அற்புதங்களையும் - அதிசயங்களையும் தாங்கி நிற்கும் புனித பூமி ஜோர்தான் | தினகரன் வாரமஞ்சரி

அற்புதங்களையும் - அதிசயங்களையும் தாங்கி நிற்கும் புனித பூமி ஜோர்தான்

 
லோரன்ஸ் செல்வநாயகம்.
(படங்கள் : கிண்ணியா ரிபாய்ஸ்)

ஜோர்தான் ஒரு அமைதியின் பூமி என அந்நாட்டு மக்கள் குறிப்பிடுவதற்கு ஏற்றாற்போல் அமைதியின் தூதர்கள் வாழ்ந்த இடங்கள் அங்குள்ளன. அதிசயம், அற்புதம் நிறைந்த வியக்கத்தக்க பல இடங்கள் ஜோர்தானில் உள்ளன. இதனால் 50 இலட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் அங்கு வருவதாக கூறப்படுகிறது. அத்தகைய அற்புதம், அதிசயம் நிறைந்த இடமான ‘நேபோ’ மலையில் நாம் மேலும் பல மணித்தியாலங்களைக் கழித்தோம்.

எகிப்து நாட்டின் அடிமைகளாக பல்வேறு இன்னல்களை அனுபவித்த இஸ்ரேல் மக்களை அங்கிருந்து மீட்டெடுத்து சுதந்திர மனிதர்களாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் அவர்களை வாழவைக்க வேண்டுமென்பதே இறைவனின் திருவுளமாகும்.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு இதற்கான வாக்குறுதிகளை இறைவன் வழங்கியிருந்தார். இந்தப் பொறுப்பு மோயீசனுக்கு வழங்கப்பட்டிருந்தது. பல்வேறு சவால்கள் தடைகள் துன்ப துயரங்களுக்கும் இயற்கையின் சீற்றங்களுக்கும் முகம்கொடுத்து இத்தகைய பொறுப்பை நிறைவேற்றுவது மோயீசனுக்கு இலகுவான காரியமல்ல. எனினும் அவர் இறைவனின் கட்டளையை ஏற்றார். அதனால் இறைவன் அவருக்குத் துணை நின்றார். கூப்பிட்ட குரலுக்கு வந்து அபயமளித்தார்.

வாக்களிக்கப்பட்ட தேசத்துக்கான பயணத்தில் மேகம் பின்தொடர்ந்து அவர்களுக்கு நிழலிட்டது என்றும் இறைவன் அதனூடாக செயற்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இறைவன் தம்மோடு இருப்பதை உறுதிசெய்ய மோயீசனிடம் அற்புதக் கோல் ஒன்றை வழங்கியிருந்தார். அந்தக் கோல் இறைவனாக இருந்து செயற்பட்டது என்றே கூறலாம். முதன்முதலில் இறைவன் முட்செடியொன்றிலிருந்து மோயீசனுடன் பேசினார். முட் செடியொன்று (பச்சை) தீப்பற்றி எரிந்தது. மோயீசன் அதன் அருகில் செல்ல முற்படுகையில் முட் செடியின் மத்தியிலிருந்து இறைவன் பேசினார்.

அவர் மோயீசனை நோக்கி, 'நீ என்னிடம் வர விரும்பினால் உனது பாதணிகளை அங்கேயே கழற்றிவிட்டு வா' என்றார். மோசே அவ்வாறே செய்தார்.

பரிசுத்த பைபிளில் குறிப்பிடப்படும் இத்தகைய சம்பவங்கள் இந்த புனித பூமியில் கால் பதித்தவுடன் எம் மனக்கண்ணில் திரையிடத் தவறவில்லை. அது அந்த புனித பூமியில் எமது பயணத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

தொடர்ந்து இறைவனின் வழி நடத்தலை உறுதியாக நம்பாத மக்கள் மோயீசன் செங்கடலைக் கடக்க தன் அற்புதக் கோலை உபயோகித்த போது அதிலிருந்து இறைவன் செயற்பட்டதைக் கண்டு நம்பினர். தமது உயிர்களைக் கடவுள் காப்பாற்றினார் என்றவுடன் அவர்கள் மோயீசன் மீது அதீத நம்பிக்கை கொண்டனர். இறைவனின் அருளும் வழிகாட்டலும் அவருடன் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

கிறிஸ்தவ வரலாற்றோடு பைபிளின் பழைய ஏற்பாடு இஸ்லாமிய வரலாற்றையும் பிணைத்துக் கொண்டுள்ளது. அதேபோன்று மோயீசனால் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு மக்களை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவர் யோசுவா ஆவார். 

