இங்கிரிய தோட்டத்தின் 24 குடும்பங்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் வீட்டுத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

இங்கிரிய தோட்டத்தின் 24 குடும்பங்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் வீட்டுத் திட்டம்

 இங்கிரிய மூர்த்தி

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய தோட்டம் கீழ்ப்பிரிவில் கடந்த 17 வருடங்களுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டு வந்த 24 தொழிலாளர் குடும்பங்களுக்கு தற்பொழுது விடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

பிரதேச அரசியல்வாதிகள் அதிகாரிகள் தொழிற்சங்கத் தலைவர்கள் என பலரின் கவனத்துக்கும் பல தடவைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் எந்த ஒரு கவனமும் செலுத்தப்படாத நிலையில் ஹொரணை தொகுதியின் ஐ.தே.க பிரதான அமைப்பாளரான ஹேமந்த விக்கிரம ஆரச்சியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக விடிவு கிடைத்துள்ளதாக இந்த குடும்பங்கள் தெரிவித்துள்ளன. நீண்டகாலமாக குடிநீர் மற்றும் மலசல கூட வசதியின்றி இடிந்துவிழும் நிலையில் காணப்பட்ட லயன் குடியிருப்புக்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உயிராபத்தை எதிர்நோக்கியவர்களாக பொழுதைக் கழித்து வந்த 19 தமிழ்க் குடும்பங்களுக்கும், 5 சிங்கள குடும்பங்களுக்கும் இந்திய அரசின் உதவியுடன் வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வசித்து வந்த லயன் குடியிருப்புக்களுக்கு அருகில் அமைந்துள்ள அரச காணியில் சுமார் ஒன்றரை ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஏழு பேர்ச் காணி பகிர்ந்தளிக்கப்பட்டு 5 லட்சம் ரூபா செலவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. ஒரு வரவேற்பறை 2 படுக்கை அறைகள், சமையலறை, மலசல கூடம் அடங்கியதாக அமைக்கப்படும் இந்த வீட்டுத்திட்டத்துக்கு கட்டம் கட்டமாக நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டு பயனாளிகளின் முயற்சியில் தாங்களாகவே வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

காணியில் இருந்த மரங்கள் மற்றும் கற்களை அகற்றி பூமியை வெட்டி சமப்படுத்திக் கொடுக்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்பமும் 1400 ரூபா வழங்கி டோசர் இயந்திரத்தின் மூலம் நிறைவு செய்யப்பட்டு அவரவருக்கு உரிய காணி கையளிக்கப்பட்டு வீடுகட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் சீமெந்து, மணல், கருங்கல், கம்பி உட்பட கட்டடப் பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுவதால் 5 லட்சம் ரூபா செலவில் பாஸ் கூலியுடன் வீடொன்றை கட்டிக் கொள்வது சிரமமான காரியமாகும் என தெரிவித்துள்ள பயனாளிகள் இது வரை காலமும், பலருக்கும் எங்களின் அவல நிலை குறித்து தெரிந்திருந்தும் தெரியாதது போல் கவனம் செலுத்தாது ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த உதவி பேருதவியாகும் என தெரிவித்துள்ளனர்.

மறைந்த அமைச்சர் எஸ். தொண்டமான் மேற்கொண்ட நடவடிக்கையினால் 2000ம் ஆண்டில் இங்கு வசித்து வந்த குடும்பங்களில் 54 குடும்பங்களுக்கு தலா 15 பேர்ச் காணி பெற்றுக் கொடுக்கப்பட்ட போதிலும் தொழிற்சங்க செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட பலர் குறுக்கு வழியில் காணியைப் பெற்றுக் கொண்டதன் காரணமாகவே இந்த 24 குடும்பங்களுக்கு கிடைக்கவிருந்த காணி கிடைக்காமற் போய்விட்டது என தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இந்தத் தோட்டக்காணி ஒதுக்கப்பட்டு பிரதேச செயலகம், பிரதேச செயலாளரின் வாசஸ்தலம், விதாதா வளநிலையம், சமுர்த்தி வங்கி இலங்கை மின்சார சபையின் பாவனையாளர் பிரிவு, மிருக வைத்திய அதிகாரி காரியாலயம், ஆயுர்வேத வைத்திய நிலையம், கலாசார நிலையம், கலை அரங்கம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என கட்டடங்களாக காட்சி தருகின்றபோது இவர்கள் வசித்து வந்த மோசமான லயன் குடியிருப்புக்கள், இவர்களின் அவல நிலை குறித்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அறிந்திருந்த போதிலும், கண்டு கொள்ளாதவர்கள் போலவே நடத்து கொண்டனர். அவர்களின் நெஞ்சைத் தொடவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.

Comments