கூட்டமைப்பு ஈ.பி.டி.பியுடன் இணைந்தமைக்கு சிறிதரனும் சரவணபவனும் பொறுப்பாளிகள் | தினகரன் வாரமஞ்சரி

கூட்டமைப்பு ஈ.பி.டி.பியுடன் இணைந்தமைக்கு சிறிதரனும் சரவணபவனும் பொறுப்பாளிகள்

உடன்பாடு இல்லையெனில் கூட்டமைப்பிலிருந்து வௌியேற வேண்டும் என்கிறார் விஸ்வலிங்கம் மணிவண்ணன்

செல்வநாயகம் ரவிசாந்த்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களாகவுள்ள சிறிதரன், சரவணபவன் போன்றவர்களும் கூட்டமைப்பு ஈ.பி.டி.யுடன் இணைந்தமைக்குப் பொறுப்பாளிகளே. அவர்களுக்கு உண்மையில் இந்த விடயத்தில் உடன்பாடு இல்லையென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும். எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கியுள்ள விசேட பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் வழங்கியுள்ள பேட்டியின் முழுமையான விபரம் வருமாறு...

கேள்வி:- யாழ். மாநகர சபை உட்படப் பல சபைகளிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அந்தக் கருத்தில் எந்தவித உண்மையுமில்லை என யாழ். மாநகரசபையின் புதிய மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்திருந்தார். இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன?

பதில்:- இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் தான் உண்மை தெரியும். ஆனால், ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்களின் செய்தியாளர் சந்திப்புக்களின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்கள். மாவை சேனாதிராஜாவும் தன்னுடைய செவ்வியொன்றில் தான் ஈ.பி.டி.பியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார். சுமந்திரனும் இதே கருத்தையே கூறியுள்ளார். ஆகவே, ஈ.பி.டி.பியுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தை நடாத்தியிருப்பது ஊரறிந்த இரகசியம்.

யாழ்.மாநகர சபையில் புதிய மேயர் தெரிவானதன் பின்னர் இடம்பெற்ற வேலணைப் பிரதேச சபை தவிர்ந்த அனைத்துச் சபைகளிலும் ஈ.பி.டி.பி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியது.

பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடுகள் எதுவும் எட்டப்படாமல் ஈ.பி.டி.பி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியிருக்க முடியாது. எனவே, இதற்கு ஆர்னோல்ட்டும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியும்தான் பதில் சொல்ல வேண்டும்.

வலிகாமம் மேற்குப் பிரதேச சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தவிசாளரையே ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் பிரேரிக்க இன்னொரு உறுப்பினர் அவரை வழிமொழிந்தார். நாங்கள் அதிகமான ஆசனங்களைப் பெற்ற சபைகளில் கூட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் எங்களுக்கு எந்தவித ஆதரவையும் வழங்காமல் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கே தங்களுடைய ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

எமது மக்கள் நடப்பவை எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆர்னோல்ட் தெரிவித்திருக்கும் கருத்துத் தொடர்பில் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

கேள்வி:- யாழ். மாநகர சபையில் இரகசிய வாக்கெடுப்புக் கோரப்பட்டமை பல்வேறு உள்நோக்கங்களை உடையதெனவும், மக்கள் தந்த ஜனநாயக ஆணைக்கு விரோதமானதெனவும் புதிய மேயர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

பதில்:- யாழ்.மாநகரசபைத் தேர்தலின் போதும் மக்கள் இரகசிய முறையிலேயே வாக்களித்திருந்தார்கள். எனவே, இரகசிய வாக்கெடுப்பு நடாத்துவது மக்கள் வழங்கிய ஆணைக்கு விரோதமானது என ஆர்னோல்ட் தெரிவித்திருப்பது அவருக்குச் சட்டம் தெரியாது என்பதை அர்த்தப்படுத்துவதாகவேயுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பு நடாத்துவதா? என்பதைச் சபை உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் சட்டம் தான் சொல்கிறது. மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பகிரங்க வாக்கெடுப்பையே நடாத்த வேண்டுமென ஆணை வழங்கவில்லை. மக்கள் இரகசிய முறையில் தமது வாக்குகளை வழங்கியுள்ள நிலையில் அவர்களுடைய ஆணை இரகசிய வாக்கெடுப்பிற்கானதாகவேயுள்ளது. இவ்வாறான முறையையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது தெளிவான விடயம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு மாறாகச் செயற்படக்கூடாது என கூட்டமைப்பின் தலைமைகளால் அச்சுறுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதேபோன்று யாழ். மாநகர சபையிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்கள். நீங்கள் இரகசிய வாக்கெடுப்பில் பங்கெடுத்தாலும் உங்கள் வாக்குச் சீட்டுக்களை தூக்கிக் காட்ட வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இவ்வாறான நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குச் சீட்டுக்களைத் தூக்கிக் காட்டிய போது குறித்த செயற்பாட்டை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கடுமையாகக் கண்டித்திருந்தார்.

