வடக்கு வாசல் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு வாசல்

“என்ன சின்ன ராசு சிரிச்சுக் கொண்டே வாறனீ...”

“நினைக்க நினைக்க சிரிப்பு வருதண்ணே”.

“வயிறு வலிக்க சிரிக்கவென்டு அப்படி என்ன நடந்து போட்டுது”

“நேத்து ஒரு படம் பாத்தனான் அதை நினைக்க நினைக்க சிரிப்புத்தானண்ண”

“கோமாளி படம் பாத்தனியோ?”

“உங்களுக்கு எப்படியண்ண தெரிஞ்சுது”

“நீயும் உன்ட ஆக்களும்; தியேட்டருக்கு போகேக்கை கமலா டீச்சர் கண்டு போட்டு எங்கட செல்லத்திற்கு சொன்னவாவாம். எங்கட செல்லம் உன்னை ஏசிக்கொண்டிருந்தவள்”

“ஏன் அண்ணே ஏதும் வில்லங்கமா போட்டுதோ?”

“வில்லங்கம் ஒண்டுமில்ல சின்னராசு... செல்லத்தையும் கூட்டிப்போகேல்ல என்டுதான் பேசிக்கொண்டிருந்தவை”

“அடுத்த முறை போகேக்க செல்லத்தாவையும் கூட்டிப் போவம் நீங்களும் வாருங்கோவன்”

“நான் உந்த படத்தை கொழும்பிலேயே பாத்துப்போட்டனான்”

“பாத்துப் போட்டியலோ, சொல்லாம கமுக்கமா இருந்தனீங்கள் என்ன?. உது சரியண்ணே எப்படி படம். எனக்கென்டா நல்லா பிடிச்சுதண்ணே. இந்தக் கிழமையும் போவினமாம். செல்லத்தையும் கூட்டிக்கொண்டு நாளைக்கு போவமே”

“போவம் போவம். அப்புறம் படத்தைப் பற்றி சொல்லன”

“என்ன சொல்லக் கிடக்கு. சிரிச்சி சிரிச்சி வயிறுதான் வலிச்சுது”

“தியேட்டரில கூட்டமோ”

“பெரிசா சனம் என்டு இல்ல. ஆனா பரவாயில்ல”

“அண்ணே எங்கட கதைத்தான் அண்ணே படமா எடுத்திருக்கினம”;.

“எங்கட கதையோ?”

“எங்கட அடுத்த வீட்டுல குணாளன் மாஸ்டர் இருந்தவையல்ல”

“ஓம் ஓம் போன வருஷம்”

“போன வருஷந்தான். மாஸ்டரின்ட பெண்சாதியின்ட தமக்கை ஜெர்மனியில இருந்து வந்தவையில்லே. எங்கட அக்கா ஜெர்மனியில் இருக்கிறவை. அடுத்த மாசம் வாறவை. வந்தவையென்டா ஐ போன், லெப்டொப், கம்பியூட்டர் என்டு பெட்டி பெட்டியா வரும் என்டு ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவை. ஆனா பரிவாரமா வந்து இறங்கின பிறகு தான் வெறுங் கையோட வந்திருந்தவை என்டு தெரிஞ்சுது. ஐ போன், லெப்டொப் பின்னால கப்பலில வருகுது என்டு சொல்லி ஒருமாசம் விருந்து சாப்பாடு தான்”.

“பிறகு?”

“பிறகென்ன டாட்டாதான். ஒரு சாமானும் வரேல்ல”.

“உண்மையில நடந்துதே??”

“பின்ன”

“உதே போலத்தான் உந்த படத்திலயும் நடக்குது”

“40 வருஷத்திற்கு முன்ன வந்த கோமாளிகள் பாத்தனியோ?”

“அதையும் பாத்தனான் அப்ப எனக்கு 10 வயது. ரெண்டு கோமாளியரும் நல்லா சிரிக்க வைச்சினம். சிரிப்பு மட்டுமில்ல அண்ணே ஆடவும் வைச்சினம் படத்தில பாட்டு போகேக்க பெடியல் கைதட்டி ஆடுகினம் எங்கட கணேசும் ஆடினவன் பாட்டெல்லாம் அப்படியண்ணே, எங்கட வீட்டு ஆட்களுக்கு நல்லா புடிச்சதண்ணே”

“நடிப்பு எப்பிடி?”

