வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான விமோசனம் | தினகரன் வாரமஞ்சரி

வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான விமோசனம்

அருள் சத்தியநாதன்

 

சட்ட வரையறைக்குள் வராத மற்றும் ஒருவகையான அடிமைத் தொழில் போல் நோக்கப்படும் வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களுக்குச் சட்ட ரீதியான விமோசனம் கிடைக்கவிருப்பதாக இலங்கை வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பு தொடர்பான வரைவை தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அமைச்சரவையில் சமர்ப்பித்து அது தொடர்பான சட்டத்தை இயற்றுவதற்கான ஒப்புதலை பெற்றுள்ளார் என்றும், விரைவில் இது சட்ட மூலமாகத் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் இச்சங்கத்தின் தலைவி மேனகா கந்தசாமி தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததும் சட்டவிதிகள் நிர்ணயிக்கும் மாதச் சம்பளத்தை வீட்டு உரிமையாளர்கள் தாம் வேலைக்கு அமர்த்தும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டியிருக்கும் என்பதோடு சம்பள ரசீதையும் வழங்க வேண்டியிருக்கும். அதே ரசீதில் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், முற்பணம் வழங்கப்பட்டிருந்தால் அந்த விபரம் என்பன குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் இன்று வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் ஒரு தேசிய சங்கமாக திகழ்வதோடு மத்திய மலைநாட்டில் ஆரம்பமான இச் சங்கம் வடக்கு, கிழக்கு, தென், மேற்கு மகாணங்களிலும் வியாபித்துள்ளது. இந்நிலையில் இவ் வீட்டுவேலைத் தொழிலாளர்களை பாதுகாப்பது அரசின் கடமை என்பதை உணர்த்தும் முகமாக வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் பல்வேறு அழுத்த செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளது. 29.12.2017 ஆம் திகதி வீட்டுவேலை தொழிலாளர்களும், நிர்வாகக் குழு உறுப்பினர்களில் சிலரும் தொழில் அமைச்சின் செயலாளர்,

தொழில் ஆணையாளர் ஆகியோரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு திருப்திகரமான பதில் கிடைத்தது. இக் கலந்துரையாடலின் இறுதியில் தொழில் அமைச்சுக்கு வீட்டுவேலை தொழிலாளர் சங்கத்தினால் சட்டங்களை தயாரிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களும் கையளிக்கப்பட்டன.

அதுமட்டுமன்றி இதன் தொடர் கலந்துரையாடல் 28.02.2018 அன்று மீண்டும் ஒருமுறை தொழில் அமைச்சு செயலாளருடன் இடம்பெற்ற போது வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மிக விரைவில் ஊர்ஜிதம் செய்வதாக உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இவ்வாறு பல பேராட்டங்கள், அழுத்த செயற்பாடுகளின் விளைவால் வீட்டுவேலை தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பு தொடர்பான வரைபினை 06.03.2018 ஆம் திகதி தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அமைச்சரவையில் வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கான சட்டங்களை இயற்றும் கொள்கை ஒப்புதலை பெற்றிருப்பதானது (இவ் இணையத்தள முகவரியில் அமைச்சரவை தீர்மானத்தை பார்க்ககூடியதாக உள்ளது. https://www.news.lk/) வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் அடைந்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.

Comments