உள்நாட்டு இறைவரிச் சட்டத்துக்கான மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் - பிரதமர் | தினகரன் வாரமஞ்சரி

உள்நாட்டு இறைவரிச் சட்டத்துக்கான மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் - பிரதமர்

உள்நாட்டு இறைவரி தொடர்பான புதிய சட்டத்தின் சில ஒழுங்குவிதிகள் தொடர்பாக அரசாங்கம் மீளாய்வு செய்யும் எனவும் மேற்படி ஒழுங்கு விதிகள் பற்றி தனியார்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி மாற்றங்கள் தேவைப்படின் அதுபற்றி பரிசீலிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சார்க் அமைப்பின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் புதிய தலைவராக ருவன் எதிரிசிங்க தலைமைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய நிலையில் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கான நிதி சிறந்த நியதிகளின் கீழ் தேவைப்படுகிறது. எனவே DFCC,NDB, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றுடன் இதுபற்றி பேசவுள்ளோம். அவ்வாறான பேச்சுவார்த்தையின்போது புதிதாக அபிவிருத்தி நிதி வங்கியொன்றை உருவாக்குவது பற்றி கலந்தாலோசிக்கவுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட இந்த அபிவிருத்தி நிதி வங்கியானது அபிவிருத்திக்கு உதவவும் வளர்ந்துவரும் வியாபாரங்களுக்கு உதவவும் கூடிய தனியான ஒரு வங்கியாகும். இலங்கையைப் பொறுத்தவரை ஆடை கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு துறைகளில் மட்டுமே இலங்கைக்கு உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது.

ஏனைய துறைகளும் இந்த இரண்டு துறைகளின் வளர்ச்சியை பின்பற்ற வேண்டும். உலகின் எதிர்கால வர்த்தகம் இலங்கையை மையப்படுத்திய பிராந்தியத்திலேயே இடம்பெறவுள்ளது. எனவே இந்த வாய்ப்பை சரியான முறையில் இலங்கையர்களாகிய நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். சார்க் அமைப்பின் உண்மையான ஆற்றல் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. சார்க் அமைப்பில் 2 பில்லியனுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்கிடையிலான வர்த்தக முயற்சிகள் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட இந்த சார்க் பிராந்தியத்தில் திறமையான இளைஞர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க பிராந்தியத்திலுள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Comments