புதுசிலிருந்து பழசுக்கு மாறும் ரசிகர்கள் | தினகரன் வாரமஞ்சரி

புதுசிலிருந்து பழசுக்கு மாறும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் படப்பபிடிப்பு, புதுப்பட வெளியீடு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தமிழ்த் திரைப்பட துறையினரின் வேலை நிறுத்த போராட்டத்தால் முடக்கப்பட்டிருப்பதால் தமிழ் திரையுலகம் வெறிச்சோடி கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடன் வாங்கி படம் எடுத்தவர்கள் எல்லோரும் படத்தை வெளியீடு செய்ய முடியாமல் திண்டாடி வருவதாகவும். வாங்கிய வட்டிகள் குட்டிப் போட்டு வருவதால் அவர்களின் ஒப்பாரி ஓலங்கள் சென்னையில் ஆங்காங்கே கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் தியேட்டர்களும் காய்ந்துதான் கிடக்கிறது. இருந்தாலும் முப்பது வருடத்துக்கு முன்னால் வந்த சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களின் பிரிண்டுகளை தூசு தட்டி எடுத்து அதை ஓட்டி பெரிசுகளை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியிலும் தியேட்டர்காரர்கள் இறங்கி வருகிறார்கள். பாலைவனரோஜா, நிறமாறாத பூக்கள், கிழக்கே போகும் ரயில் என்று என்பதுகளின் படங்களும் சில இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறதாம். ‘பெரிசா வருமானம் இல்லைதான் என்றாலும் கரண்ட் பில்லு கட்டுறதுக்காகவாவது உதவும்’னு தியேட்டர்கார்கள் சொல்கிறார்கள்.

இந் நிலையில் சென்னையில் உள்ள திரையரங்குகளில் ஆந்திராவில் சுடச்சுட வெளியாகும் தெலுங்கு படங்களை, அதே சூட்டோடு இறக்கி வைக்கக் கிளம்பிவிட்டார்கள். ராம் சரண், தேஜா நடித்த படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி சென்னை சத்யம் காம்ப்ளக்ஸ் களை கட்டி ஓடிக் கொண்டிருக்கிறதாம். ‘எத்தனை நாளைக்குத்தான் தமிழ் படத்தையே பார்க்குறது நாமளும் கொஞ்சம் கிளு கிளுன்னு மின்னுற தெலுங்கு படத்தையும் பார்க்கலாமேன்னு ரசிகர்க ளின் மனோநிலையிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரத் தொடங்கியிருக்கிறது. விரைவில் மகேஷ்பாபு நடித்த புதுப்படம் ஆந்திராவில் வெளியாகும் அதே தினத்தில் சென்னையில் வெளியாக உள்ளதாம்.

இது ஒரு வகையில் தமிழ் சினிமாவின் வேலை நிறுத்தத்திற்கு ஒரு சறுக்கல்தான். தெலுங்கு படங்கள் தமிழகத்தின் தியேட்டர்களின் கல்லாப் பெட்டியை நிரப்பிவிடுவதால் தமிழ் சினிமாவின் வேலை நிறுத்தத்தையும் தாண்டி தியேட்டர்காரர்கள் வாழ்கிறார்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

போகிற போக்கை பார்த்தால் தமிழ் சினிமாவை அடியோடு நிறுத்திவிட்டு வெளி மாநில, வெளிநாட்டு படங்களை இறக்கினாலே போதும் என்கிற நிலைக்கு தியேட்டர்காரர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம் தமிழ் சினிமாகாரர்களின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டிருக்கிறது.

Comments