'கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வேன்' | தினகரன் வாரமஞ்சரி

'கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வேன்'

வடிவேல் சக்திவேல்

கேள்வி : உங்களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில் : நான் மட்டக்களப்பு, கல்லடியைப் பூர்வீகமாகக் கொண்டவன். ஆரம்பக் கல்வியை கல்லடி இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையிலும், பின்னர் சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கல்வி கற்று முதலாவது பட்டப்படிப்பை கிழக்குக் பல்கலைக்கழகத்திலும், இரண்டாவது பட்டப்படிப்பை ஸ்ரீஜயவர்தன பல்கலைக்கழகத்திலும் கற்றேன். பின்னர் 2005 வரைக்கும் அரச திணைக்களங்களில் தொழிலில் இருந்தேன். பின்னர் 2005 அரச சார்பற்ற நிறுவனத்திற்குள் சென்று விட்டேன்.

அரச சார்பற்ற நிறுவனத்திலிருந்து கொண்டு அதிகளவு சமூக சேவைகளைச் செய்ய முடிந்தது.

இவற்றைவிட 52 உள்ளூர் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரு பெரியதொரு சமூக சேவைகள் ஒன்றியத்தை உருவாக்கியதோடு எனது தந்தையாரின் பெயரில் தியாகராஜா நம்பிக்கை நிதியம் ஒன்றையும் வைத்துள்ளோம்.

1966, 1967 காலப்பகுதியில்தான் கல்லடியிலிருந்த பிரதேச சபையும் இணைக்கப்பட்டு மட்டக்களப்பு மாநகர சபையாக மாற்றம் பெற்றது. இந்த மாநகர சபைக்கு இரண்டாவது மேயராக 1971 தொடக்கம் 1973 காலப்பகுதியில் எனது தந்தை கந்தையா தியாகராசா சுயேச்சைக்கு குழுவில் போட்டியிட்டு பதவி வகித்துள்ளார். இதனிடையே கல்லடிப் பிரதேசம் பிரதேச சபையாக இருக்கும்போது எனது அம்மப்பா நல்லதம்பி செல்லத்துரை என்பவர் தவிசாளராக இருந்துள்ளார். இது எனது அரசியல் பின்னணியாகும்.

கேள்வி : இவ்வாறு சேவை செய்து வந்த தாங்கள் எவ்வாறு அரசிலுக்கு வந்தீர்கள்?

பதில் : சமூக சேவைகளை அவதானித்த சமூகம்தான் என்னை அரசியலுக்குள் நுழையுமாறு கேட்டுக் கொண்டது. எனவே, நான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுாடாக அரசியலுக்குள் நுழைந்தேன்.

கேள்வி : நீங்கள் போட்டியிட்ட வட்டாரத்தினுள் பல கட்சிகளும், சுயேச்சைக்குழுக்களும், போட்டியிட்டன. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட நீங்கள்தான் வெற்றி பெற்றுள்ளீர்கள்? இந்த வெற்றி எவ்வாறு சாத்தியமானது.

பதில் : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சேவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தாதது ஒரு பிரச்சினையாகும். கிழக்கில் முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து ஆட்சியமைத்ததற்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால் அது எமது மக்களுக்கு சரியாகத் தெரியாது. இவ்வாறான பல விடயங்களை நாங்கள் எமது வட்டாரத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தெளிவாக விளக்கிக் கூறியிருந்தோம். அதனை விளங்கிக் கொண்ட மக்களும் என்னை வெற்றியடையச் செய்தார்கள்.

கேள்வி : மட்டு. மாநகரின் சுற்றுச் சூழலைப் பற்றிக் கூறுங்கள்?

பதில் : மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வசதி படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அடிமட்ட மக்கள் என பல வகையான மக்கள் காணப்படுகின்றனர். இங்குள்ள களப்புகள் பாரிய வளங்கொண்டவை. இலங்கையில் மிகவும் அழகானவை, இதனை மேலும் அழகுபடுத்த வேண்டியுள்ளது.

கேள்வி : கடந்த காலத்தில் இருந்த அரசியல் நிருவாகங்கள் மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை கொண்டு சென்ற விதத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் : நான் யாரையும், குற்றம் சொல்ல நினைக்கவில்லை. இருந்தாலும் மனதில் பட்டதைத் தெரிவிக்கின்றேன். கடந்த காலத்தில் மட்டு மாநகரை மேம்படுத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் இருந்தன. நிதி வளங்களைக் கொண்டு வருவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகளவு காணப்பட்டன. அப்போதிருந்த அரசியல் நிருவாகம் அந்த சந்தர்ப்பங்களையும் வளங்களையும் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதுகின்றேன்.

கேள்வி : மட்டக்களப்பு மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் 7வது மேயராக பதவி ஏற்றுள்ள நீங்கள் மாநகரை மேம்படுத்த என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?

