித்து கட்டுப்பாடு கொண்டுவந்ததோடு ஐ.சி.சி நின்று விட்டது.

அந்த கட்டுப்பாடுகள் கூட முத்தையா முரளிதரன் போன்ற சில பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டதை கடந்த காலங்களில் காண முடிந்தது.
அண்மையில் முடிந்த இலங்கையின் சுதந்திர கிண்ண தொடரில் இலங்கையுடனான போட்டியில் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹஸன் போட்டிக்கு பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் வீரர்களை திரும்ப அழைத்தது மற்றும் மோதலில் ஈடுபட்ட 12ஆவது வீரர் நூருல் ஹசனுக்கு ஐ.சி.சி. முறையே 20, 25 வீத போட்டி கட்டணங்களை அபராதமாக விதித்ததோடு சரி.

ஸ்மித்துக்கு ஒரு போட்டித் தடை மாத்திரமே விதிக்கப்பட்ட இதே தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய போட்டித் தொடரை எடுத்துக் கொண்டால் ஸ்டீவன் ஸ்மித்துடன் மோதலில் ஈடுபட்ட தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவுக்கு ஐ.சி.சி இரண்டு போட்டிகள் தடை விதித்தது. அந்த தடையை அகற்ற மேன்முறையீடு செய்ய வேண்டிக் கூட ஏற்பட்டது.

எனினும், முதல் முறை ஒரு தவறை அல்லது விதி மீறலை மேற்கொள்ளும்போது குறித்த வீரருக்கு சிறிய அளவிலான தடை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பின்னர் தொடர்ச்சியாக அவர் தவறை மேற்கொள்ளும்பொழுது தண்டப் புள்ளிகள் அதிகரிக்கப்படும். அதன்போது தீவிரமான தண்டனைகள் வழங்கப்படும் முறைமை இருக்கின்றமையையும் இங்கு நினைவு கூற வேண்டும்.

பாகுபாடு காட்டுகிறதா ஐ.சி.சி?

ஓவர்கள் தாமதமாகும், ஒப்பீட்டளவில் சாதாரண குற்றங்களை கடுமையாக கவனிக்கும் ஐ.சி.சி, போட்டியின் உணர்வையே பாதிக்கும் இவ்வாறான குற்றங்களில் இத்தனை மெத்தனமாக இருப்பது புரியவில்லை. நாடுகளுக்கு நாடு அது பாகுபாடு காட்டுவதாக பொதுப்படையான ஒரு குற்றச்சாட்டு இருந்து வருவதை மறுக்க முடியாது.
இந்த பந்து சேதப்படுத்தும் விவகாரத்தை எடுத்துக் கொண்டால் கிரிக்கெட் உலகில் அது ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது. 2000ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு முதல் முறை போட்டித் தடைக்கு வக்கார் யூனிஸ் முகம்கொடுத்தது தொடக்கம் பாகிஸ்தானே அதிகம் இந்த சர்ச்சையில் சிக்கி வருகிறது.

2006ஆம் ஆண்டு ஓவலில் நடந்த இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின்போது சர்ச்சைக்குரிய நடுவர் டெரல் ஹெயார் மற்றும் சக நடுவர் பில்லி டொக்ரோவ் ஆகியோர், பாகிஸ்தான் பந்தை சேதப்படுத்தியதாக கூறி எதிரணிக்கு ஐந்து ஓட்டங்களை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுயாதீன விசாரணை குழு ஒன்றின் மூலமே நடுவரின் தீர்ப்பு தவறு என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.

ஆனால் இதுவே இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு எதிராக ஐ.சி.சி. தைரியமாக முடிவெடுக்குமா என்று சிலர் கேட்பதில் நியாயம் இருக்கிறது.
ஸ்மித் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் செய்தது சாதாரணமானதாக கொள்ள முடியாது. அணித் தலைவராக அவர், திருட்டு ஆட்டம் ஒன்றுக்காக அணியை வழி நடத்தியிருக்கிறார். போட்டி உணர்வை கெடுத்த குற்றத்திற்கு அவர் மீது கடினமான நடவடிக்கை எடுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இருந்தன.
விளையாட்டுப் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தப்படுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றம். கண்டுபிடிக்கப்பட்டால் அது ஒலிம்பிக் பதக்கமாக இருந்தாலும் உடனே பறிக்கப்பட்டு அதிகபட்சம் வாழ்நாள் தடை வரை விதிக்கப்படுகிறது.

ஊக்கமருந்து பயன்படுத்துவது என்பது போட்டியை அசாதாரணமான முறையில் தமக்கு சாதகமாக்கிக் கொள்வதாகும். பந்தை சேதப்படுத்துவது கூட அதேபோன்றது தான். 

Comments