மலைத்தாயே தேயிலையே... | தினகரன் வாரமஞ்சரி

மலைத்தாயே தேயிலையே...

மு. தருமன் – வட்டக்கொடை

ஒவ்வொன்றாய் நுகர்ந்து 
ஒவ்வொன்றாய் பார்த்து 
ஒவ்வொரு மலரிலும் தேன் 
சேர்க்கும் தும்பிகள் போல் 
பச்சைப் பந்தல் பரப்பி 
பசுந்தரையில் பாய்விரித்து 
படர்ந்திருக்கும் தேயிலையாள் 
தனித் தனியாய் அரும்பு விட்டு 
கூம்புபோல் குவிந்திருக்கும் பாங்கு 
மலை நாட்டின் வனப்பிற்கோர் மகுடம் 
ஒவ்வொரு மரத்திலும் பூப்பூவாய் 
மலர்கள் தளர்ந்து இலை பரப்பி 
இதழ் விரித்து சிரித்திருக்கும் காட்சி 
மலை நாட்டின் வனப்புக்கு மகுடம் 
மயிலும் குயிலும் மானும் மறையும் 
எங்கள் இறகும் எங்கள் புள்ளியும் 
தேயிலைக் கன்னிக்கு ஈடாக 
மாட்டாளென ஓடி மறைந்தன 
முன் இரவு பின்னிரவு படுத்து புரண்டு 
குதூகளித்த பனித்துளிகள் 
பருதியின் வரவு கண்டு முகம் 
சுளித்து பகலவன் இளஞ்சூடு 
தாங்காமல் ஆவியாய் மறைந்தான் 
காலைச்சங்கு கணீரென ஊத 
கையில் வேலும் தலையில் கூடையும் 
இளசுகளும் பெருசுகளும்
கேலியும் கிண்டலுமாய்  
தேயிலைக் குமரி செழித்திருக்கும் 
நிரைக்குச் சென்று தேயிலைப் பெண்ணை 
கை கூப்பி தளிர்கரத்தால் தளிர் 
ஆய்ந்து பொலியோ! பொலி என 
ஓல மிட்டு கூடையை வளைத்து 
பறித்த தளிரை பக்குவமாய் 
போடும் போது கங்கானி கணக்கர் 
மௌனப் புன்னகை பூத்தனர் 
அவர்கள் பறித்த கொழுந்தால் 
செல்வச் சீமாட்டியாய் 
சிளிர்க்கிறாள் இலங்கை மாதா!  

Comments