பிரதமரை வீழ்த்துவதற்கான நம்பிக்கையில்லாப் பிரேரணை | தினகரன் வாரமஞ்சரி

பிரதமரை வீழ்த்துவதற்கான நம்பிக்கையில்லாப் பிரேரணை

மகேஸ்வரன் பிரசாத்

பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுாராட்சித் தேர்தல் முடிவுகளின் பின்னர் மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்ட சலசலப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வரை இட்டுச் சென்றுள்ளது. கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் பரபரப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளன. பிரேரணைக்குப் பின்னரான அரசியலை எடுத்துக் கொண்டால், தனியொரு கட்சியின் ஆட்சியா? புதிய அமைச்சரவையா? தேசிய அரசாங்கம் தொடருமா? போன்ற கேள்விகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. அரச தலைவர்கள் இருவர் தரப்பிலிருந்தும் இதுவரை எந்த உறுதியான செய்திகளும் வெளியாகாத நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றனர். ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகள் தொடர்கின்றன.

இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, அரசியலில் மூன்று முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ள, முதலாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், கூட்டணி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும் பலப்படுத்தியுள்ளது.

இரண்டாவது, ஏற்கனவே இரு அணிகளாகவிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி தற்போது மூன்று அணிகளாக உடைத்துள்ளது.

மூன்றாவது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பலப்படுத்தியும் பலவீனப்படுத்தியுமுள்ளது.

ஆளும் தரப்பிலுள்ள சு.க முக்கியஸ்தர்களை தமது ஆதரவாளர்களாக மாறியமை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் பசில் அணி, கோட்டா அணி என இரு அணிகள் உருவாகியிருப்பது என்பன குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தற்பொழுது தோன்றியுள்ள அரசியல் சூறாவளியில் தனது தலைமையிலான கட்சி மேலும் அடிபட்டுச் சென்றுவிடாது பாதுகாக்க வேண்டிய பாரியதொரு பொறுப்பும் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ளது.

திறைசேரி பிணைமுறி மோசடியை பிரதானமாகக் கொண்டு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். நான்கு சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 54 பேரின் கையெழுத்துடன் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இத​ைன உடனடியாக விவாதத்துக்கு எடுத்து முடிவொன்றைக் கண்டுவிட விரும்பிய பிரதமர், ஏப்ரல் 4ஆம் திகதி விவாத்தை நடத்துவதற்கு இணங்கினார். விவாதத்துக்கான நாள் குறிக்கப்பட்டதிலிருந்து கொழும்பு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொள்ளத் தொடங்கியது. பிரதமர் மீது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்புடன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றிபெற்றுவிடுவோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அடித்துக் கூறினர்.

மறுபக்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுகூடி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முறியடிக்க திட்டம் தீட்டியது. அத்துடன் நின்றுவிடாது தமது தலைவர் மீது காணப்பட்ட அதிருப்தியை களைவதற்கான சந்தரப்பமாகவும் ஐ.தே.க இதனைப் பார்த்தது. கட்சியின் தலைமைத்துவத்துவ மாற்றம் மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டது. தனக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து எப்படியாவது தப்பியாக வேண்டும் என்ற நிலையிலிருந்த பிரதமரும், ஐ.தே.க தலைவருமான ரணில் விக்ரமசிங்க கட்சியின் மறுசீரமைப்புக்கு ஒப்புக் கொண்டார். ஏப்ரல் மாதத்தில் கட்சியில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஐ.தே.கவினர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க உறுதியெடுத்தனர். முன்னர் பிரதமருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த பிரதி அமைச்சர்களான பாலித்த ரங்ேக பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோரும் கட்சித் தீர்மானத்துக்கு இணங்கினர். ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களும் மறுசீரமைப்புக்களை வலியுறுத்தி, பிரதமருக்கு ஆதரவு வழங்க உறுதியளித்தனர். இதனால் தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை பிரதமருக்கு ஏற்பட்டது. இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கும் அவர் முழுமுயற்சியெடுத்தார்.

