வீட்டுவேலைத் தொழிலாளர்களை பாதுகாக்க வருகிறது சட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

வீட்டுவேலைத் தொழிலாளர்களை பாதுகாக்க வருகிறது சட்டம்!

வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டதன் பின்பு வீட்டுவேலைத் தொழிலாளர்களை 'வேலைக்காரிகள்' என அழைப்பதை நிறுத்தும் பிரசாரம் எல்லா மட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. சமூக மட்டத்தில் இப் பிரசாரத்தின் தாக்கம் காரணமாக வீட்டுவேலைத் தொழிலாளர்கள் தங்களை தொழிலாளர்களாக அடையாளம் காட்ட ஆரம்பித்தார்கள். எனவே இக்காலத்தில் வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தில் வீட்டுவேலைத் தொழிலாளர்கள் இணைவதில் ஒரு அதிகரித்த போக்கு காணப்பட்டது. இவ்வாறான நிலையில் வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் ஏனைய தொழிற்சங்கங்களை போல் அல்லாது தொழிலாளர்களினால் நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கைக்கு அமைய தொழிலாளர்களின் அதிகரித்த பங்களிப்போடு செயற்பட ஆரம்பித்தது.

வீட்டுவேலைத் தொழிலாளர் சங்க காரியாலயத்தில் தங்களது சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்றும் தங்களுக்கான விடுமுறைகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும் திடீர் வேலை நீக்கம் செய்யப்படுகிறோம் என்றும் தொழிலாளர்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்கின்றனர். இப்பிரச்சினைகளின்போது வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் தொழில் வழங்குனர்களோடு கலந்துரையாடி ஒரு சில பிரச்சினைகளைத் தீர்த்தாலும், பல பிரச்சினைகளைத் தொழில் திணைக்களத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியேற்படுகிறது. இப்பிரச்சினைகளைக் கையாள போதுமான சட்டங்கள் இல்லை என்ற காரணத்தினால் பல பிரச்சினைகள் தீர்க்கவே முடியாத நிலை காணப்படுகிறது.

இக்குறைபாட்டை நீக்கும் முகமாக இன்றுவரை நான்கு சட்டவரைபு மாதிரிகளை தொழில் அமைச்சருக்கு செங்கொடி பெண்கள் இயக்கமும், வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கமும் இணைந்து வழங்கியுள்ளதுடன், வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பை ஏற்படுத்த பல்வேறு பிரசார வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளது. உதாரணமாக வீதி நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள், வெளியீடுகள், தொழிலாளர்களுக்கான அறிவூட்டல் பயிற்சிகள், குழு கலந்துரையாடல்கள் என்பவற்றை தொழிலாளர்கள், பொதுமக்களை தெளிவூட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பிரசாரங்களை நடாத்தி, அக் கையெழுத்துக்களுடன் சட்டபாதுகாப்பு நகல் ஒன்றினை முன்னாள் தொழில் அமைச்சின் செயலாளருக்கு வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் சமர்ப்பித்தது. மேலும் 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குறைந்தபட்ச வேதன சட்டத்தில் வீட்டுவேலைத் தொழிலாளர்களை அப்புறப்படுத்தியுள்ளமையை அடையாளம் கண்ட வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம், இக் குறைந்தபட்ச சம்பள மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததோடு, பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இம்மசோதாவில் வீட்டுவேலைத் தொழிலாளர்களையும் இணைக்குமாறு அழுத்தம் கொடுத்ததோடு, பாராளுமன்ற வளாகத்திலும் ஒரு பேராட்டத்தினை நடத்தியது.

இன்று வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் ஒரு தேசிய சங்கமாக திகழ்வதோடு மத்திய மலைநாட்டில் ஆரம்பமான இச் சங்கம் வடக்கு, கிழக்கு, தென், மேற்கு மகாணங்களிலும் வியாபித்துள்ளது. இந்நிலையில் இவ் வீட்டுவேலைத் தொழிலாளர்களை பாதுகாப்பது அரசின் கடமை என்பதை உணர்த்தும் முகமாக வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் பல்வேறு அழுத்த செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளது. 29.12.2017 ஆம் திகதி வீட்டுவேலை தொழிலாளர்களும், நிர்வாகக் குழு உறுப்பினர்களில் சிலரும் தொழில் அமைச்சின் செயலாளர்,

தொழில் ஆணையாளர் ஆகியோரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு திருப்திகரமான பதில் கிடைத்தது. இக் கலந்துரையாடலின் இறுதியில் தொழில் அமைச்சுக்கு வீட்டுவேலை தொழிலாளர் சங்கத்தினால் சட்டங்களை தயாரிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களும் கையளிக்கப்பட்டன.

அதுமட்டுமன்றி இதன் தொடர் கலந்துரையாடல் 28.02.2018 அன்று மீண்டும் ஒருமுறை தொழில் அமைச்சு செயலாளருடன் இடம்பெற்ற போது வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மிக விரைவில் ஊர்ஜிதம் செய்வதாக உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இவ்வாறு பல பேராட்டங்கள், அழுத்த செயற்பாடுகளின் விளைவால் வீட்டுவேலை தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பு தொடர்பான வரைபினை 06.03.2018 ஆம் திகதி தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அமைச்சரவையில் வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கான சட்டங்களை இயற்றும் கொள்கை ஒப்புதலை பெற்றிருப்பதானது (இவ் இணையத்தள முகவரியில் அமைச்சரவை தீர்மானத்தை பார்க்ககூடியதாக உள்ளது. https://www.news.lk/) வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் அடைந்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.

