ராதிகா ஆப்தே கொளுத்திப் போட்ட திரியை பெரு நெருப்பாக மாற்றிய ஸ்ரீரெட்டி | தினகரன் வாரமஞ்சரி

ராதிகா ஆப்தே கொளுத்திப் போட்ட திரியை பெரு நெருப்பாக மாற்றிய ஸ்ரீரெட்டி

சினிமாவில் ஒரு நடிகை உச்சத்தை தொட வேண்டுமென்றால் அவள் ஒரு இயக்குனரிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத நியதி. இந்த விசயம் தெரிந்ததுதான் என்றாலும் யாரும் அதை கண்டுகொள்வதே இல்லை. ஆனால் கடந்த சில மாங்களுக்கு முன்னால் நடிகை ராதிகா ஆப்தே இந்த விடயத்தை நேரிடையாகவே பத்திரிகையாளர்களிடம் சொன்னார். அதன் பிறகு ராதிகா ஆப்தேயின் செய்தி அதிரடியாக பத்திக்கொண்டதால் இந்திய திரையுலகம் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தது. அதன் பிறகும் ராதிகா ஆப்தே கொளுத்திப்போட்ட தீ தொடர்ச்சியாக எரிந்து கொண்டுதான் இருந்தது. அது இன்னும் அணைந்த மாதிரி தெரியவில்லை. கடந்த வாரம் தெலுங்கு பட நடிகை ஸ்ரீரெட்டி படுக்கை அறைக்கு நடிகைகள் அழைக்கப்படுவதைக் கண்டித்து ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

தெலுங்கு திரைப்பட உலகில் நடிகைகளை படுக்கை அறைக்கு அழைப்பதாகவும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தெலுங்கு பட உலகம் அமைதியாக இருப்பதாகவும், மேலும், தெலுங்கு திரைப்படத்தில் தெலுங்கு நடிகைகளுக்கு மட்டுமே 75 சதவீத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீ ரெட்டி தமது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்திருந்தார்.

சில முன்னணி தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமீபத்தில் ஸ்ரீரெட்டி சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி இருந்தார். வளர்ந்து வரும் நடிகைகளுக்கு தொந்தரவு கொடுக்கும் அந்த சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்களின் பெயரை வெளியிடப் போவதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஸ்ரீரெட்டியின் இந்த போராட்டம் தென்னிந்திய சினிமா உலகத்தையே அதிர வைத்திருக்கிறது. ராதிகா ஆப்தே வெறும் வார்த்தைகளோடு நிறுத்திக் கொண்ட விடயத்தை ஸ்ரீரெட்டி போராட்டமாக கையிலெடுத்து இருக்கிறார்.

இனி இது தமிழ் சினிமாவின் சாக்கடைகளையும் வெளியே கொண்டு வரலாம் என்று தமிழ் சினிமா வட்டாரமும் பதற்றத்தில் இருக்கிறதாம்.

Comments