மாற்று அரசியல் முன்னெடுப்பை தந்திரமாகத் தவிர்க்கும் தமிழ்த் தரப்பு | தினகரன் வாரமஞ்சரி

மாற்று அரசியல் முன்னெடுப்பை தந்திரமாகத் தவிர்க்கும் தமிழ்த் தரப்பு

“தமிழ்ச் சமூகத்துக்கு மாற்று அரசியல் முன்னெடுப்புகள் தேவை” என்ற கருத்து சில ஆண்டுகளாக முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பாக இந்தக் கருத்தை மையப்படுத்திய உரையாடல்கள் ஒரு அலைபோல பல்வேறு இடங்களிலும் நடந்தன.

மாற்று அரசியல் என்பதை மாற்று அணியாக பொருள் படுத்திக் கொண்டு, தம்மைத்தாமே அவ்வாறு பிரகடனம் செய்ய முற்பட்ட தரப்புகளின் கோமாளித்தனங்களையும் அந்தச் சந்தர்ப்பத்தில் கண்டோம்.

மாற்று அரசியல் என்பதைக் குறித்த தெளிவின்மையின் வெளிப்பாடே இது.

மாற்று அரசியலைத் தவறாகப் புரிந்து கொண்ட ஒரு தரப்பு இவ்வாறு தாமே மாற்று அணி என்று கருதியதைப்போல, இன்னொரு சாரார் மாற்று அரசியல் என்பதை தமிழ் மக்களுடைய அடையாள அரசியலுக்கும் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான தமிழ்த்தேசிய அரசியலுக்கும் எதிரானது எனத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் மாற்று என்பது கடந்த கால அனுபவங்கள், படிப்பினைகள், புதிய காலத் தேவை, அதற்கான புதிய சிந்தனைகளின் திரண்ட வடிவம் என்பதை இவர்கள் யாருமே உணரவில்லை.

தொடர்ந்து நிகழ்த்தப்படும் அல்லது முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியவாத அரசியலை அல்லது அதை விட்டு விலகிய அரசியலை இன்னொரு வகையில் சிறு அசைவைச் செய்து முன்னெடுப்பதைப் பற்றியே ஒவ்வொரு தரப்பும் சிந்திக்கின்றன.

மாற்று அரசியலைப் பற்றிப் பேசும் ஊடகவியலளர்கள், அரசியல் ஆய்வாளர்களிற் பலருக்கும் கூட இதைக் குறித்த தெளிவான பார்வை இல்லை.

இதனால், மாற்று அரசியல் குறித்த உரையாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு எங்குமே முறையாக நடக்கவில்லை.

அப்படி எழுதப்பட்ட சில கட்டுரைகளும் கூட கட்சி அரசியல் கண்களுக்கூடாகவே வாசிக்கப்பட்டன. எப்படித் தம்மையும் தமது அரசியல் கட்சியையும் இந்தக் கருத்துடன் பொருத்தி விடலாம் என்ற யோசனைகளே பெருகிக் கிடந்தது.

இதனால், மாற்று அரசியலைக் குறித்த புரிதல் இல்லாத, முனைப்பு இல்லாத ஒரு சூழலே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், ஏற்கனவே இருந்த அரசியல் தலைமைத்துவத்திலும் அதன் வழிமுறையிலும் மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இதற்கு நல்லதொரு சான்று. மாற்று அரசியல் தெரிவை நோக்கிய வெளிப்பாட்டையே அந்தத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர். கூடவே பன்மைத்துவத்துக்கான இடத்தைக் கொடுப்பதாகவும் மக்களுடைய தெரிவுகள் இருந்தன. அதாவது, எந்தத் தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை மக்கள் வழங்கவில்லை.

ஆட்சி அமைப்பதாக இருந்தால், அதிகாரத்தைப் பெறுவதாக இருந்தால், கூட்டாக அதைச் செய்யுஙகள். சேர்ந்து இயங்குங்கள். கூடி முடிவெடுங்கள். முரண்பாடுகளின் மத்தியிலும் மக்களுக்கான பணிகளை ஒற்றுமையாக, ஒழுங்காக மேற்கொள்ளுங்கள் என்ற சேதியை மக்கள் தங்கள் தெரிவுகளின் வழியாக, வாக்களிப்பின் வாயிலாக காட்டியிருக்கின்றனர்.

