“எஹலபொலவை மட்டும் நம்பி விடாதீர்கள்!” | தினகரன் வாரமஞ்சரி

“எஹலபொலவை மட்டும் நம்பி விடாதீர்கள்!”

சி. கே. முருகேசு

கொர்ன்போலின் என்னும் பிரிட்டிஷ் போர்க்கப்பல் மூலமாக தென்னிந்தியாவின் வேலூர் நோக்கி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனும் அரச குடும்பத்தவரும் பயணித்துக் கொண்டிருக்கையில் கப்பல் கெப்டன் வில்லியம் கிரென்வில்லிடம் பேசும்போது தனது அரசியல் வாழ்வில் குறுக்கிட்ட சில ஆங்கிலேயர்கள் பற்றி மன்னன் குறிப்பிட்டிருக்கிறான். 1803ஆம் ஆண்டு ஆங்கிலேய படையுடன் நிகழ்ந்த போரில் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனின் கைதிகளாகியோரில் டேவி, ஹம்ப்ரி, ரம்லி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.

1803ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி அதிகாலையில் படைத்தலைவர்களாகிய இம்மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் மலே இனத்தவர்களும், ஆபிரிக்க கறுப்பர்களும் (நீக்ரோ) படைவீரர்களாக இருந்தனர். ஆங்கிலேய வீரர்களை கண்டிக்கு அழைத்துச் செல்லும்போது இந்த ஆபிரிக்க படை வீரர்களைப் பயன்படுத்தி வெள்ளை படைவீரர்கள் இருவர் இருவராகக் கொல்லப்பட்டனர்.

ஆங்கிலேயர் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் மீது ஆத்திரம் கொள்வதற்காக முதன்மந்திரி பிலிமத்தலாவ மேற்கொண்ட சூழ்ச்சியாக இது அமைந்தது. கண்டியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நோய்வாய்ப்பட்ட ஆங்கிலேய படைவீரர்களும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். மனிதாபிமானமற்ற சட்டவிரோதமான படுகொலைகளாக இவை வரலாற்றில் இடம்பெற்றது. இதனால் ஆளுநர் நோர்த் வெகுவாக ஆத்திரம் கொண்டிருந்தான். தம்மீது ஆங்கிலேயரை தூண்டிவிடுவதற்காக பிலிமத்தலாவை மேற்கொண்ட சூழ்ச்சியே இது என கப்பல் பயணத்தின்போது கவலை தெரிவித்தான் இராஜசிங்கன்.

வட்டபுலுவ என்னுமிடத்தில் கைது செய்யப்பட்ட மேஜர் டேவி பலத்த பாதுகாவலுடன் கண்டி நகருக்கு மேற்புறமாக மலையுச்சியில் அமைந்துள்ள மீகொன் அறம்ப என்னுமிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தான். பின்னர் வேறு சில இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தான். கண்டி பிராந்தியத்தில் ஹூரிகடுவ தாப்பான என்னுமிடத்தில் டேவி வசித்து வந்தபோது அவன் கண்ட கனவு பற்றி மன்னன் இராஜ சிங்கன் நினைவு கூர்ந்தான்.

இரவு நித்திரையில் இருந்த மேஜர் டேவியின் கனவில் கண்டி அரண்மனையில் அரசனின் சயன அறை தீப்பற்றி எரிவதாகத் தோன்றியது. உடனே படுக்கையை விட்டெழுந்த டேவி; ஓர் அரச சேவகன் மூலமாக மன்னனுக்கு இதனை அறிவித்தான்.

டேவி கனவில் கண்டது போன்று மறுதினம் மன்னனின் படுக்கையறையில் தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று நிகழ்ந்தது.

இச்சம்பவத்தினால் வியப்புற்ற மன்னன்; டேவியின் இந்த மனிதாபிமானம் குறித்து நெகிழ்ந்தான். உடனடியாக டேவியை அரண்மனையை அண்மித்த ஓர் இடத்தில் இருந்த வீடொன்றில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தான்.

எனினும் இப்புதிய வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் போது டேவி ஆங்கிலேய தரப்புடன் இரகசிய கடிதத்தொடர்புகள் வைத்திருந்ததாக தகவல் கிடைக்கவே மன்னன் இராஜசிங்கன் டேவியுடன் மீண்டும் மனக்கசப்புற்றான்.

