நறுக்கும் திரட்டு | தினகரன் வாரமஞ்சரி

நறுக்கும் திரட்டு

“வா வா சின்னராசு என்ன முசுப்பாத்தி நடக்குது?”
“போற போற இடமெல்லாம் முசுப்பாத்தி தானண்ண. கோயிலுக்கு போகலாமென்டு மாலையை வாங்கப்; போனனான். மாலைக்கு பவில்ல. இருந்த மாலையெல்லாம் முடிஞ்சிபோட்டுது என்டு சொல்லிப் போட்டினம்”.
“வேற இடத்தில மாலை இல்லையோ?”
“ஒரு இடத்திலையும் இல்லலையண்ண”
“பிறகு என்ன செஞ்சன?”
“அறுகம்புல் மாலைய வாங்கி பிள்ளையாருக்கு போட்டு அரச்சனை செஞ்சனான். ஏனண்ண மாலைக்கு தட்டுப்பாடு. எல்லாத்தையும் கல்யாணத்துக்கு கொண்டு போட்டினமோ”?
“எல்லா மாலையும் கல்யாணத்துக்கத்தான் போட்டுது சின்னராசு”.
“எந்த கல்யாணமண்ண?”
“எங்க வீட்டு கல்யாணத்துக்குத்தான்”.
“எங்கட வீட்டு கல்யாணமோ?”
“கல்யாணம் எங்கட வீட்டுலதான் ஆனா மாப்பிள்ளைதான் அங்க இருந்து வந்தவர்”.
“மாப்பிள்ளை கனடாவோ ? இல்லை ஜேர்மனியோ?”
“மாப்பிள்ளை இந்தியாவில இருந்து வந்தவர”.
“இந்தியாவிலிருந்தோ.?”
“ஓமப்பா இந்தியாவில இருந்துதான்”.
“உந்தக் கல்யாணத்துக்குதான் எல்லா மாலையூம் போட்டுதோ?”
“ஓமோம். உனக்கு இன்னம் கதை விளங்கேல்ல என்ன?”
“ஒன்டும் பிடிபடவில்லையண்ண. என்ன சொல்லுறியள்?”
“ஆர்யா தெரியுமோ?”
“ஆர்யாவோ? சூர்யாவோ?”
“ஆர்யாதானப்பா”.
“ஆர்யா படத்துல நடிக்கிறவறென்ன?”
“உந்த நடிகர் ஆர்யாதான். உவர் யாழ்ப்பாணத்திற்கு வந்தவரில்லே”.
“ஆர்யா யாழ்ப்பாணம் வந்தவரோ? படம் எடுக்கினமோ?”
“படம்தான். கல்யாணப்படம். உனக்கு விளக்கமா சொன்னாத்தான் தெரியும் போல கிடக்கு”
“சொல்லுங்கோ கேப்பம்”.
“உந்த ஆர்யா இருக்கிறவரில்ல. ஆள் கொஞ்சம் வாட்டசாட்டமா இருப்பார். ஆனால் அவருக்கு இப்ப படங்கள் ஒன்டும் பெரிசா இல்ல”.
“ராஜா ராணி, நான் கடவுள் என்டெல்லாம் நடிச்சவர் என்ன?”
“நடிச்சவர் தான் இப்போ படமில்லாமல் கிடக்குறார். உவர் இப்ப தொலைக்காட்சி நிகழ்ச்சியொண்டில நடிக்கிறவர். அதில 16 பெண் பிள்ளைகள் வருகினம். ஆர்யா அவயள இன்டர்வியூ பண்ணி ஒரு பெட்டைய தெரிவு செஞ்சி சுயம்வரம் நடத்தப்;போறவராம்.”
“தொலைக்காட்சியில சுயம்வரம் நடத்துரவரோ?”
“ஓம் சின்னராசு. ஒரு ஹிந்தி நடிகை முன்ன உப்பிடி ஒரு சுயம்வரத்தை நடத்தினவளாம்”
“கல்யாணம் கட்டினவளோ?”
“ஓம் உப்பிடி சுயம்பரம் நடத்தி கல்யாணம் செய்ய இருந்தவை ஆனா உந்த கல்யாணம் இடையில பிசுத்துப் போட்டுது”.
“இப்ப இவர் கட்டுறார் என்ன?”
“உதில முசுப்பாத்தி என்னவென்டா. உந்த 16 பெட்டையளில் ஒரு பெட்டை யாழ்ப்பாண பெட்டை. கனடாவில இருக்கிறாவாம். உவவுக்கு பிள்ளையும் இருக்குதான். உவவின்ட தகவல் அறியத்தான் ஆர்யா யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்”.
“நல்ல கதையென்ன?”.
“கதையில்ல சின்னராசு ஆள் மெய்யா வந்தவர”.
“மெய்யா வந்தவரே?”
“எங்க வீட்டு மாப்பிள்ளை என்ட உந்த சுயம்பர நிகழ்ச்சியில சுசானா என்ட யாழ்ப்பாண பெட்டைய பார்க்கத்தான் ஆள் இங்க வந்தவராம். பிள்ளை இருக்கென்டு உண்மையோ அவவின்ட சொந்தக்காரரின்ட வீடு, காணி கிடக்கே என்டு பார்க்கத்தான் வந்தவராம். எங்கட ஆக்களுக்கு எழுதி அனுமதி கேட்டுக் கொண்டுதான் வந்தவராம். அவங்க வந்து படப்பிடிப்பு நடத்துகினம். ஆனா எங்கட ஆக்கள், பெடியள் அவரை ஈ மொக்கிற மாதிரி மொய்த்துப்போட்டவை. இங்க தொழுகைக்கு போனவராம்.”