பிரதமர் தரப்பில் பிரேரணையை தோற்கடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் ஒன்றிணைந்த எதிர்த்தரப்பின் செயற்பாடுகள் பலவீனமாகவே இருந்தன. வெறுமனே ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களில் கருத்துக்களைத் தெரிவிப்பது மாத்திரமே அவர்களின் செயற்பாடாக இருந்தது. மறுபக்கத்தில் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இரண்டு நிலைப்பாடுகள் காணப்பட்டன. ஜனாதிபதி தலைமையில் பலதடவைகள் கூடிய சு.க பிரச்சினையை விரிவாக ஆராய்ந்தது. நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்திக் கூறினர். நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து சுமார இரண்டு வாரங்கள் கொழும்பு அரசியலில் பரபரப்புக்குச் பஞ்சம் இருக்கவில்லை. ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை என மாறிமாறி கூட்டங்கள். அரசியல் தலைவர்கள் அங்கும் அங்குமாக ஓடித்திரிந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்ததால் அவர்களும் மாறி மாறி சந்திப்புக்களை நடத்தினர். சுதந்திரக் கட்சியினர் எந்த முடிவுகளையும் எடுக்கமுடியாத தடுமாற்றத்துடன் காலை மாலையென கூடி ஆராய்ந்தனர்.

இவ்வாறான பரபரப்புக்களுக்கு மத்தியில் கடந்த புதன்கிழமை நான்காம் திகதி விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. 9.50 மணிக்கு நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை தினேஷ் குணவர்தன ஆரம்பித்துவைத்தார். காலை முதல் சபைக்குள் ஒருவிதமான பரபரப்பே காணப்பட்டது. விவாதம் ஆரம்பித்து நடைபெற்ற நிலையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆங்காங்கே சபைக்குள் கூடி நின்று கதைக்கத் தொடங்கினர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முகத்தில் பிரகாசத்தை காணமுடியவில்லை. விவாதம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில நிமிடத்துக்குள் சபைக்குள் வந்த பிரதமரின் முகத்தில் புன்சிரிப்பைக் காணமுடிந்தது. வழமைக்கு மாறாக எம்பிக்களின் ஆசனங்களைத் தேடிச் சென்று கதைத்த பிரதமர் சிறிது நேரத்திலேயே சபையிலிருந்து வெளியேறினார். விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் சு.கவினர் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டிருந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லையென சு.க தீர்மானம் எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அவ்வாறான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லையென சு.க அமைச்சர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பிரதமரை குறிப்பாக திறைசேரிமுறி விவகாரத்தை கடுமையாக விமர்சித்ததுடன், பிரேரணைக்கு ஆதரவாக அதாவது பிரதமருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகக் கூறினார். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மறுபக்கத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மேசையில் தட்டி வரவேற்பை வெளியிட்டனர். அதேநேரம், பிரேரணைக்கு ஆதரவளித்தாலும் அரசாங்கத்திலிருந்து விலகப்போவதில்லையென அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறிய கருத்தும் சபையில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் உரையாற்றிய விமல் வீரவன்ச அரசு மீதான குற்றச்சாட்டுக்களை அடுக்கியதுடன், ‘நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி இல்லையெனக் கூறி தமது தோல்வியை முன்னரே பறைசாற்றிவிட்டார். விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், திறைசேரிபிணை முறி மோசடி குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளபோதும் அவற்றுடன் பிரதமருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும், அரசியல் நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் பலியாகிவிட முடியாது என்றும் கூறி தாம் பிரதமருடன்தான் இருக்கிறோம் என்ற நிலைப்பாட்டை அவர் அறிவித்துச் சென்றார். சபையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்க பாராளுமன்றத்தின் குழு அறைகளில் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என மாறிமாறி ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தினர். ஐ.தே.கவின் அதிருப்தியாளர்கள் என கருதப்பட்ட பிரதியமைச்சர்கள் வசந்த சேனாநாயக்க மற்றும் ரங்கே பண்டார ஆகியோர், தாம் பிரேரணைக்கு எதிராக அதாவது, பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்கள். மற்றுமொரு ஊடக சந்திப்பை நடத்திய சு.கவின் அமைச்சர்கள் உள்ளிட்ட குழு ஆளும் தரப்பிலுள்ள 13 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகக் கூறினர்.

