வடக்கு வாசல் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு வாசல்

 ராமண்ணே

“என்ன முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு வாறனீ”

“எல்லாம் பிரச்சினதான்”

“புத்தாண்டு கொண்டாட்டமெல்லாம் வரப்போகுது. உசார இருக்கல்லோவேணும்”

“இருக்கவேணும். ஆனா முடியேல்லயே?”

“சரி என்ன வில்லங்கம் என்டு சொல்லன”

“பத்தாயிரம் ரூபா எடுத்துக்கொண்டு புத்தாண்டுக்கு சாமான் வாங்குவமென்டு போனனாங்கள. அரை வாசி சாமான்தான் வாங்கினனாங்கள். காசு முடிஞ்சுட்டுது.”

“பின்ன”

“பின்ன என்ன இண்டைக்கு திரும்பவும் சாமான் வாங்க போகவேண்டிக் கிடக்கு”

“உதுதான் பிரச்சினையென்ன. உந்த விலைவாசி பிரச்சினை உனக்கு மட்டுமென்டில்ல. எல்லோருக்கும் இருக்குது தெரியுமோ?”

“காசு பஞ்சாப் பறக்குதண்ண”

“கொழும்பு உசரத்துக்கு போட்டதால வந்த பிரச்சினை இது”

“கொழும்பு உசரத்துக்குப் போட்டுதோ?

“நான் சிம்போலிக்கா சொன்னனான் கொழும்பு உசரப் போட்டுதெண்டு. இந்தியாவில புது டில்லி, சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களைவிட எங்கட கொழும்புதான் அதிக செலவுமிகுந்த நகரம் என்டா நம்பேலுமே”..

“எங்கட கொழும்போ?” நம்ப முடியாமல் கிடக்கென்ன.?”

“ஆனா உதுதான் உண்மை”.

“உண்மைதான் அண்ணே.. எங்கட பொருட்களின்ட விலையை பார்க்கேக்கை உது உண்மைதான். கடையில ஒரு சோத்துப்பார்சல் 100 ரூபாவுக்கு குறைவா கிடக்குதோ. ஒவ்வொரு கடையில ஒவ்வொரு விலை. அதுவும் அரை வயிறுதான் நிரம்புது. இடியப்பம் ஒன்டு சைவ கiயில் 8 ரூபா, உழுந்து வடை 50, 60 ரூபா.”

“உது சாதாரண கடையிலல்லோ.. கொஞ்சம் ஸ்டார் ஹோட்டல் என்டா அதில இரட்டிப்பு விலை. தேத்தண்ணி ஒரு கோப்பை 30, 40 ரூபா. அதுவும் அரை குவளை. குளிர்பாணம் என்டு விற்கினம் அது அதைவிட விலை. சைவக் கடையில விலையை கேட்டுப் போட்டுத்தான் சாப்பிட வேண்டிக் கிடக்கு. இல்லை என்டா கையில இருக்கிற காசு போதாமப் போகும்”.

“ஓம் அண்ணே... ஒரு இறாத்தல் பாண் ஒவ்வொரு விலையில கிடக்குது”.

“ஒம் சின்ன ராசு. பேக்கரியில் 50 ரூபா, சாதாரண கடையில 55, 60 ரூபா. துண்டா வெட்டி பொலித்தின் பேப்பரில வெச்சவையென்டா 75 ரூபா. சோட்டீஸ் என்டு விற்கினமே. அதில மரவள்ளி கிழங்கை போட்டு கிழங்கு போட்ட மாதிரி விற்பினம்”.

“என்ன அண்ணே செய்றது?”.

“பண்டிகை வருகுதென்டா பயமாக் கிடக்குது சின்னராசு.”

“ஏனன்ண..?”

“பண்டிகை முடிஞ்சவுடன பொருட்களின்ட விலைகளை ஏற்றிப் போடுவினம். உது தான் பயம்’.

“விலைவாசியை குறைக்க முடியாதே.?”

“விலைவாசி என்டா என்னவென்டு முதலில பாப்பம். உணவு, தங்குமிடம், சுகாதாரம் போன்ற அடிப்படையான வாழ்க்கை தேவைகள் இருக்கென்ன. உதுகள நிறைவேத்திக்கொள்ள ஒவ்வொரு மாசத்திலயும் ஏற்படுற செலவைத்தான் விலைவாசி என்டு சொல்லுவினம். உது நாட்டுக்கு நாடு நகரத்துக்கு நகரம் அத்துதாட காலத்துக்கு காலம் வேறுபடும்”.

“டவுனில இருக்கிற செலவு கிராமத்தில இல்லண்ணே.”.

