நல்லாட்சியில் நீடிக்கும் இழுபறி; சு.க கூட்டத்தில் காரசாரம்; மூன்றாக பிளவடைகிறது சு.க | தினகரன் வாரமஞ்சரி

நல்லாட்சியில் நீடிக்கும் இழுபறி; சு.க கூட்டத்தில் காரசாரம்; மூன்றாக பிளவடைகிறது சு.க

மிகுந்த பரபரப்பான சூழலில் சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடியது. நல்லாட்சி அரசாங்கத்தல் நீடிப்பதா இல்லையா மற்றும் பிரதமருக்கு எதிரான பிரேரணையை ஆதரித்த அமைச்சர்களின் அமைச்சு பதவிகளை கைவிடும் கோரிக்கை என்பன குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது.

16 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் எதிரணியில் அமர தாம் தயாராக இருப்பதாக இங்கு வலியுறுத்தியிருந்தனர். இந்த கூட்டத்திற்கு முதல்நாள் ராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பாவின் இல்லத்தில் நடந்த இரகசிய கூட்டத்தில் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டதோடு அது இங்கு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, தான் 16 பேரையும் கைவிட தயாரில்லை எனவும் அவர்களுக்காக குரல் கொடுப்பதாகவும் கூறியதாக அறிய வருகிறது. சு.காவை பலப்படுத்துவதற்காக கட்சி தலைவர் பதவியை கைவிடக் கூட தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே வேளை, மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சற்று காரமாக பேசிவிட்டு வெளியேறியதாக அறிய வருகிறது. இதற்கு ஜனாதிபதியும் கடுமையாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் நீடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவரும் அவர், நல்லாட்சி அரசை உருவாக்க சகலரையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடிந்ததாகவும் கூறியுள்ளார். அன்றைய சூழ்நிலையில் யாரை நிறுத்தியிருந்தாலும் வென்றிருக்கலாம் எனவும் அவர் கடுமையாக சொன்னதாக தகவல்.

ஏற்கெனவே நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தால் குழம்பிப் போயிருக்கும் அவருக்கு முன்னாள் ஜனாதிபதியின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்று இருந்தது.

இதனால், கடுமையான மனவேதனையுடன் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி,அவர் சொல்வதை ஏற்க முடியாது. நான் உயிரை பணயம் வைத்துத்தான் ஜனாதிபதி தேர்தலில் குதித்தேன். அவ்வாறானால் ஐ.தே.கவில் ஒருவரை நிறுத்தியிருக்கலாம் என்று கூறினாராம்.

அரசாங்கத்தில் இருந்து விலகும் யோசனையொன்றும் இங்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் அது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மீண்டும் கடந்த புதன்கிழமை கூடி ஆராய தீர்மானிக்கப்பட்டாலும் அந்த திகதியிலும் கூட்டம் நடைபெறாமல் பின்போடப்பட்டது. அதற்குப் பதிலாக பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோர் தனியாகவும் பங்கேற்காதவர்கள் தனியாகவும் ஜனாதிபதியை தனித்தனியாக சந்தித்திருந்தார்கள். 16 பேரும் அரசில் இருந்து விலக வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்க விவாதத்தில் பங்கேற்காத குழுவில் அநேகர் தொடர்ந்து நீடிக்கும் முடிவில் உள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது.இந்த நிலையில், முடிவு எடுக்க முடியாமல் ஜனாதிபதி திரிசங்கு நிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.

எதிராக வாக்களித்தவர்களுடன் ஒன்றாக ஆட்சியில் நீடிக்க முடியாது. அவர்களை நீக்குங்கள் என்ற ஐ.தே.க. அழுத்தம் தொடர்ந்திருந்த நிலையில் புதன்கிழமை இரவு நடந்த கூட்டத்தில் 16 பேருக்கும் அமைச்சு பதவிகளை கைவிட்டு எம்.பிகளாக செயற்பட ஜனாதிபதி முழு மனமின்றி அனுமதித்தாராம். தனியான சு.க. குழுவாக எதிரணியில் இருந்து செயற்பட இவர்கள் முடிவு செய்துள்ளதோடு ஓரிருவர் மாத்திரம் மஹிந்த ஆதரவு அணியில் இணையலாம் எனவும் நம்பப்படுகிறது.

எதிரணியில் இருந்தாலும் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் தொடர்ந்து செயற்படவும் கட்சி முடிவு முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்கவும் ஏனையோர் முடிவு செய்துள்ளனராம்.

ஐ.தே.க மறுசீரமைப்பு

ஐ.தே.க மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஒரு குழு தொடர்ந்து கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அறிய வருகிறது.

கட்சி தலைமை முதல், இந்த மறுசீரமைப்பு இடம்பெற ​வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

எதிர்பார்த்த மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பிரதமருக்கு எதிராக தாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர நேரிடும் எனவும் இந்த தரப்பு கூறியுள்ளதாம்.

7 ஆம் திகதி நடைபெற்ற ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் குழுவொன்று நியமிக்கப்பட்டு மறுசீரமைப்பிற்கு யோசனைகள் பெறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜிதவும் அவரின் புதல்வர் சதுரவும் கூட கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் ஐ.தே. முன்னணி ஊடாக பாராளுமன்றம் தெரிவானாலும் அவர்கள் ஐ.தே.க அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில், அமைச்சர் ராஜித பின்வரிசையில் அமர்ந்திருந்தார்.