இந்த விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்திருந்த ஜே.வி.பி, அரசாங்கத்தின் மீது மேலும் பல விடயங்களின் பேரிலும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியது. அரசியல் நோக்கத்துக்காக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளபோதும், மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற அரசு தவறிய காரணத்துக்காக ஜே.வி.பி.யின் ஆறுபேரும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாகக் கூறினர். சபையில் இடம்பெற்ற விவாதத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்கெடுப்பின் முடிவுகளை முற்கூட்டியே ஊகிக்கக் கூடியதாகவிருந்தது. சுமார் பன்னிரண்டு மணித்தியாலம் இடம்பெற்ற விவாதம் இரவு 9.30 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெயர் குறிப்பிட்டு நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுமாக 122 பேர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து சு.க அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 16 பேர் பிரேரணைக்கு ஆதரவளித்தனர். மொத்தமாக 76 பேர் பிரேரணைக்கு ஆதரவளிக்க, சுதந்திரக் கட்சியின் 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்துக் கொண்டனர். இதற்கமைய 46 மேலதிக வாக்குகளால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பு முடிந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, ஐ.தே.முவினர் தமது நன்றிகளைத் தெரிவித்தவாறு வெளியேறினர். தனக்கு வாக்களித்த சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமரும் கூறினார்.

கடந்த நான்று தசாப்த அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை தனது அரசியல் சாணக்கியத்தை இப்பிரேணையை தோற்கடிப்பதன் மூலம் நிரூபித்திருக்கிறார். தனக்கு எதிராக எழும் சவால்களை சமாளிக்கும் திறமை கொண்ட அரசியல் தலைவர் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். நடைபெற்றுமுடிந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது நான் ஏற்கனவே கூறியதைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியை கூட்டணி அரசாங்கத்துக்குள் பலப்படுத்தியுள்ளது அல்லது ஐ.தே.கவின் கைகளை ஓங்கச் செய்துள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரவளித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். அத்துடன் நின்றுவிடாது பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர்களான அநுரபியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, எஸ்.பி.திசாநாயக்க, ஜோன் செனவிரட்ன, சந்திம வீரக்கொடி, சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தில் இருந்துகொண்டு பிரதமருக்கு எதிராக வாக்களித்தமையே பிரதான குற்றச்சாட்டாகும். எனினும், அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பானது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் ஏதோவொரு விடயத்தில் புரிந்துணர்வுகாணப்படுகிறது என்பதையே பறைசாற்றுவதாக உள்ளது. அதேநேரம், அமைச்சரவையில் முழுமையான மாற்றமொன்று கொண்டுவரப்படவிருப்பதாகவும் ஐ.தே.கவினர் அறிவித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தில் ஐ.தே.கவின் கைகள் பலமடைந்திருப்பதால் அமைச்சரவை மறுசீரமைப்புடன் வேறு புதிய மாற்றங்களும் மேற்கொள்ளப்படலாம் எனவும் தெரியவந்திருக்கிறது. இதில் சுதந்திரக் கட்சியின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கப் போகிறது? வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத சு.க உறுப்பினர்கள் மறைமுகமாக பிரதமருக்கு ஆதரவளித்திருப்பதால் அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கு எதிர்வரும் நாட்களில் பதில் தெரிந்துவிடும்.

எதுவாக இருந்தாலும், தேசிய அரசாங்கத்துக்கு எஞ்சியிருக்கும் 18 மாதங்கள் சோதனை நிறைந்த மாதங்களாவே இருக்கப்போகின்றன. எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக இருப்பதால், தேசிய அரசாங்கம் பாரிய மறுசீரமைப்பைக் கொண்டுவந்து எஞ்சிய காலத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

மறுபக்கத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதை தெளிவாக உணர முடிகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுனவில் பசில் அணி, கோட்டா அணி என இரு அணிகள் உருவாகியுள்ளன. அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து உருவெடுத்துள்ள இந்த அணிகளின் எதிர்கால அரசியல் காய் நகர்த்தல்கள் எவ்வாறு அமையப்போகின்றன என்பது முக்கிய விடயமாகும். கொழும்பு அரசியலின் பேசுபொருளாக இது மாறியிருக்கிறது.

Comments