“ஓம் ஓம் நகர்ப் புறங்களில சனம் அதிகமா கிடக்குது. அவையின்ட தேவைகளும் அதிகம். ஆனால் கிராமத்தில இருக்கிறவை கொஞ்ச செலவுல எதையும் முடிச்சுக் கொள்ளுவினம் என்டபடியா கிராமவாசிகள் தங்களின்ட தோட்டங்கள் துறவில இருந்து தேவையான மரக்கறி, பழவகைகள பெற்றுக்கொள்ளுவினம். ஆனால் நகரங்களில இருக்கிறவை எல்லாத்தையும் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டிக் கிடக்கு.

வாழைப்பழம் எங்கட வீட்டிலேயே கிடக்குதென்ன. இந்த உணவு விசயத்துல சத்துள்ள உணவாக கிடைக்கவும் வேணும். கிருமிநாசினிகள் தெளிக்காத நல்ல மரக்கறி உள்ள பழங்களா இருக்கவும் வேணும் கண்டியோ”.

“எங்கட கிராமத்துல நல்லது தான் அண்ணே கிடக்குது”.

‘கிருமி நாசினி தௌpக்காததுதான். ஆனால் உரம் போட்டு தோட்டங்களில கிடக்குறதிலதான் சத்து”.

“சந்தையில கிருமிநாசினி தெளிச்சுத்தான் அண்ணே வச்சிருக்கினம”.

“உதைத்தான் சொன்னனான் பாத்து கவனமா வாங்க வேணும்.”

வார சம்பளத்துல தானண்ணே எல்லாம் வாங்க வேண்டிக் கிடக்கு”.

“உது உண்மைதான் சின்னராசு. சாதாரணமா ஒரு ஆசிரியர், அரசாங்க வேலை செய்றவர், கடையில வேலை செய்றவர் என்டு பார்த்தால் எங்கட நாட்டுல 20, 25 ஆயிரம் அளவுக்குள்ளதான் சம்பளம் வருகுது. உதுக்குள்ளதான் வீட்டுச் செலவகள மொத்தமா கவனிக்க வேண்டிக் கிடக்குது”

“கஷ்டம் தான் என்ன. ஒரு வீட்டின்ட மின்சார பில் டவுனில என்டா சாதரணமா 4,000 வரையில வரும். கிராமத்துல என்டா 2,000 தண்ணி பில் டவுனில 500 ரூபா என்டா கிராமத்துல கிணறுல இலவசமா கிடக்குது. செல்போன் இன்டர்நெட் இப்ப எல்லா வீட்டிலயும் இருக்குது. உதுக்கு மாசம் 2000. பால் ஒரு போத்தல் 100 ரூபா, அரிசி 75, தேங்காய் 100, மரக்கறி ஒவ்வொரு விலை. மீன் 300, இறைச்சி 400, பஸ்சுக்கு காசு போற தூரத்தைப் பொறுத்து கிடக்கு. சுகாதார செலவுகள், பாடசாலைககுக போற வேன் செலவு. பிள்ளையளின்ட சீருடைஇ புத்தகம், பேக் செலவ, விருந்தாளிகள் வந்தினம் என்டா அவையள கவனிக்கிற செலவு. என்ட எல்லா செலவுகளையும் பாத்தம் என்டா கிடைக்குற சம்பளத்துல மீதி என்டு ஒன்டும் இல்லை.”

“சொந்த வீடென்டா பரவாயில்ல. வாடகை என்டா சிக்கல்”

“ஓம் சின்ன ராசு. வீட்டு வாடகை மருத்துவ செலவு என்பவையை மறந்து போட்டனான். உதுல கேஸ் விலையையும் சேர்த்துக்கொள்ள வேணும்”.

“உதை எல்லாம் சேர்த்தா மீதி வருமே.?”.

“ஒவ்வொரு மாசமும் கடன் வேண்டத்தான் வரும்”

“மாசா மாசம் கடன்வேண்டி கட்டேலுமே?”

“ஒரு வீட்டுல கணவனும் மனைவியும் வேலை செஞ்சாதான் சின்னராசு கொஞ்சமாவது மிஞ்சி வரும் இல்லை என்டா ஒரு வீட்டில 3, 4 பேராவது வேலை செய்ய வேணும். அப்பிடி இல்லாது போச்சுதென்டா சமாளிக்கிறது கஷ்டந்தான்”

“சில வீடுகளில ஒருத்தருக்கே வேலை இல்லை அண்ணே...எங்கட வீட்டில ரென்டு பேர்... நானும் தம்பியும் தான் வேலை. எல்லாம் 10 பேர் அதில வயசானவை மூன்டு பேர். பிள்ளையள் ரென்டு. கூட்டுக் குடும்பமாதான் இருக்கிறனாங்கள். சொந்த வீடு என்டபடியா சமாளிக்கிறனாங்கள். இல்லயென்டா சிரமந்தான்.”

“வேலையை எடுக்கவும் இலஞ்சம் கொடுக்க வேண்டியல்லவோ கிடக்குது”.

“சரியா சொன்னியள் பிறகெங்க மிச்சம் பிடிக்கிறது...சேமிக்கிறது.”

Comments