பதில் : இவை தொடர்பில் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருக்கின்றேன். கல்லடிப் பலத்தின் அருகில் பாரிய திட்டம் ஒன்றை முன்நெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுபோன்று மட்டக்களப்பு மாநகரை பசுமையாக மாற்றுவதற்கும், சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மட்டக் களப்பை மாற்றுவதற்கும் திட்டங்கள் வைத்துள்ளோம். மக்களின் வாழ்வாதாரத்திற்கு உந்துசக்தியளித்தல் உள்ளிட்ட பல பெரிய, திட்டங்களை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மீன்கள் பாடும் இடமாகக் கருதப்படும் பாடுமீன் என்கின்ற இடத்தை பெரியவர்கள், எப்போது எந்த இடத்தில் மீன்கள் பாடும் என்பதையெல்லாம் அடையாளப்படுத்தி வைத்துள்ளார்கள். இதுபோன்ற இடங்களை அடையாளம் கண்டு சுற்றுலா தலமாக மாற்றவேண்டியுள்ளது.

இவற்றைவிட மட்டக்களப்பு வாவியில் மாத்திற்கு ஒருமுறை “கதிர்” என்கின்ற ஒன்று சீசனுக்கு வந்து செல்கின்றது. மட்டு வாவியில் ஒரு சீசனுக்கு மாத்திரம் வரும். இரவில் வாவி அருகில் சென்று தண்ணீரை அள்ளி தெளித்தால் அது ரேடியம் போல் தெறிக்கும். மீன்குஞ்சுகள் விளையாடுவது அனைத்தும் தெளிவாகத் தெரியும். இது மட்டக்களப்பிலுள்ள பலருக்கே தெரியாது. இது எப்போது நிகழும் என்பதை மக்களுக்கு தெ ரியப்படுத்தினால் அதனைப் பார்ப்பதற்கு மக்கள் முண்டியடித்துக் கொண்டு வருவார்கள். பின்னர் அவ்விடமும் பாரியதொரு சுற்றுலாத் தலமாக மாறிவிடும். இது இலங்கையில் மூன்று இடங்களில்தான் இருப்பதாக அறிகின்றோம்.

கேள்வி : மாநகரை மேம்படுத்துவதில் சவாலாக அவற்றை நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில் : தனியர் துறையில் இருந்த போது திட்ட வரைபுகளை எழுதி அவற்றுக்கான அனுமதி கிடைத்ததும் அவற்றை அமுல்படுத்தவதில் பிரச்சனைகள் இருக்கவிலலை. தற்போது திட்டங்கைள எழுதி அரச நிருவாகத்தினுாடாக செயற்படுத்த வேண்டியுள்ளது. இது ஒரு சிறிய விடையமாக இருக்காது என நினைக்கின்றேன்.

மற்றும் போதியளவான நிதியைக் கொண்டுவருவதும், வளங்களைத் திரட்டுவதும் எமக்குச் சவாலாக அமையும் என நினைக்கின்றேன்

கேள்வி : மாநகரை மேம்படுத்துவதில் புலம்பெயர் சமூகத்தினரிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றீர்களா?

பதில் : லண்டன் சமூகம் என்னுடன் கதைத்துள்ளது. திட்ட வரைபுகளைக் கேட்டுள்ளார்கள், அதுபோல் அவுஸ்திரேலியா சமூகம் என்னுடன் 

தொடர்பு கொண்டு என்னென்ன திட்டங்கள் செய்யவுள்ளீர்கள் என கேட்டுள்ளது. சிலருக்கு சில ஆரம்பக்கட்ட திட்டங்களை முன்மொழிந்துள்ளேன். எமக்கு புலம் பெயர் சமூகத்திடமிருந்து பல உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். ஆனால் தடங்கல்கள் ஏதும் இல்லாமலிருக்க வேண்டும்!

கேள்வி : மட்டக்களப்பு நகருக்குட்பட்ட பகுதிகளில் இன்னும் வீதி மின் விளக்குகள், இன்றியும், பல வீதிகள் புணரமைக்கப் படாமலுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்களே!

பதில் : எனது முதலாவது திட்டம் அனைத்து வீதிகளுக்கும் மின் விளக்குகள் பொருத்தி இருளிலுள்ள பகுதிகளை மீட்பதாகும். அனைவரினதும் ஒத்துழைப்புடன் மாநகர சபையை திறம்படக் கொண்டு செல்ல வேண்டும்.

கேள்வி : தங்களுடைய சபையிலுள்ள ஏனைய கட்சி உறுப்பினர்களிடமிருந்து எவற்றை எதிர்பார்க்கின்றீர்கள்.

பதில் : நான் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு செல்லவேண்டும் என நினைக்கின்றேன். அனைத்து செயற்பாடுகளிலும் கட்சி பேதங்களிற்றிச் செயற்படுவோம். சபையிலுள்ள உறுப்பினர்களில் 85 வீத்திற்கு அதிகமானோர் இளம் நபர்கள். எனவே சமூகத்திற்கு சேவை செய்ய முன் வந்திருக்கின்ற அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு செல்ல வேண்டும் என நினைக்கின்றேன்.

கேள்வி : உள்ளூராட்சி மன்றத்தினுாடாக அரசியலுக்குள் வந்திருக்கும் உங்களுக்கு மாகாண சபை, மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் களமிறங்கும் எண்ணம் உண்டா?

பதில் : தற்போதைக்கு அவ்வாறான சிந்தனைகள் ஏதும் இல்லை. எடுத்திருக்கின்ற பொறுப்பை சிறந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும்.

 

Comments