தன்மானத்தையும் தற்பெருமையையும் பேசும் தருணமல்ல இது | தினகரன் வாரமஞ்சரி

தன்மானத்தையும் தற்பெருமையையும் பேசும் தருணமல்ல இது

சில வாரங்களாக நீடித்த அரசியல் பதற்றமும் பரபரப்பும் ஓரளவு தணிந்து பெருமூச்சுவிடும் நிலையில் மற்றொரு அழுத்தம் தலையெடுத்திருக்கிறது. இலங்கை அரசியலில் சில வாரங்கள் பேசுபொருளாக இருந்தவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

கூட்டு எதிரணி என்ற பெயரில் செயற்படும் மஹிந்த சார்பு அணியினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்ைகயில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரத்தில் பிரதமர் தப்பிப்பிழைப்பாரா? என்ற செயற்கைப் பரபரப்பை உருவாக்கிய மஹிந்த சார்பு அணி, வாயடைத்துப் போய் நிற்கிறது. இந்த நிலையில் மற்றொரு நம்பிக்ைகயில்லாப் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது அரசியலில் மற்றொரு பேசுபொருளாகியிருக்கிறது.

பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் ஆகியோருக்கு எதிராகவே இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் பிரேரணையையும் கடந்த வெள்ளியன்று சபாநாயகர் கரு ஜயசூரிய கையேற்றிருக்கிறார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால, அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்ெகாடி, ஜோன் செனவிரட்ன, தயாசிறி ஜயசேகர, எஸ். பி. திசாநாயக்க ஆகிய ஏழு பேருக்கும் எதிராகவே இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்ைகயில்லாப் பிரேரணையின் எதிரொலியாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

கூட்டு எதிரணியினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை பிரதமருக்கு எதிரானதாகக் காட்டப்பட்டாலும் கட்சிகளை சின்னாபின்னமாக்கி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித்திட்டமாகவே இதனைப் பார்க்க முடிகிறது.

பிரேரணையை சபாநாயகர் பொறுப்பேற்றதன் பின்னர் ஆளும் ஐ.தே.க. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மஹிந்த சார்பு பொதுஜன பெரமுன ஆகிய மூன்று கட்சிகளினுள்ளும் பெரும் கொதிநிலை ஏற்பட்டதைக் காண முடிகிறது.

ஐ.தே.க.வைப் பொறுத்த வரைக்கும் 'தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போனது' என்ற முதுமொழிக்கு ஒப்பான நிலைக்ேக வந்திருக்கிறது. உட்கட்சி பூசலுக்குள் சிக்கியிருந்த கட்சி இப்போது ஒற்றுமைப்பட்டு ஒருமித்து நிற்கிறது.

ஆனால், பிரேரணையைக் கொண்டு வந்த கூட்டு எதிரணியும் (மஹிந்த சார்பு அணி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பிளவடைந்து ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கூட்டு எதிரணி பாரிய அரசியல் குறியோடு பிரேரணையை முன்னகர்த்தினாலும், அது அவர்களையே திருப்பித் தாக்கி இருக்கிறது. பிரேரணையை ஆதரிப்பதா? நிராகரிப்பதா? அதாவது பிரதமரை ஆதரிப்பதா? அல்லது எதிர்ப்பதா? என்ற இறுதி முடிவில் குழம்பிப்போன இவர்கள், இப்போது பசில் அணி, கோட்டா அணி என துண்டுதுண்டாகி இருக்கிறார்கள். பிரதமர் ரணிலை காப்பாற்ற வேண்டுமென பசில் தலைமையிலான அணியும் பிரதமரை அனுப்ப வேண்டுமென்று கோட்டா அணியும் செயற்பட்டன.

இதேபோல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பிரதமரை எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இப்போது பிளவடைந்து நிற்கிறது.

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அதிருப்தி வெளிப்பாடாகவே இவைகளை நாம் பார்க்க முடிகிறது.

பிரதமரை வெளியேற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்த ஐ.தே.கட்சியில் சிலரும், அரசியலிலிருந்து வெளியேறத் துடித்துக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அதிருப்தி குழுவினரும் பாராளுமன்றத்திலுள்ள மொட்டு அணியினரும் சேர்ந்தே பிரதமருக்கு எதிரான நம்பிக்ைகயில்லா பிரேரணைக்கு உடன்பாடு கண்டிருந்தனரென்பதே உண்மையாகும்.

பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்ெகடுப்பில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இறுதி நேரம் வரை கடுமையான பதற்ற நிலையிலேயே இருந்தன. எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாகச் செயற்படுமாறு ஜனாதிபதி இரு கட்சிகளுக்கும் (சு.க. + ஐ.ம.சு.மு) அறிவுறுத்திய நிலையில், உறுப்பினர்களிடையே தாறுமாறான பதற்ற நிலை இறுதிவரை நீடித்தது மட்டமல்ல, மாற்றுக் கருத்துக்களும் மலிந்து கிடந்தன.