மோயீசனுக்கு 120 வயது நிறைவடைய அவர் தமது பொறுப்பை யோசுவாவிடம் கையளித்து மந்திரக் கோலையும் அவரிடம் ஒப்படைக்கின்றார்.

கடவுள் மோயீசனுக்கு பத்துக் கட்டளைகளைக் கொடுத்து அதன்படி மக்களை வாழச் செய்யும்படி கேட்டுக் கொண்டார். உலக வாழ்க்கையில் சிறந்ததொரு மனிதனாக வாழ்வதற்கு கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை விடயங்களும் அந்தப் பத்துக் கட்டளைகளுக்குள் உள்ளடங்குகின்றன. ‘நேபோ’ மலையுச்சியிலிருந்து பள்ளத்தாக்கிலிருந்த பிரதேசங்களைப் பார்த்த போது முற்றிலும் வித்தியாசமான வேறு உலகம் போல தோன்றுகின்றது. அங்கு நாம் பல வெளிநாட்டவர்களைச் சந்தித்து உரையாடக் கிடைத்தது. அவர்களில் ஒருவர் தாம் இங்கு முதற் தடவையாக வருவதாகவும் சொர்க்கத்தில் காலடி பதிப்பது போல் இந்தப் பிரதேசத்தை உணர்வதாகவும் தெரிவித்தார்.

கடவுள் மனிதனுக்குக் காட்சி தந்து மனிதர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி இறைநம்பிக்கையை வளர்த்த பிரதேசமாக அப்புனித பூமியைக் கருதுவதாக அவர் கூறினார். அத்தோடு கடவுளோடு நேருக்கு நேர் உரையாடி அவரது அருளை உடனுக்குடன் பெற்ற மோயீசன் போன்ற இறைதூதர்கள் மற்றும் இறைவாக்கினர்கள் வாழ்ந்த பிரதேசம் இது.

கடவுள் பல அற்புதங்களை நடத்திய இடமிது. அத்தகைய பூமியில் கால் பதிக்கும் நாம் அனைவருமே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர்கள். உண்மையில் நாம் புண்ணியம் செய்தவர்கள்.

எமக்கு கடவுளின் ஆசீர்வாதம் அதிகம் அதிகமாகக் கிடைக்கும் என்றும் அவர் முழுமையான விசுவாசத்துடன் தெரிவித்தார்.

நாம் அங்கிருந்த அரும் பொருட்காட்சியகத்தைப் பார்வையிட்ட போது அங்குள்ள புனிதப் பொருட்கள் எக்காலத்திற்குரியவை யாரால் உபயோகிக்கப்பட்டவை என்றெல்லாம் அவர் எமக்கு தெளிவு படுத்தினார்.

கடவுள் மோயீசனுக்கு வழங்கிய அற்புதக்கோல் தற்போது எங்குள்ளது? என அவரிடம் வினவிய போது அந்தக் கோல் இந்த நேபோ மலைப் பகுதியில்தான் எங்கோ இருக்க வேண்டும். எனினும் அது எங்குள்ளது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மெகுகைப் ஹனி கூறினார். அவரும் அவருடன் வந்த சிலரும் எமது ‘கைட்’ ஹனியும் பல்வேறு விடயங்களைக் கலந்துரையாடினார்கள்.

அச்சமயங்களில் நாம் மியூசியம் மற்றும் ‘நேபோ’ பாறை எனப்படும் வட்ட வடிவமான பாரிய கல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தையும் பார்வையிட்டோம்.

பைபிளில் கூறப்படும் வாக்களிக்கப்பட்ட தேசம் அதுதானா அல்லது அதற்கு அண்டிய அல்லது அதற்குப் போகும் வழியா என்பதெல்லாம் எமது கற்பனைக்கெட்டாத விடயங்களாகவே இருந்தன. மேலும் சுவாரஸ்யங்களுடன் அடுத்த தொடரில் சந்திப்போம்.

 

 

 

Comments