உள்ளூராட்சி தேர்தல் முடிவை காட்டி ஆட்சியை கவிழ்க்க சதிமுயற்சி | தினகரன் வாரமஞ்சரி

உள்ளூராட்சி தேர்தல் முடிவை காட்டி ஆட்சியை கவிழ்க்க சதிமுயற்சி

எம்.ஏ.எம். நிலாம்

நம்பிக்ைகயில்லா பிரேரணை தோல்வி கண்டதன் மூலம் மொட்டுக் கட்சியினர் பலமிழந்து போயுள்ளதாகவும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை வைத்து சிலர் ஆட்சியை கவிழ்த்து புதிய அரசை அமைக்க கனவு காண்கிறார்கள் எனவும் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஊடகப் பிரதானிகள், ஊடக நிறுவனங்களின் உயர் மட்டத்தினரையும் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக உங்களைச் சந்திக்கக் கிடைக்கவில்லையென்பதாலும், இன்றைய அரசியல் நிலைமை தொடர்பாகவும் இன்று உங்களுடன் கலந்துரையாட வேண்டிய தேவையேற்பட்டதாலுமே இந்தச் சந்திப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்த ஜனாதிபதி மிகவும் நிதானத்தோடும், அவசரப்படாமலும் பல்வேறுபட்ட விடயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களையும் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களையும் இங்கே தருகின்றேம்.

கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொகுதி மட்ட பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வ பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் சில அரச சார்பற்ற தனியார் ஊடக நிறுவனங்கள் பெறுபேறுகளை வெளியிட்டன. எனினும் உண்மையாக தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட பெறுபேறுகள் தொடர்பில் குறிப்பிடுவதாயின் இந்த பெறுபேறுகள் தொடர்பில் யார் எந்த பகுப்பாய்வுகளை முன்வைத்த போதும் தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு கட்சிக்கும் 40 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

40 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் முடியாமல்போன உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை தேசிய தேர்தல் பெறுபேறுகளுடன் ஒப்பிட்டு முன்வைக்கப்பட்ட அரசியல் ஆய்வுகள் மற்றும் விமர்சனங்கள் அதன் புள்ளிவிபர ரீதியான உண்மைத் தன்மையை வெளிப்படுத்தவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாம் கை, வெற்றிலை, குதிரை மற்றும் சேவல் ஆகிய 04 சின்னங்களில் போட்டியிட்டோம். அந்த 04 சின்னங்களுக்கும் சுமார் 15 வீத வாக்குகள் கிடைக்கப் பெற்றன. சிலர் இந்த தேர்தலின் பெறுபேறுகளை விளக்குகின்ற முறையை பார்க்கின்ற போது எமக்குத் தேவையாயின் அதனை பாராளுமன்றத் தேர்தல் ஒன்றுடன் ஒப்பிட முடியும். கிடைக்கப்பெற்றுள்ள வாக்குகள் பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கானதாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 30 ஆசனங்கள் கிடைத்திருக்கும். அதேபோன்று தாமரை மொட்டு கட்சிக்கு 102 ஆசனங்கள் கிடைத்திருக்கும். இதன் மூலம் விளங்க வருவது என்னவென்றால் இந்த வாக்குகள் பொதுத்தேர்தல் ஒன்றில் கிடைத்திருக்குமாயின் எந்தவொரு கட்சிக்கும் தனியாக ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்காது.

மறுபுறத்தில் அரசாங்கத்திற்கெதிரான கட்சி அவர்கள் பாரிய வெற்றியை அடைந்துள்ளதாக கூறினர். அந்த அரசியல் நிலைமையை கருத்திற் கொண்டு அவர்களுக்கு தற்போது அரசாங்கத்தை அமைக்க முடியும் என்று கூறிவந்தனர்.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அரசாங்கத்துடன் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற குழுவில் 41 பேர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென கூறிவந்தவர்களது எண்ணிக்கை அதிகரித்தது. அதே போன்று மறுபுறத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் விலக வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றபோது கட்சியின் மத்திய செயற்குழுவிலும் பாராளுமன்றக் குழுவிலும் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெளியேற வேண்டிய தேவை இல்லை என தீர்மானிக்கப்பட்டது.

