தமிழர்கள் அறிவியல் ரீதியில் கொண்டாடும் இனிய பண்டிகை | தினகரன் வாரமஞ்சரி

தமிழர்கள் அறிவியல் ரீதியில் கொண்டாடும் இனிய பண்டிகை

எஸ்.பாபு

சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புதுவருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ்ப் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.

தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு முதல் நாளே வீட்டை நன்றாகக் கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களைக் கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும். மஞ்சள், குங்குமம் ஆகிய இரண்டும் நோய்க்கிருமிகளும் துஷ்டதேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.

சித்திரைப் புத்தாண்டு அன்று புத்தாண்டுப் பஞ்சாங்கத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூசையறையில் வைத்து பூசிக்க வேண்டும்.

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் தானம் செய்ய வேண்டும்.

மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், வடை போன்றன இடம்பெற வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, உறைப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்ண வேண்டும்.புத்தாண்டு சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் சிறந்தவை.

வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள இரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. தமிழ் புது வருட உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதைப் போல, வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் சித்திரை மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

இலங்கை, தென்னிந்தியா மற்றும் தமிழ் மன்னர்களால் ஆளப்படட சில கிழக்காசிய நாடுகளில் சித்திரை முதல் நாள் வருடத்தின் முதல் நாளாகக் கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான கொண்டாட்ட முறைகளில் சில வேறுபாடுகள் இருப்பினும் பரந்துபட்ட அளவில் உற்று நோக்குகின்ற போது பல ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. அதனாலேயே இங்கு தமிழ் – சிங்கள வருடப் பிறப்பு என்று அழைக்கப்படுகின்றது. இலங்கையில் கொண்டாடப்படும் கொண்டாட்டங்களில் பிரதான கொண்டாட்டமாக தமிழ் – சிங்களப் புத்தாண்டு விளங்குகின்றது.

இலங்கையில் தமிழ்-, சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக சித்திரை வருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.முன்னைய காலத்தில் இவ்விரு இனங்களுக்கிடையிலும் ஐக்கியம் பேணப்பட்டதற்கான அடையாளமாகவே இப்பண்டிகை விளங்குகின்றது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது. தமிழர் காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைய 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் சித்திரை வருடமாவது கணக்கிடப்படுகின்றது.

புதுவருட தினத்தில் 'மருந்து நீர் வைத்தல்' என்பது முக்கிய வைபவமாகக் கருதப்படுகிறது. இம்மருந்து நீர், தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்படும் ஒரு கஷாயமாகும். மருந்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாகும்.

புத்தாண்டு பிறப்பன்று மருத்து நீர் வைத்து குளிக்கும் வழக்கம் தமிழர் மற்றும் சிங்களவர் மத்தியில் இன்றும் உள்ள மிக முக்கியமான பழக்கமாகும். அதிகாலையில் மருத்துநீர் வைத்து நீராடி புத்தாடை அல்லது தூய ஆடை அணிந்து தமிழர்கள் இந்துக் கோயிலுக்கும் சிங்களவர்கள் விகாரைக்கும் சென்று வழிபட்டு வருவர். புத்தாடை உடுத்தி தமிழர்கள் சர்க்கரைப் பொங்கலிட்டும், சிங்களவர்கள் பால்சோறு (கிரிபத்) மற்றும் தின்பண்டங்கள் வைத்தும் கடவுளை வணங்குவர்.

மிகவும் முக்கியமான நிகழ்வாக 'கைவிசேடம் பெறுதல்' அமைகின்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை 'கைவிசேடம்' பெறுவர். பெரியவர் அல்லது குடும்பத் தலைவர் வெற்றிலையில் காசு வைத்து அதன் மேல் நெல் அல்லது அரிசி மற்றும் பாக்கு அல்லது நவ தானியம் வைத்துக் கொடுப்பார்கள். கொடுக்கல் வாங்கல் செய்பவர்கள் குறிப்பிட்ட நேரம் வரும்வரை காத்திருந்து தமது வருடத்தின் முதல் கொடுக்கல் வாங்கலைத் தொடங்குவார்கள்.

ஒரு சம்பிரதாயத்திற்காகத் தத்தமது தொழிலைச் செய்வார்கள். சில மணித்தியாலங்களுக்கு மட்டும் வர்த்தக நிலையங்களைத் திறந்து ஓரிரு வியாபாரங்கள் செய்துவிட்டு மீண்டும் மூடி விடுவர்.

இப்புண்ணிய காலம் முடிந்த பிறகு, புத்தாண்டுக் கலாசார மற்றும் விநோத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர்.மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி, துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தலையணைச் சண்டை, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம். சிங்களப் பெண்கள் றபான் அடிப்பர். இது தமிழரிடம் இல்லாத ஒரு வழக்கமாகும்.

தித்திக்கும் இனிப்பைப் போல, எல்லோர் வாழ்க்கையிலும் இனிமையைத் தருவது சித்திரைப் புத்தாண்டு ஆகும்.

Comments