பட்ட மரத்தின் பேரானந்தம்! | தினகரன் வாரமஞ்சரி

பட்ட மரத்தின் பேரானந்தம்!


கொட்டகலை இர. தம்பித்துரை

காட்டின் நடுவே 
நிற்கும் நானொரு 
பட்ட மரம் 
என்னைச் சுற்றி 
ஏராளமான 
இள மரங்கள் 
பூத்துக் காய்த்து 
காற்றில் அசைந்தாடி 
மகிழ்ந்தன! 
ஊருக்கு நடுவே 
இருந்திருந்தால் 
ஊரார் என்னை 
வெட்டி விறகாய் 
சுட்டெரித்திருப்பர் 
என்னால் எவருக்கு 
என்ன பிரயோசனம் 
என்று நான் 
எண்ணிக் 
கொண்டிருக்க... 
பச்சைக் கிளிக்  
கூட்டமொன்று 
பறந்து வந்து 
என் மீது அமர்ந்தது 
என்னுடம்பின் 
பொந்துகளில் 
புகுந்தவைகள் 
கூடு கட்டி 
வாழத் தொடங்கின 
அணில்களிரண்டு 
என் மீது 
ஊர்ந்து ஓடி 
விளையாடின 
இளங்கொடியொன்று 
கொழு கொம்புத் 
தேடி ஆடியாடி 
என்னை நோக்கி 
ஆசையாய் 
தாவி வந்தது! 
என்னுடம்பெல்லாம் 
புல்லரித்து 
பூரித்துப் போனேன் 
தனக்கென 
வாழாது 
பிறருக்காய் 
வாழ்வதில் தான் 
எத்துணை 
பேரானந்தம்!  

Comments