ஏனென்றால் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி ஆகின்றபோது தேர்தலுக்கான காலம் நெருங்கி விட்டது. எனவே தேர்தலுக்குப் பின்னர் தீர்மானமொன்றை மேற்கொள்வதாகவும் அது வரை அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டிய தேவையில்லை என்றும் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த வகையில் தேர்தல் முடியும் வரை இணைந்திருப்பதற்கான முடிவு பெறப்பட்டது. தேர்தல் பெறுபேறுகளின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தவர்களின் அந்த கோரிக்கை வலுப்பெற்றது.

அதேபோன்று தேர்தல் பெறுபேறுகளுடன் பிரதமருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சினை உருவானது. இந்த தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த வாக்குகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினை ஒன்று உருவானது. அப்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் இருக்கும் பாராளுமன்ற அணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டுமென்று கூறி வந்த அணியும் அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரதமருக்கு எதிரான அணியும் இணைந்து தான் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் உடன்பாட்டுக்கு வந்தனர்.

பாராளுமன்றத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய போதும் எதிர்க்கட்சியில் இருக்கின்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக என்னை சந்திப்பதற்கு எழுத்து மூலம் கோரி மூன்று முறை என்னை சந்தித்தனர். அச்சந்திப்புக்களில் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதற்கு அவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென்று கூறி அதற்கு இடமளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது நான் அவர்களிடம் அரசியலமைப்பின்படி சாதாரணமாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய ஒரு பிரிவினர் இருப்பார்களாயின் அரசியலமைப்பு ரீதியாக அதனை நிருபிக்க வேண்டுமென்று கூறினேன். அவ்வாறு நிரூபிக்கும் பட்சத்தில் அது தொடர்பாக தீர்மானத்திற்கு வரவேண்டியது ஜனாதிபதியுடைய பொறுப்பாகும்.

அவ்வாறின்றி எனக்கு அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியாதென்பதையும் நான் அவர்களிடம் கூறினேன். அந்த வகையில் அவ்வாறு நிரூபிக்க முடியுமென்று இந்த மூன்று தரப்பில் இருந்தவர்களும் கலந்துரையாடி நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு சென்றனர். அண்மையில் வாக்களிப்பு இடம்பெற்றதை தொடர்ந்து நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த நிலைமையில் ஜனாதிபதி என்ற வகையில் எனது பொறுப்பும் கடமையும் என்னவென்றால் பாராளுமன்றத்தில் என்ன வகையான அரசியல் பிரச்சினைகள் இருந்தபோதும் நான் நாட்டுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டியது எனது கடமையாகும். அவ்வாறு பலப்படுத்துகின்ற போது எந்தவிதமான பேதங்களும் இன்றி பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பை நான் பெற்றுக்கொள்வேன். அரசாங்கம் பலவீனப்படுவதற்கு இடமளிக்க முடியாது.

அதேபோன்று பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர் பதவிகளின் கட்டமைப்புக்கு ஏற்ப நாம் ஒன்றுபடுவதன் மூலமேயன்றி தனியாக அரசாங்கத்தை அமைக்க முடியாதென்பதை எடுத்துக் கூறியிருக்கிறேன். 2015ஆம் ஆண்டு முதல் இந்த நிலைமை இருந்து வருகின்றது. அதிக பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 106 ஆசனங்கள் உள்ளன. அந்த 106 ஆசனங்களுடன் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாது. தனிக்கட்சியொன்றுக்கு அரசாங்கம் அமைக்க முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நான் கேட்டுக்கொள்வது அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக எந்தவொரு உறுப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முடியும் என்பதாகும். அவ்வாறு வருகின்றவர்களுடன் அரசாங்கத்தை பலமாக முன்னெடுத்துச் செல்லவுள்ளேன்.

கேள்வி: நாட்டில் அபிவிருத்திப் பணிகள் சமீபகாலமாக தடைப்பட்டுள்ளதே?

நாட்டில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியமாகும். உள்ளூராட்சி மன்ற தேர்தலின் காரணமாக பெரும்பாலான அமைச்சுக்களின் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

தேர்தல் முடிவடைந்த பின்னரும் கண்டியில் ஏற்பட்ட நிகழ்வுகள் மற்றும் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஆகியவற்றுடன் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஒன்று உருவானது. எனவே இந்த நிலைமையில் நாட்டில் இடம்பெற வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையிலும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட குழுக்கூட்டங்களை நடத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகின்றேன். தற்போது அந்த அமைதியற்ற சூழ்நிலை நிறைவடைந்து விட்டது. எனவே அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

கேள்வி : புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை குளறுபடியானதெனவும் பிரச்சினைகள் அதிகமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை நிவர்த்திக்க என்ன செய்ய உத்தேசம்?