 

ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவேண்டும்

* வீட்டுப் பணியாளர்கள் இதை ஒரு தொழிலாகவே தொடர்ச்சியாக செய்கின்றார்களா அல்லது ஒரு காலப்பகுதியில் செய்துவிட்டு திருமணத்தின் பின்னர் நிறுத்திக் கொள்கிறார்களா?

சில தொழிலாளர்கள் ஆரம்பகாலத்திலிருந்தே வீட்டுவேலையை தொழிலாகவே செய்து வருகின்றார்கள். இன்னும் சிலர் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று ஓய்வு பெற்றதன் பின்னர் இத்தொழிலில் ஈடுபடுகின்றார்கள். வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று திரும்பிய பின்னர் உள்நாட்டில் வீட்டுவேலையில் ஈடுபடும் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள்.

* ஊழியர் சேமலாப நிதி கொடுக்கும் நிலை ஏற்பட்டால் அதை எப்படி செயல்படுத்துவது?

ஊழியர் சேமலாப நிதி என்பது சகல தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஒரு நிதி. எனவே வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கும் இது வழங்கப்பட வேண்டும். ஊழியர் சேமலாப நிதியை வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடை உரிமையாளர்கள் ஊழியர் சேமலாப நிதி வழங்குவது போல் வீட்டுவேலை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் வீட்டு உரிமையாளர்கள் இப் பணத்தை செலுத்த வேண்டும்.

* சம்பளம் ஒரு துண்டில் எழுதப்பட்டதாக தரப்படுமா?

எந்த ஒரு சம்பள கொடுப்பனவும் ஆதாரபூர்வமாக நடைபெற வேண்டும். எனவே ஒவ்வொரு தொழில் வழங்குனர்களும் சம்பளத்தை வழங்கும்போது வவுச்சர் முறை அல்லது வேறு ஏதாவது ஒரு பதிவு முறையைப் பயன்படுத்தலாம்.

* எத்தகைய ஒரு சட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள்? வீட்டுவேலை தொழிலாளர்களும் மதிக்கத்தக்க தொழிலாளர்களாகக்கருதி இத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஏனைய தொழிலாளர்களுக்கும் காணப்படும் சகல சட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

 

வீட்டுப்பணியாளர்கள்; ஒரு தகவல் திரட்டு

1. இலங்கையில் பணியில் உள்ள மொத்த வீட்டுவேலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை?

உள்நாட்டில் வேலை செய்யும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அண்ணளவாக 700,000 பேர்.

2. ஆண், பெண், சிறுவர், சிறுமியர் விபரம்.

80 வீதமானவர்கள் பெண்களே இத்தொழிலில் ஈடுபடுகின்றார்கள். சிறுவர் பாதுகாப்பு சட்டங்கள் உருவானதன் பின்பு சிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தும் விகிதாசாரம் மிகவும் குறைவடைந்துள்ளது.

3.வயதெல்லை :

18 வயதிலிருந்து 72 வயது வரை வீட்டுவேலை தொழிலில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்களின் வயதெல்லை 30 - _ 45 இடைப்பட்டதாக காணப்படுகின்றது.

4.தோராயமாக எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்?

வீட்டுவேலைத் தொழிலாளர்கள் இன்று உயர்வர்க்கத்தினரிடம் மட்டுமன்றி நடுத்தர வர்க்க குடும்பங்களிலும் வேலை செய்வதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் நாள் சம்பளம் 150 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரை வழங்கப்படுகின்றது. மாதச் சம்பளம் 7000 ரூபா தொடக்கம் 30,000 ரூபா வரை வழங்கப்படுகின்றது.

5. துன்புறுத்தல்கள்/பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர்பாக.

எல்லா வேலைத்தளங்களைப் போல வீட்டுவேலை செய்யும் இடங்களிலும் பாலியல் துஷ்பிரயோகம், வல்லுறவுகள் நடக்கத்தான் செய்கின்றன. தங்கி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இப்பிரச்சினை அதிகமாக உள்ளது. தனித்தனி வீடுகளில் இவர்கள் வேலை செய்வதால் இப் பாலியல் ரீதியான தொல்லைகள் ஏனைய தொழிலாளர்களை விட அதிகமாகவே முகம் கொடுக்க வேண்டியேற்படுகிறது.

6. எந்தெந்த பிரதேசங்களில் பணியாற்றுகிறார்கள்?

இலங்கை முழுவதிலும் வீட்டுவேலை தொழிலாளர்கள் இன்று தொழில் புரிந்து வருகின்றார்கள்.

எண்ணிக்கை அடிப்படையில் பெரிய நகர்புறங்களில் அதிகமாகவும், சிறிய நகர்புறங்களில் குறைவாகவும் காணப்படுகின்ார்கள்.

6. தமிழர்கள் சிங்களவர் விவரம்:

75 வீதம் தமிழர்களும், 15 வீதம் முஸ்லிம்களும், 10 வீதமான சிங்களவர்களும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். (இது ஒரு அண்ணளவான கணிப்பீடு)

 

Comments