இந்தக் கட்சிக்குள் சுதந்திரமாக எடுக்கப்பட்ட தனித்தனி முடிவுகள் இப்போது மற்றொரு நம்பிக்ைகயில்லாப் பிரேரணைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் பிரதமரின் மீது நம்பிக்ைகயில்லையென்று வாக்களித்து விட்டனர். 46 மேலதிக வாக்குகளை வழங்கி, பிரதமர் மீது முழுமையான நம்பிக்ைகயை வெளிப்படுத்தியிருக்கிறது பாராளுமன்றம்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைவான ஜனநாயகச் சர்ச்சை இது. அமைச்சர்களின் நம்பிக்ைகயீனத்தை ஏற்பதா? அல்லது பாராளுமன்ற அங்கீகாரத்தை ஏற்பதா? இந்த இரண்டு கேள்விகளுமே, பிரிட்டிஷ் காலணித்துவ கால எச்சசொச்சங்களோடு இயங்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை என்பதை மறுப்பதற்கில்லை.

அமைச்சர்களோ அல்லது எம்.பிக்களோ எடுத்த முடிவுக்கு மாறாக ஒட்டுமொத்த அங்கீகாரம் இருக்குமாக இருந்தால் அதுவே பாராளுமன்றத்தின் தீர்மானமாக இருக்கும்.

பிரதமர் மீதான நம்பிக்ைகயில்லா பிரேரணையில் இந்த நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. நம்பிக்ைகயில்லையென்று கூறிய பிரதமர் மீது ஆட்சியைத் தொடர முழுஅதிகாரம் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் நம்பிக்ைகயில்லை என்று கூறிய அமைச்சர்களின் நிலை என்ன? என்பது தான் இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் சர்ச்சை.

பிரதமரை எதிர்த்த அமைச்சர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அமைச்சர்களாகவே இருப்பதில் அர்த்தமில்லையென்கின்றனர் ஐக்கிய தேசியக் கட்சியினர். பிரதமர் மீது நம்பிக்ைகயில்லையென்று வெளிப்படையாக வாக்களிக்கும் போதே இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டோம் என்கின்றனர் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்.

இந்த ஜனநாயக இழுபறிக்கும் சர்ச்சைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்க முடியும். அவருக்குத்தான் அந்த அதிகாரமும் இருக்கிறது. ஆனால், அரசியலமைப்புக்கு உட்பட்டே இதற்கு தீர்வு காண்பேன் என்கிறார் ஜனாதிபதி.

மஹிந்த சார்பு, கூட்டு எதிரணி கொண்டு வந்த பிரேரணை பிரதமருக்கு எதிரானதாக இருந்தாலும் நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கான முதல் கட்ட நடவடிக்ைக என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

உண்மையில், பிரதமருக்கு எதிரான பிரேரணை வெற்றியீட்டியதல்ல இங்கே பிரச்சினை. இந்தப் பிரேரணையால் நாட்டில் ஸ்திரமன்ற ஓர் அரசியல் சூழல் உருவாகி இருக்கிறதென்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பிரேரணைக்கு மேல் பிரேரணை கொண்டு வருவதால் நிலைமை சுமுகமாகிவிடாது. ஸ்திரமான அரசியல் உருவானால்தான் பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். தேர்தலுக்கான அடுத்த களம் அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டுகின்றன. இந்த தேர்தல் வியூகங்களுக்குள் அகப்பட்டு விடாமல், நாட்டை ஸ்திரமாக வழிநடத்திச் செல்வதே ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பெரும் பொறுப்பாகும்.

எத்தனையோ சவால்களை சமாளித்து திறமையையும் ஆளுமையையும் வெளிப்படுத்திய இந்த இரு தலைவர்களுக்கும் இந்த நிலைமையைச் சமாளிக்கும் தகுதியும் தராதரமும் தாராளமாகவே இருக்கிறது.

என்றாலும், ஒரு யதார்த்தத்தையும் நாம் சொல்லியே ஆக வேண்டும். பிரதமரில் நம்பிக்ைகயில்லையென்று நாம் வாக்களித்தால் அந்த அரசிலுள்ள அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கிக் கொள்வதே அரசியல் நாகரீகம். அது தார்மீகமாகவும் இருக்கும்.

என்றாலும் இதுவொரு முரண்பாடாக தொடரக் கூடாது. ஆகவே, இந்த சிறு சர்ச்சையானது பிச்சைக்காரன் புண்போல தொடரக் கூடாது. தன்மானங்களையும் தற்பெருமைகளையும் உதறிவிட்டு விட்டுக் கொடுப்போடு ஒன்றுபட்டால் நல்லாட்சிக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

Comments