இதன்படி ஒவ்வொரு சபையிலும் மக்களின் தெரிவுகள், மக்களுடைய உணர்வுகள், மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் போன்றவற்றுக்கு மதிப்பளித்து, பன்மைத்துவத்தின் அடிப்படையில் கூட்டாகவே உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்படிச் செய்திருந்தால், ஏறக்குறைய ஒரு புதிய அரசியல் பண்பாடு உருவாகியிருக்கும். ஜனநாயக அடிப்படைகள் சிறப்பாகப் பின்பற்றப்படுவதற்கான ஒரு பயில்முறை உருவாகியிருக்கும்.

உள்ளூராட்சி மன்றுகள் என்பது அடிமட்டத்திலானவை என்பதால், இந்தப் புதிய அரசியல் பண்பாடு அடிமட்டத்திலிருந்து உருவாகியிருக்கும்.

இதன் படிமுறையும் பாடமுறையும் மெல்ல மெல்ல தமிழ் அரசியலில் நிகழ்ந்தேறியிருக்கும். அப்படியே மாகாண சபை, பாராளுமன்ற அரசியல் என அனைத்திலும் ஒரு நேர்த்தியான – கட்டிறுக்கமிக்க அரசியல் முறையை உருவாக வாய்த்திருக்கும்.

கட்சி என்ற சட்டகத்துக்குள் நின்று களமாடிக் கொண்டிருக்காமல், அந்தச் சதுரங்கத்தில் நின்று கொண்டு எதிர்த்தரப்புகளை எதிரிகளாகக் கட்டமைக்காமல், கூடிச் செயற்படுவதன் மூலம் பேசி, உரையாடி கலந்துறவாடிட வாய்த்த ஒரு சந்தர்ப்பம் இது.

ஆனால், அப்படியே இதைத் தவற விட்டு விட்டுள்ளனர் அனைவரும். அதாவது மக்களுடைய தெரிவுகளுக்கும் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளுக்கும் எதிராக பழைய மாதிரிகளிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றி நேர் – எதிர் முனைகளில் அரசியலை நிறுத்தியுள்ளனர்.

இதேபோன்று எல்லாருக்கும் தலையைக் கழுவி, முகத்தை மூடி ஆட்சியமைப்பதாக இருந்தால், மக்கள் அவ்வாறான – பன்மைத்துவத்துக்குரிய அடிப்படையில் – வாக்களித்திருக்க மாட்டார்கள்.

இதிலும் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு சபைகளிலும் ஆட்சியைப் பெறுவதற்காக எதிர் முரண் சக்திகளுடன் இரகசிய உறவைப் பேணியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்திருக்கிறது.

இது யாழ்ப்பாணத்தில் தொடங்கி அம்பாறை வரை நடந்திருக்கிறது. வெளிப்படையான ஆதரவைப் பெறவோ, ஆதரவைப் பெறும் கட்சிகளோடு வெளிப்படையான உறவைக் கொள்ளவோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தயாராக இல்லை.

அதைப்போல, ஆதரவைக் கொடுத்த சக்திகளும் இந்தத் தவறான அரசியல் போக்கு எதிர்காலத்தில் தமது அரசியலுக்கும் அடையாளத்துக்கும் எதிராக உருமாறும் என்பதை உணரத் தவறி விட்டன. அல்லது கூட்டமைப்பின் முன்னே செயலற்று விட்டன.

ஆக மொத்தத்தில் தலையைச் சுற்றி, முகத்தை மூடி, செய்யாத திருக்கூத்துகளை எல்லாம் செய்து உள்ளூராட்சி நிர்வாகத்தைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றி விட்டது. எந்த வழியிலேனும் அதிகாரத்தைக் கைப்பற்றி, அந்தக் குதிரையில் – கதிரையில் – குந்துவதே அதனுடைய குறிக்கோள்.

அதாவது எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது.

இதன் மூலமாக விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று அது தனது தேர்தல் தோல்விகளை அல்லது சறுக்கல்களைச் சரிக்கட்ட முயற்சிக்கிறது.

ஆனால், நாட்டில் எதிரும் புதிருமாக உள்ள ஐ.தே.கவும் ஸ்ரீ சு.கவும் சேர்ந்து கூட்டாட்சி அமைத்திருப்பதையும் இவை இரண்டுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்குவதையும் குறித்து கூட்டமைப்பு சிந்திக்கவோ வெட்கப்படவோ இல்லை.