டேவி ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எழுதிய கடிதமொன்று பலன பாதுகாப்பரணில் காவலர்களிடம் சிக்கியது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு மன்னன் அவனுக்கு மரண தண்டனை விதித்தான். அக்கால கட்டத்தில் ஆங்கிலேயரின் புலனாய்வுத் துறையின் திறமை மிக்கவனும் அதிகாரியுமாகிய ஜோன் டொய்லியுடனேயே டேவி மேற்படி இரகசிய தொடர்புகளை மேற்கொண்டிருந்தான்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட மேஜர் டேவி; கண்டியில் வசிக்கும்போது மல்வத்தை விகாரையின் பிரதம குரு வண. கொப்பேகடுவ தேரருடன் நட்பு பூண்டிருந்தான். அரண்மனையின் உயர் பிரதானிகள் சிலரும் டேவியுடன் நட்பு கொண்டிருந்தனர். அவர்கள் டேவியின் நற்பண்புகளை எடுத்துக் கூறி அவனுக்கு உயிர்ப்பிச்சையளிக்குமாறு அரசனை வேண்டினர்.

மன்னன் இராஜசிங்கன் அரைமனதுடன் இக் கோரிக்கையை ஏற்று மரண தண்டனையிலிருந்து டேவியை விடுவித்த போதும், டொய்லியின் தூதுவனாகிய லொன்சப்புவையும், டேவி தங்கியிருந்த வீட்டு உரிமையாளனாகிய கம்மகே என்பவனையும் இரகசிய கடிதத்தை எடுத்துச் சென்ற லால என்பவனையும் கழுவில் ஏற்றி மரண தண்டனையை நிறைவேற்றினான். மன்னனால் மன்னிக்கப்பட்ட டேவி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னனின் நம்பிக்கைக்குரிய முத்தல்சாமி என்பவனின் மேற்பார்வையில் வைக்கப்பட்டான்.

தன்னுடன் இரகசிய கடிதத் தொடர்புகளை மேற்கொண்டிருந்த டேவியை இராஜசிங்கன் கைது செய்தமை மற்றும் அவனுக்கு மரண தண்டனை விதித்தமை காரணமாக சினமுற்றிருந்த டொய்லி பின்னாளில் போமுறேயில் எக்னெலிகொட மற்றும் அவனது வீரர்களால் மன்னன் சித்திரவதைக்குள்ளானபோது அவனையும் அவளது மனைவியரையும் காப்பாற்றினான் என்பதை நன்றி பெருக்கோடு கப்பல் பயணத்தில் நினைவு கூர்ந்தான் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் என்றெழுத்தியிருக்கிறான் வில்லியம் கிரென்வில்.

தனது பதினேழாண்டுகால அரச வாழ்க்கையை மீட்டில் பார்த்து சோர்வடைந்த மன்னன் இராஜசிங்கன், 1816 ஜனவரி 30ஆம் திகதி திடீரென சுகவீனமுற்றான். கப்பல் தலைவனும், மன்னனின் உறவினர்களும் பல தடவைகள் எடுத்துக் கூறியும் கப்பல் வைத்தியரிடம் சிகிச்சை பெற மன்னன் மறுப்பு தெரிவித்தான். பின்னர் கிரென்வில் சனி உபாதையை போக்குவதற்காக மூக்கில் வைத்து உறிஞ்சக் கூடிய ‘ஸ்மெலின் சோல்ட்’ என்ற மருந்து குப்பியை அரசனிடம் கொடுத்தான்.

கப்பல் தலைவன் வழங்கிய குப்பியைக் கையில் எடுத்த மன்னன், “வேளைக்கு எவ்வளவு அருந்த வேண்டும்” எனக் கேட்டான். “இது குடிப்பதற்கல்ல. நாசி மூலம் உறிஞ்சுவதற்கான மருந்து” என பதில் அளித்தான் கப்பல் தலைவன். பல தடவைகள் மூக்கினால் அம்மருந்தை உறிஞ்சிய இராஜசிங்கனின் தும்மல் அந்த இடத்தை அதிரவைத்தது. உப்புத்தன்மையின் சக்தியினால் சளி அகன்று தலைவலி குறைவடைந்ததென மன்னன் கிரென் வில்லிடம் பின்னர் கூறியிருந்தான்.

அச்சந்தர்ப்பத்தில் அரசன் அணிந்திருந்த ஆடைகள் மிகுந்த அழுக்குடன் காணப்பட்டன. அவற்றை கழுவிச் சுத்தம் செய்வதற்கு கிரென்வில் அனுமதி வேண்டியபோது அதனை நிராகரித்தான் இராஜசிங்கன். “இது எனக்கு போதும்!” என சலிப்புன் கூறிவிட்டு சமுத்திரத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கினானாம். முன்னாள் வேந்தன். நீண்ட நேரம் மௌனம் கலைந்து கிரென்வில்லிடம்.