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தலைவர்களை தெரிவு செய்து வருகின்றார்கள். அந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் இன்றுடன் நிறைவுக்கு வரும். இந்த தேர்தல் முறைமையில் உள்ள அரசியல் ரீதியான குறைபாடு காரணமாக சில இடங்களில் அதிகாரத்திற்கு வந்திருப்பவர்கள் மக்கள் தெரிவு செய்தவர்கள் அல்ல. இந்த நிலைமை மக்கள் கருத்துக்கு சவாலானதாகும். மக்கள் கருத்து அங்கீகரிக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது நல்லதல்ல.

எனவே இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தை உடனடியாக திருத்துவது அவசியமாகும். மேலும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்கள் எமக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய எண்ணிக்கையல்ல. அடுத்தது இதன் மூலம் உருவாகின்ற புதிய அரசியல் கலாசாரம் சிறந்ததோர் அரசியல் கலாசாரமாக தெரியவில்லை. தெரிவு செய்யப்பட்டிருக்கும் தலைவர் தெரிவுகளில் எவ்வளவு மோசடிகள் இடம்பெறுகின்றன என்பதை எமக்கு அனுமானிக்க முடியாது. எனவே இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த சட்டத்தை திருத்துவதன் மூலம் எட்டாயிரத்தை நாலாயிரமாக குறைக்க வேண்டுமென்று நான் அமைச்சரவைக்கு முன்மொழிகின்றேன். அடுத்த தேர்தலில் அதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை தயாரிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

கேள்வி : புதிய வருமான வரிச் சட்டத்தினால் அரசு ஊழியர்கள், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர் என்ற அச்சம் எழுதப்பட்டுள்ளது. அது குறித்து என்ன செய்யப் போகிறீர்கள்?

புதிய வரி முறைமை தொடர்பாக அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது. அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்டதொரு தொ​கையை வரியாக செலுத்த வேண்டுமென்றும் ஓய்வூதியம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அறவிடப்படவுள்ளதென்றும் போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. என்றாலும் அமைச்சின் செயலாளர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரை சம்பளம் பெறும் ஊழியர்களின் வைப்புத் தொகைகளிலிருந்து வரி அறவிடப்பட மாட்டாது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்த வரி முறைமையில் ஒருவருடைய வங்கிக் கணக்கில் மாதாந்த வட்டியாக ரூபா 1,25,000 அல்லது அதற்கு மேல் வட்டியாக ஈட்டப்படுமானால் மட்டுமே வரி அறவிடப்படும். மாதம் ஒன்றுக்கு ரூபா 125000 வட்டி கிடைக்க வேண்டுமென்றால் ஒருவருடைய கணக்கில் ரூபா 2 கோடி இருக்க வேண்டும். இவ்வாறு தான் வரி முறைமை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அரசாங்க ஊழியர்களுக்கு அவர்களது கணக்கில் 2 கோடி ரூபா சேமிக்க முடியாது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்தும் இத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

கேள்வி: சமூக ஊடகங்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது தொடர்பில் எத்தகைய நடவடிக்ைககளை எடுக்கவுள்ளீர்கள்?

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது அரசாங்க மற்றும் தனியார்துறை ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். மோதல் நிலைமையை தவிர்த்து நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களும் பெரும் பங்களிப்பை வழங்கின.

பிரச்சினைகள் ஏற்படுகின்ற வகையில் செய்திகளை வெளியிடாது அனைத்து ஊடக நிறுவனங்களும் செயற்பட்டன.

இந்த நிலைமை முற்றி இருக்குமானால் நாட்டில் அதனை கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலை இருந்திருக்காது. குறித்த சில நாட்களில் அவசரகால சட்டத்தையும் ஊரடங்கு சட்டத்தையும் பிறப்பித்து சமூக ஊடகங்களை தற்காலிகமாக நிறுத்தியமை தொடர்பாக அச்சந்தர்ப்பத்தில் சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டபோதும் பொதுவாக மக்கள் அதனை அங்கீகரித்தார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

Comments