“தொழுகைக்கே உது ஏன்?”
“அவரோட உண்மைப் பெயர் ஜம்செத் செத்திரகத். ஆனா சென்னையில்தான் படிச்சவர். 2005ல தான் படங்களில் நடிக்கத் தொடங்கினவர".
“நான் கடவுள் பார்த்தனானண்ண”
“நிறைய படங்களில நடிச்சவர். இப்ப மாப்பிள்ளை ஆகிப்போட்டார். யாழ்ப்பாணத்தில நூலகத்திற்கு வெளியிலதான் படம் எடுப்பினம் என்டுதான் முதலில சொன்னவை. பின்ன நூலகத்துக்குள்ள அத்துமீறி படம் பிடிச்சவையாம். உதால கொஞ்சம் சிக்கலாப்போட்டுதாம்”.
“மாப்பிள்ளை மாட்டிப் போட்டவரே?”
“ஓம் சின்னராசு உந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசிகர்களிட்ட விறுவிறுப்பா கொண்டுபோத்தான் இந்த யாழ்ப்பாண சூட்டிங்” .
“நான் நினைச்சனான். இந்தியாவில சினிமா உலகத்தில பொம்புள இல்லாம இங்க எங்கட ஊருக்கு வந்தாரே என்டு நினைச்சனான்”;.
“உந்த நிகழ்ச்சியே ஒரு ஏடாகூடாதான். உந்த நிகழ்ச்சியில பெட்டையல ஆடவிட்டு வேடிக்கை பாக்கினம். உதில ஆர்யா பெட்டையளுக்கு முத்தம் கொடுக்குறது கட்டிபிடிக்குறது எல்லாம் வருகுது. பெட்டையளும் அவருக்கு முத்தம் கொடுக்குற அளவுக்கு போட்டவை.”
“கலாசார சீரழிவு என்டு சொல்லுங்கோ?”.
“உந்த சீரழிவு இங்கேயும் வந்துட்டு என்டுதான் கவலையா கிடக்குது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில கலாசாரம் ரொம்ப கெட்டுப்போட்டுது என்டு ஆக்கள் ரொம்ப கவலைப்படுகினம். உந்த நேரத்தில உப்பிடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில எங்கட ஊரையும் மாட்டிப்போட்டினம் என்டா எல்லாம் குட்டிச்சுவறாப் போடுமென்ன”.
“ஓமண்ண”
“உதில முசுப்பாத்தி என்னவென்டா ஆர்யா உண்மையிலேயே திருமணம் செஞ்சவராம். படத்துக்கு வாறதுக்கு முன்ன வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் செஞ்சவர். அந்த நேரம் அவருக்கு வேலை வெட்டியும் இல்லையாம். வீட்டால பிரச்சினை வந்து போட்டதால அவரது மனைவி ஒதுங்கிப்போனவளாம்”.
“இப்ப கல்யாணம் செஞ்சவர் என்டா திரும்பவும் சிக்கல்தான் என்ன”.
“என்ன கோதாரியோ தெரியேல்ல. ஆர்யாவை பாக்குறதுக்கும் அவருக்கு மாலைபோடவூம் எங்கட யாழ்ப்பாணத்து சனம் முண்டியடிச்சிக்கொண்டு போனைவையாம். உதில 50, 60 வயசு பெரியவையும் இருந்தினமாம். ஆர்யாவுக்கு மாலைபோட வேணுமென்டு மாலையளையும் அள்ளிக் கொண்டுதான் அவையள் வந்திருக்கினம். எங்கட ஆக்களின்ட யோசினை எங்க போகுதென்டு பார். இங்க ஆயிரத்தெட்டு பிரச்சினை கிடக்குது. எப்ப எந்த நேரத்தில எது நடக்குமென்டு தெரியாம கிடக்குது. உதுக்குள மாப்பிள்ளை வேட்டையும் நடக்குது. ஒரு காலத்தில தமிழ் நாட்டில இருந்து பத்திரிகையள் சஞ்சிகையள் வாறத தடை செஞ்சிருந்தினம. இப்ப பொம்பிளயல தேடி தமிழ் நாட்டில இருந்து இங்க வருகினம். தட்டிக்கேட்க ஆள் இருந்தா இப்பிடி தைரியமா வருவினமே. இவையோட கூடிக் கூத்தடிக்கத்தான் எங்கட ஆக்களுக்கு விருப்பம். உதைப் பாக்கேக்கை “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது. கருடா சௌக்கியமா” என்ட பாட்டுத்தான் ஞாபகத்துக்கு வருகுது.”

Comments