“படத்தில பத்மநாதனா வாறவர் யார் அண்ணே??

“அவரிண்ட பெயர் கிங்ரட்ணம். அவர் தான் படத்தின்ட டைரக்டர்”;.

நடிச்சுக்கொண்டே டைரக்ட் செஞ்சவரென்ன. அவரின்ட மனிசியா வாரது”

“அது சத்தியப்பிரியா டிவியில செய்தி எல்லாம் வாசிச்சவ”

“எங்கேயோ பார்த்திருக்கிறன் என்டு எனக்கு ஞாபகமா கிடந்துது. அப்புறம்தான் சக்தி டி.வியில என்டது ஞாபகம் வந்தது. ராஜா கணேசன் உடம்பை நெளிச்சி; நெளிச்சி நாகேஸ் மாதிரி ஆடினவர். பாவா என்டவர் பாக்கேக்க பயமாக் கிடந்துது. பத்மநாதனை கடத்தி போனவை ஆளை முடிச்சுப் போடுவினம் என்டு தான் நினைச்சனான் எல்லாம் கொமடியா கிடந்துது. அவரின்ட அந்த பொட்டி அதைத்தான் அண்ணே எல்லாம் தேடி தேடி ஓடுகினம் மட்டக்களப்புஇ யாழ்ப்பாணம் எல்லாம் போகினம்.

யாழ்ப்பாணக் கோட்டையை எல்லாம் நல்லா காட்டுறவை கடைசியில ஒரு செய்தியையும் சொல்லுவினம் என்ன?”

“ சினிமாப்படம் என்டா ஒரு நல்ல செய்தியை சொல்லத்தான வேணும்”

“ஓம் அண்ணே தமிழ் பெட்டையள் எங்கட கலாசாரப்படி நடந்துகொள்ள வேணும். நாகரிகத்தில மயங்கி போடக்கூடாது என்டு சொல்லுவினம்”.

“உதைப்போல பெடியளுக்கும் சொல்லுவினமே”

“ஓம் அண்ணே. நீங்கள் படம் பாரத்தியள்; மறந்துபோட்டியளோ. தமிழ் பெடியள்மார் உழைச்சி சாப்பிட வேணும். பெற்றௌரின்ட உழைப்பில சாப்பிடக்கூடாதென்டு புத்திமதி சொல்லுவினம். முசுப்பாத்திக்கு இடையில நல்ல விஷயத்தையும் சொல்லுகினம்”.

“அப்ப உனக்கு நேத்து நல்ல முசுப்பாத்தியா போட்டுதென்ன?”

அதை ஏன் கேட்குறியள். நேத்து படம் பாரத்துப்போட்டு இன்டைக்கும் சிரிக்கிறன் என்டா எப்படியென்டு பாருங்கோவன். இந்தக் கிழமையும் ஒரு இலங்கை தமிழ் படம் ‘இது காலம்’ என்டு போட்டு கிடக்கு. ஞாயிற்றுக்கிழமை நாங்கள் போறனாங்கள். நீங்களும் செல்லக்காவை கூட்டிக்கொண்டு வாருங்கோவன்”.

வழக்கமா நீ கேள்வி கேட்பனீ. நான் விஷயங்கள விளக்கப்படுத்துவனான். இன்டைக்கு நீயே எல்லாம் விளங்கப்படுத்திப் போட்டனீ.”

“படம் பாரத்ததில ஒரே சந்தோஷமண்ண”

“அதுவும் இலங்கை படம் என்ன”

“ஒரே நேரத்தில ரெண்டு இலங்கை படம் ஓடுது என்ன? இதுவரையில நான் கேள்விப் படேல்ல”

நானும் தான். உப்படி வரத் தொடங்கிட்டுது என்டா எங்கட நாட்டில தமிழ் சினிமா நல்ல இடத்திற்கு வந்து போடுமென்ன”

எல்லாம் ரசிகர்களின்ட கையிலதான் கிடக்குது சின்னராசு. அவை மனசு வைச்சவையென்டா எல்லாம் ஜெயம் தான்.”

“சரியாச் சொன்னியள்”.

Comments