நாட்டின் உயர் மட்டத்தில் கூட்டாட்சிக் கலாசாரம் பேணப்படுகிறது. நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது முறையான கூட்டாட்சிக் கலாசாரம் இல்லைத்தான். இருந்தாலும் இலங்கை வரலாற்றில் இது ஒரு புதிய அனுபவம். புதிய முன்னெடுப்பு. இதை கூட்டமைப்பும் ஆதரித்து, அதில் ஒரு அங்கமாகிச் செயற்படுகிறது.

இதைப் பிராந்தியத்தில் – தன் சூழலில் – பிரயோகிப்பதற்கு கூட்டமைப்பு மறுக்கிறது. அச்சமடைகிறது.

இது அகமுரணாகும். அரசியல் முரணாகும். யதார்த்த முரணாகும். உண்மைக்கும் யதார்த்தத்தேவைக்கும் எதிரான போக்காகும்.

இதையிட்டு எந்த அரசியல் ஆய்வாளர்களும் இதுவரையில் வாய் திறக்கவில்லை. எந்த ஊடகமும் எழுதவோ பேசவோ இல்லை.

இதற்குக் காரணம், தமிழ் மனதில் உறைந்து போயுள்ள ஏகப் பிரதிநிதித்துவம் என்ற எண்ணக் கருவாகும். ஆட்சியிலிருந்தால் ஒருதரப்பு – ஒற்றைத்தரப்பு மட்டுமே இருக்க முடியும். மற்றத் தரப்பை நம்ப முடியாது, ஏற்க என்ற குறுகிய சிந்தனை. அல்லது உளச் சிக்கல்.

இதைக் கடந்து, வெளிவெளியாகச் சிந்திப்பதற்கும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வதற்கும் இவர்கள் தயாரில்லை. இதற்குப் பிரதான காரணம், மக்களின் நலனை விடக் கட்சியின் நலனே முக்கியம் என்ற எண்ணம.

இதனால், கட்சி நலனைப் பேணும் வகையில் எல்லாவற்றையும் உருமாற்றமும் திசைமாற்றமும் செய்கின்றனர். இதற்காகச் சேராத கூட்டத்தோடு எல்லாம் கூட்டுச் சேரப்பட்டுள்ளது. ஆனால், அதைப் பொது அரங்கில் வெளிப்படுத்துவதற்கு கூட்டமைப்புத் தயாரில்லை.

இங்கேதான் நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். மாற்ற அரசிலுக்கான சிந்தனையையும் மாற்று அரசியல் உணர்வையும் மாற்று அரசியல் முன்னெடுப்பையும் மாற்று அரசியலுக்கான தெரிவுகளையும் தந்திரமாகத் தமிழ்த்தரப்புத் தவிர்த்து விட்டிருக்கிறது.

இப்பொழுது மாற்று அரசியலைக் குறித்த உரையாடல்களும் குறைந்து விட்டன.

எல்லாமே சரியாக விட்டன என்ற மாதிரியான ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவேமாற்று அரசியலுக்கான தேவை இனி இல்லை என்ற மாதிரியான தோற்றம்.

இன்னும் ஒரு சில மாதங்களில் அல்லது சில மாதங்களுக்குப் பிறகு மாகாணசபைத் தேர்தல் வரப்போகிறது. அப்பொழுது இன்னொரு விதமான அரசியல் முன்னெடுக்கப்படலாம். ஏறக்குறைய மீளவும் கட்சிகளுக்கிடையிலான போட்டியாகவே அந்த அரசியல் இருக்கும். ஆகவே அது குணம்ச ரீதியாக எந்தப் பெரிய மாறுதல்களையும் கொண்டிருக்கப்போவதில்லை.

இதன் வெளிப்பாடுகள்தான் வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்துவதா? அல்லது மாவையை நிறுத்துவதா என்ற அறிவிப்புகளும் திட்டங்களும்.

இது எதைக் காட்டுகிறது?

எந்தப் புதிய நோக்கும் இந்தத் தரப்புகளிடம் இல்லை என்பதைத் தவிர வேறு எதை?

ஆகவே, புளித்த கள்ளுத்தான் மீளவும் சந்தைக்கு வரப்போகிறது?

பழைய வேதாளம் பழைய முருங்கையில் ஏறப்போகிறது. தொடங்கிய இடத்திலேயே தொடர்ந்தும் நிற்கிற ஒரு அரசியல் பயணம் தொடரவே போகிறது. மாற்றத்துக்கு வழியுமில்லை. விதியுமில்லை.

Comments