“கப்பல் எந்த நாட்டை நோக்கி போகின்றது” எனக் கேட்டுவிட்டு “நிச்சயமாக கப்பல் இங்கிலாந்துக்கு போகப் போவதில்லையென்று மட்டும் நான் நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறான் ராஜசிங்கன்.

அவனது கணத்துப் போயிருந்த குரலும், கலங்கிய கண்களும், வாடிய முகமும் கப்பல் தலைவன் கிரென்வில் உள்ளத்தை நெகிழ்ச்சியுடைய வைத்ததாம்.

“இக்கப்பல் மதராஸ் நோக்கிய பயணிக்கின்றது. இலங்கை அரசு தங்களுக்கு சகல வசதிகளும் கூடிய புதிய வாழ்க்கையை அங்கு அமைத்துக் கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளது. கவலை வேண்டாம்!” என கிரென்வில் மன்னனின் மனக்கவலைக்கு மருந்தளித்தான்.

இந்த வார்த்தைகளின் பின்னர் மன்னனின் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்ததாகவும் அது கவலை ரேகைகள் படந்த முகபாவமாக இருந்ததாகவும் கிரென்வில் குறிப்பிடுகிறான். தனக்குள் எதையோ கூறிக்கொண்டே அங்குமிங்குமாக நடக்கலானான் இராஜசிங்கன். மன்னனை ஓய்வெடுக்குமாறு வேண்டிக் கொண்ட கிரென்வில் அங்கிருந்து விலகிச் சென்றான்.

2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி உதயமாகியது. சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்காக கப்பல் தலைவன் தனது அறைக்கு வருகை தருமாறு மன்னனை அழைத்தான். மனைவியர் சகிதம் இராஜசிங்கன் அவ்வறைக்குள் பிரவேசித்தான். கப்பலின் சுக்கானுக்கு அருகில் உள்ள யன்னல் வழியே வெளியில் நோட்டமிட்ட மன்னன்; கப்பல் எவ்வாறு செலுத்தப்படுகின்றதென வினவலானான். கப்பல் தலைவன் தாமே கப்பலைச் செலுத்தி விளக்கமளித்ததைத் தொடர்ந்து இயந்திரங்களின் செயற்பாடுகள் குறித்த தமது ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினான்.

அதன்பிறகு, ஆளுநர் ரொபட் பிறௌன்றிக்; தாம் கொழும்பிலிருந்து புறப்படும் போது ஏன் அங்கு பிரசன்னமாகவில்லையென வினவினான் மன்னன். அது பற்றி தமக்கு எதுவும் தெரியாதென பதிலளித்தான் கிரென்வில்.

“எதற்கும் ஆளுநர் அரசன் ஒருவனின் பயணத்தின்போது அங்கு சமூகமளித்து மகிழ்ச்சியோடு பிரியாவிடை அளித்திருக்கலாம் எனவும் அதனால் ஆளுநர் பதவிக்கு எந்தவிதத்திலும் அவமரியாதை கிட்டப் போவதில்லையெனவும் தனது கருத்தினை வெளிப்படுத்தலானான் அரசன். அதனைத் தொடர்ந்து மிகுந்த வெறுப்புடன் கூடிய முகத்தோடு; எஹல பொல பற்றி விசாரித்தான்.

எஹலபொல தற்போது இருக்கும் இடம்பற்றி கிரென்வில் குறிப்பிட்டபோது,

“அவனிடம் மிக கவனமாக இருக்க வேண்டும். ஒரு தந்தையைப் போல நான் அவனை கவனித்து வந்தேன். ஆனால் தொடர்ச்சியாகவே அவன் எனக்கு பலவழிகளிலும் துரோகம் இழைத்த வண்ணமே இருந்திருக்கின்றான். அவனை மாத்திரம் நம்பிவிடாதீர்கள்!” என கொன்போலிஸ் கப்பலின் தலைவனிடம் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் விடுத்த எச்சரிக்கை பிரிட்டிஷ் அரசுக்கு விடுத்த எச்சரிக்கையாக பின்னர் வரலாறு நிரூபித்தது.

அமைச்சர் மொல்லிகொடை பற்றி விசாரித்த போது, “அவன் நம்பிக்கைக்குரியவன். அவனை நீங்களும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கலாம். ஆனால் எஹலபொல என்றாவது உங்களுக்கு நிச்சயம் குழி பறிப்பான்!” என மீண்டும் வலி யுத்திய அரசன் தனது கடந்த கால கசப்பான நிகழ்வுகளிலிருந்து விடுபட இடமளித்து மேற்கெண்டும் எதனையும் வினவாமல் எழுந்து சென்றான் கிரென்வில். இதனையெல்லாம் கவனத்தில்கொள்ளாது நகர்ந்தது கொன்வோலிஸ்,

(தொடரும்)

Comments