இருவரும் ஐ.தே.கவில் இணைவதாக அறிவித்துள்ளதாக பிரதமர் இங்கு அறிவித்தார்.

இதன்படி, கட்சி மறுசீரமைப்பிற்கு உருவாக்கப்பட்ட குழுவுக்கு மறுசீரமைப்பிற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் கட்சி பிரதி தலைவர் பதவிக்கு ராஜித சேனாரத்னவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஐ.தே.க பிரதி தலைவராக சஜித் பிரேமதாஸ செயற்படுகிறார். மற்றொரு பிரதி சபாநாயகர் பதவியை உருவாக்கி ராஜித சேனாரத்னவுக்கு வழங்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.

இழுபறியில்

அமைச்சரவை மாற்றம்

ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய பிரதமர் அடங்கலான ஐ.தே.க அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தார்கள். இந்த சந்திப்பில் அமைச்சர்களான ராஜித, மலிக், கபீர், அகில, மங்கள, ஹக்கீம் ஆகியோர் இணைந்திருந்தார்கள்.

அமைச்சரவை மாற்றம் பற்றி இங்கு ​பேசப்பட்டது. ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ எதிராக செயற்படும் எவருக்கும் அமைச்சரவையில் இருக்க முடியாது. அவர்களை நீக்க வேண்டும் என அமைச்சர் ராஜித இங்கு சுட்டிக்காட்டியிருந்தாராம். சு.க அமைச்சர்களை மனதில் இருத்தியே அவர் இதனை தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்களை நீக்கினால் ஏனையவர்களும் விலகுவர். அந்த நிலையில் கட்சியை வழிநடத்த முடியாத நிலை ஏற்படும் என்று விளக்கமளித்துள்ளார். ஆனால் அவர்களை நீக்க வேண்டும் என ஐ.தே.கவினர் வலியுறுத்தியுள்ளனர். பிரதமருக்கு எதிராகச் செயற்பட்ட அமைச்சர்களை ஓரங்கட்டி புதிய அமைச்சரவை நியமிக்க இங்கு யோசனை முன்வைக்கப்பட்டது.

யதார்த்த பூர்வமாக புதிய அமைச்சரவை அமைய வேண்டும் எனவும் இங்கு முடிவு செய்யப்பட்டது.புத்தாண்டிற்கு முன்னதாக புதிய அமைச்சரவையை நியமிப்பதாக ஜனாதிபதி இங்கு அறிவித்தார்.

ஐ.தே.க மட்டும்

பங்கேற்ற அமைச்சரவை

மத்திய குழுவில் எடுத்த முடிவின் பிரகாரம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சு.க அமைச்சர்கள் 13 பேரும் பங்கேற்கவில்லை. பிரதமருக்கு எதிராக வாக்களித்த மற்றும் வாக்களிப்பில் பங்கேற்காத அனைவரும் ஒன்றாக இந்த முடிவை செயற்படுத்தியிருந்தார்கள்.

வேலைநிறுத்த பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்ட பின்னர் அமைச்சரவை மாற்றம் பற்றி தலைப்பு விவாதிக்கப்பட்டது.

யதார்த்தபூர்வமாக அமைச்சரவை மாற்றம் அமைய வேண்டும் என ஜனாதிபதியும் ஏனையோரும் இங்கு வலியுறுத்தியுள்ளனர்.

தனித்தனியாக பிரிந்துள்ள அநேகமான அமைச்சுக்களை இணைப்பது பற்றி இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி அமைச்சுகள் ஒரே அமைச்சின் கீழ் வர வேண்டும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. தனக்குக் கீழ் இருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சை அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுடன் இணைக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டாராம்.

ஆனால் இதற்கு அமைச்சர் மங்கள சமரவீர ஆட்சேபனை தெரிவித்தாராம்.

ஜனாதிபதியின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சை வைத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக நாம் சர்வதேச சமூகத்திடம் கூறி வருகிறோம். அதனால் மாற்றம் வேண்டாம் என்றாராம்.

உடனே அமைச்சர் மனோ கணேசனும் இந்த பேச்சில் இணைந்து தனக்குக் கீழ் இருக்கும் அமைச்சில் ஒரு பகுதியையும் பெற்று அரசாங்கத்தை பலப்படுத்துமாறு கூறினாராம்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் சம்பிக மூன்று யோசனைகளை முன்வைத்தாராம். இதேபோன்று ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து புதிதாக அரசை முன்னெடுத்தல் அல்லது 16 சு.க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் இன்றி எஞ்சிய 26 சு.கவினருடனும் இணைந்து அரசாங்கத்தை செயற்படுத்தல் என்பன இதில் அடங்கும்.

இது தவிர சு.க இன்றி ஐ.தே.க ஆட்சியொன்றை முன்னெடுப்பது அவரின் மற்றைய யோசனையாகும்.

சு.கவுடன் பேசி இது தொடர்பில் முடிவு எடுப்பதாக ஜனாதிபதி இங்கு கூறினாராம்.

Comments