எனவே, மக்கள் ஆணைக்கு முரணாக, உறுப்பினர்களின் மனச்சாட்சிக்கு விரோதமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுத்தப்பட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

கேள்வி :- யாழ். மாநகர சபையில் தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எதிர்க்கட்சியாகவுள்ளது. நீங்கள் சட்டத்தரணிகள் குழுவொன்றையே கொண்டுள்ளீர்கள். இந்நிலையில் கடந்த காலத்தில் சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களுக்கு எதிராக நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளீர்கள்?

பதில்:- நாங்கள் ஏற்கனவே தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவித்ததற்கமைய கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக முழுமையான விசாரணையை மேற்கொள்வதற்கான அழுத்தங்களை நாங்கள் பிரயோகிப்போம்.

யாழ். மாநகர சபையில் ஈ.பி.டி.பி காலத்தில் மாத்திரமல்லாமல் அதற்கு முன்னரும் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய வேண்டியிருக்கிறது.

யாழ். மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் பூரணமான விசாரணை நடாத்தப்பட வேண்டுமென வடமாகாண சபையினால் பணிக்கப்பட்டதன் பேரில் மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. முன்னாள் நீதிபதியொருவர் விசாரணை அதிகாரியாகவிருந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். அந்த அறிக்கை வடக்கு மாகாண சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் பல்வேறுபட்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை மாநகர சபை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அந்த அறிக்கைக்கமைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவிருக்கின்றோம். எனவே, இந்த விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

கேள்வி:- யாழ். மாநகர சபைக்கான மேயர் தெரிவில் உங்களுக்கு இடம் கிடைக்காமல் போயுள்ள நிலையில் தெரிவு இடம்பெற்ற நாளில் மாநகர சபை வளாகத்தில் ஊடகவியாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்த போது நான் தோல்வியடைந்தாலும் யாழ்.மாநகர சபையை முன்னிறுத்தி 'தூய்மையான நகரம்' எனும் தொனிப் பொருளில் தயாரித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு யாழ். மாநகர சபையில் ஆட்சியமைத்துள்ள தற்போதைய சூழலில் நீங்கள் கூறியிருப்பது முழுமையாகச் சாத்தியமாகும் எனக் கருதுகின்றீர்களா?

பதில்:- யாழ். மாநகர சபையின் புதிய மேயர் ஆர்னோல்ட்டும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்கினால் நாம் முன்வைத்த திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நான் குறித்த ஊடகவியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தேன். ஆகவே, அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் எங்கள் திட்டம் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படும்.

கேள்வி :- ஈ.பி.டி.பியுடன் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்கில் பல சபைகளில் ஆட்சியமைத்துள்ள நிலையில் இதுதொடர்பில் கட்சிக்குள் தற்போது கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சரவணபவன் ஆகியோர் இதற்கெதிராக குரல் கொடுத்திருக்கின்றார்கள். இவ்வாறான போக்கை நீங்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்?

பதில்:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியுடன் இணைந்து பல சபைகளில் ஆட்சியமைத்துள்ளமை தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே இவ்வாறான கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுத்துள்ள முடிவுடன் தாங்கள் உடன்படாதவர்கள் என்ற தோற்றப்பாட்டைக் காட்டித் தங்களை தூய்மையானவர்களாக இனம் காட்ட முற்படுகின்றார்கள்.

ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களாகவுள்ள சிறிதரன், சரவணபவன் போன்றவர்களும் கூட்டமைப்பு ஈ.பி.டி.யுடன் இணைந்தமைக்குப் பொறுப்பாளிகளே. அவர்களுக்கு உண்மையில் இந்த விடயத்தில் உடன்பாடு இல்லையென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வதற்குத் தயாரா? என்றால் இல்லையென்பதே பதிலாகவுள்ளது.

Comments