மனநிலையில் மாற்றம் வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மனநிலையில் மாற்றம் வேண்டும்

சித்திரைப் புத்தாண்டு:- விளம்பி வருடம் நேற்றுப் பிறந்துவிட்டது. நாடு முழுவதும் குதூகலக் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்- சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டம் ஒருபுறம் விடுமுறைக் கொண்டாட்டம் மறுபுறம். சுருங்கச் சொன்னால், உற்சாகத்தின் உச்சத்தில் நாடு இருக்கிறது.

மக்கள் மத்தியில் புதுத்தெம்பை ஏற்படுத்தி வாழ்க்கைக்கு புதுப் புது வழியைக்காட்டுவதே இத்தகைய கொண்டாட்டங்களின் கருவூலங்களாக இருக்கின்றன.

உற்றார், உறவினர், சுற்றத்தார், நலன்விரும்பிகள் வீடுகளுக்கும் வதிவிடங்களுக்கும் சென்று சகவாழ்வுக்கு புது மெருகூட்டும் நன்நாள் இதுவாகும்.

நல்லிணக்கமும் சகவாழ்வும் நம் மத்தியில் இருந்து தொலைந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்டன.

நம்மை விட்டு விலகிச் சென்ற நற்பண்புகளை மீண்டும் ஈர்த்தெடுக்க புத்தாண்டு மட்டுமல்ல, நம் கலாசார விழாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.

உணவு, உடை, உறையுள் அத்தியாவசியமாக இருந்தாலும் அதி அத்தியாவசியத் தேவையொன்றும் இன்று நம்மத்தியில் விசேட தேவையாக இருக்கின்றது.

நல்லிணக்கமும் சகவாழ்வும் இல்லாமல் எந்தவொரு அடிப்படையும் கட்டுமானத்தோடு இருந்ததாக இல்லை. கீழ்கட்டுமானம் உறுதியாகவும் பலமாகவும் இருந்தால்தான் மேல் கட்டுமானம் நிலைமாறாமல் இருக்குமென்பது பொதுவுடமையின் தந்தை கார்ல் மாக்ஸின் தத்துவம்.

இந்த சமூக விஞ்ஞான தத்துவம் என்றும் பின்னோக்கியதில்லை. வாழ்க்கை நெறிமுறையின் யதார்த்தத்தோடு சொல்லிய விடயங்கள் இன்று நமக்கு மிகப் பொருத்தமாகவே இருக்கிறது.

சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது என்னவிலை என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து கிடக்கின்றது. இனங்களுக்கிடையில் நல்லுறவுகள் இல்லவே இல்லை. இன முரண்பாடுகள் மிகவும் கூர்மையடைந்தே இருக்கின்றன.

30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது என்று அதிகார வர்க்கம் மார்தட்டிக் கொண்டாலும் சிறுபான்மை இனங்கள் இன்னும் சீண்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அண்மைய கண்டிக் கலவரமும் அதனோடு ஏற்பட்ட இனப் பதற்றங்களும் இன்னும் தணிந்ததாகக் கூறமுடியாது.

இன நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் தன்னால் முடிந்தளவு அர்ப்பணிப்போடு செயற்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இது அரசியலினால் மட்டும் யதார்த்தமாக்கக் கூடிய விடயமுமல்ல. இந்நாட்டில் வாழும் மக்களும் உள சிந்தனையோடு செயற்பட முன் வந்தாலே எதனையும் இலகுபடுத்தக் கூடியதாக இருக்கும்.

நம்மால் முடியாது என்று எதுவுமில்லை. நல்லிணக்கம் நம்மிடமிருந்து விலகிச் சென்றுவிட்டதென்று நாம் கவலை கொண்டாலும் அது நம்மிடந்தான் இருக்கிறதென்பதை நாம் உணராததனால்தான் எல்லாமே நெறிகெட்டுப்’ போகின்றதென்பதை எவரும் மறுதலிக்கமாட்டார்கள் என்பது நம்பிக்கை.

சரியான திட்டமிடல் இன்மையால் தேவையற்ற பொருட்களையும் நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். இது நமக்கு பழக்கப்பட்டுப் போன விடயமாகிவிட்டது. நம்நாட்டு உற்பத்தியை விடவும் வெளிநாடுகளிலிருந்து வரும் செயற்கையோடு கலந்த பொருட்களுக்கே மவுசு அதிகமாக இருக்கிறது.

இப்படி, பழக்க தோஷத்துக்கும் வெளிநாட்டு நாகரிகத்துக்கும் கட்டுண்டு கிடக்கும் நாம், நல்லிணக்கத்தையும் இறக்குமதி செய்தால் நல்லதென்ற மனநிலையில்தான் இருக்கிறோம். இது வெட்கித் தலைகுனியும் அவலம்.

நாட்டில், நல்லிணக்கத்தையும் இன சௌஜன்யத்தையும் ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டவர்கள் நமக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. நாம் நாமாக இருந்தால் ஐ. நா. பேரவை மட்டுமல்ல எந்தவொரு சக்தியும் நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை ஏற்படாது.

மனநிலை மாறும் நிலையில் மக்கள் இருந்தாலும் ஆட்சி ஸ்திரமில்லையென்றால் எல்லாமே புஷ் வானமாகிவிடும். இன்றைய நிலையைப் பார்க்கின்ற போது இதனையும் கொஞ்சம் நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

நல்லாட்சியைத்தான் மக்கள் ஏற்றார்கள். அதற்காகவே பச்சையையும் நீலத்தையும் சிம்மாசனம் ஏற்றினார்கள். ஆனால் இன்று நடப்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தேசிய அரசுக்கும் நல்லாட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதில் சிலர் வரிந்து கட்டிச் செயற்படுவது ஆரோக்கியமாகப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தேசிய அரசிலும் நல்லாட்சியிலும் திடமான நம்பிக்கையோடு செயற்படுகிறார்கள். இது உலகமறிந்த உண்மை. இருதலைவர்களுடைய அர்ப்பணிப்புகளில் மாத்திரம் அரசில் ஸ்திரத்தன்மையான ஆட்சியை ஏற்படுத்தி விடுமென நினைத்துவிடக்கூடாது. ஆளுந்தரப்பிலுள்ள (இரு கட்சிகளும்) கீழ்மட்ட பிரதிநிதிகளும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படவில்லையென்றால் நல்லாட்சித் தத்துவமே பிழையென்ற நிலை நிரூபிக்கப்பட்டதாகிவிடும்.

மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் செயலில் ஆளும்தரப்பு பிரதிநிதிகள் நடந்து கொள்வது நாட்டு நலனை மட்டுமல்ல நல்லிணக்கத்துக்கும் ஆப்பு வைத்துவிடும்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னைய அரசியல் தலைவர்களும் பதவிப் பேராசையால் துடிப்பவர்களும் இனவாதத்தைக் கத்தித்தான் செயற்படுகிறார்கள். பதவிக்கு வரத்துடிப்பவர்கள் சிறுபான்மைச் சமூகங்களைத் துரும்பாகப் பயன்படுத்துவது இந்த நாட்டு அரசியலில் துரோக வரலாறுகளாகவே பதிவாகியிருக்கிறது.

நல்லாட்சியையும் தேசிய அரசையும் முடிவுக்குக் கொண்டுவரும் சதிமுயற்சியின் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகளும் சிறுபான்மையினரைத்தான் துரும்பாக்குகின்றனர். திகன, கண்டியில் நடந்த வன்செயல்களில் மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் ஈடுபட்டிருந்தது ஊர்ஜிதம். இதனோடு சம்பந்தப்பட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நல்லிணக்கத்தை சிதைத்து சிம்மாசனம் ஏற நினைப்பது நாட்டையும் மக்களையும் அழிக்கும் செயல் என்பதை மறப்பது நல்லதல்ல.

ஆகவே பிறந்திருக்கும் தமிழ்- சிங்கள புத்தாண்டிலாவது நல்லிணக்கம் துளிர்விட வேண்டும். அற்ப அரசியலுக்கும் பதவிகளுக்கும் மக்கள் மனங்களில் ஏற்படும் நல்லெண்ண சிந்தனைகளை சிதறடித்து விடாமல் தூய சிந்தனையோடு செயற்பட திடசங்கற்பம் பூணுவோம்.

உற்றார், உறவினர், சுற்றத்தாரோடு நீங்கள் புத்தாண்டில் குதூகலிக்கும் போது நல்லிணக்கமும் சகவாழ்வும் தழைத்தோங்கட்டும். அதே நேரம், கறைபடிந்து கிடக்கும் மனநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு நல்லிணக்கம் சாத்தியமாகட்டும்.

Comments