இணைத்து வைத்த புத்தாண்டு! | தினகரன் வாரமஞ்சரி

இணைத்து வைத்த புத்தாண்டு!

எஸ். இலங்கேஷ்- பண்டாவளை

ஆட்கள் குறைவாக இருந்தபடியால் பாதையில் வரும் பயணிகளைத் தேடிப் பிடித்து உள்ளே போட்டுக் கொண்டு மெதுமெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது பஸ்.

உள்ளே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இருக்கைகளில் ஐந்தாறு பயணிகள் அமர்ந்திருந்தார்கள். ஜன்னலருகே இருக்கையொன்றில் மிகவும் சொகுசாக அமர்ந்திருந்தாள் வனிதா. அவளின் கண்கள் அடுத்த ஹோல்டில் ஏற இருக்கும் செல்லம் எனச் செல்லமாக அழைக்கப்படும் செல்வராணியைத் தேடிக்கொண்டிருந்தன.

ஆம், அதோ செல்வராணிதான் மிகவும் ஸ்டைலாகக் கையைக் காட்டிப் பஸ்ஸை நிறுத்திக்கொண்டாள். பஸ்ஸினுள் ஏறியதும் கண்களால் துழாவிக் கொண்டே வந்தவள் வனிதாவைக் கண்டதும் முகம்மல ர்ந்தாள். அவளருகே அமர்ந்தாள். பயணம் தொடர்ந்தது.

“ஏய்! ஏண்டி தனியா வாறே?” வனிதா தான் கேட்டாள்.

“தனியே வராமே, வேற யாரோட வரணும்?”

“ஒன்னோட ஆளு எங்க?” குறும்பாகக் கேட்டாள் வனிதா.

“சீ! யாருடி அது? பொய்க் கோபத்துடன் சொன்னாள் செல்வராணி.

“போடி! ஒண்ணும் தெரியாத மாதிரிதான்... அதான் நம்ம, இல்லை இல்லை ஒன்னோட சரத் எங்க?”

ஆங்! அந்தக் கம்புக் குச்சியா? அது வருமாயிருக்கும்” செல்வராணி பதிலுக்குக் கூறினாள்.

சரத் மிகவும் ஒல்லி, உயரமானவன். சிவத்த மேனி, எனவே அவனுக்குக் ‘கம்புக்குச்சி’ என்று பட்டப்பெயர் சூட்டியிருந்தார்கள் இந்தப் பெண்கள்.

“ஏய்! பொய் சொல்லாதே! சரத்துக்கு ஒம்மேலே சரியான லவ்வு. நீதான் என்னமோ...” சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் செல்வராணி.

“போடி! போடி! அவனுக்கும் நமக்கும் சரிப்பட்டு வருமா. அவன் சி. புள்ளி நாம?” அவன் பெரும்பான்மை இனம் என்பதை சூசகமாகக் குறிப்பிட்டாள் செல்வராணி.

“அதுக்கென்னாடி? இப்ப ஒருத்தரும் அப்புடிக் கட்டாமலா இருக்கிறாங்க? நீ சரின்னு சொல்லிரு...”

“போடி! அவன் எந்த நேரமும் மண்வெட்டியும் கையுமா மண்ணைக் கொத்திக்கிட்டு மேலுகாலெல்லாம் சகதியை அப்பிக்கிட்டு இருப்பான். போயும் போயும் அவனையா லவ் பண்ணச் சொல்லுறே! நாங் கட்டுனா பெரிய உத்தியோகம் செய்யிறவனா, அதுவும் பாத்தா அழகா ஸ்மார்ட்டா அஜித் மாதிரி இருக்கிறவனைத் தான் கட்டுவேன்.”

“போடி! பெரிய இவன்னுதான் நெனப்பு” கிண்டலாக வனிதா சொல்லவும்

“சரி அது இருக்கட்டும் இருட்றதுக்கு முந்தி கண்டிக்கிப் போயிரலாமா?” என்றாள் செல்வராணி.

“போயிரலாம்! போயிரலாம்” என்றதும் “அஞ்சி நாளைக்கும் ஒரே கும்மாளம்தான்! வீட்லே பிக்கல் புடுங்கள் இல்லாமே போய்ஸ்மாருடன் கும்மாளம் போட்டு வர வேண்டியதுதான்....” என்றாள் செல்வராணி.

“அப்புடி இல்லேடி! நாம போறது ஏதாவது ஒன்னைப் படிச்சிக்கிட்டு வர. அந்தப் பயிற்சி நிலையத்திலே, வீட்டுத் தோட்டம் அமைக்கிறது, சேதனப் பயிர் செய்றது, பூஞ்செடி வளர்ப்பு, மாடு, ஆடு வளர்ப்பு சம்பந்தமா எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்களாம். படிச்சிட்டு வந்து நாமலும் ஏதாவது ஒன்றைச் செய்து வருமானம் தேடலாமாம். நம்மளோட இணைப்பாளர் சொன்னாரு” என்றாள் வனிதா.

“அடி, போடி! அதை யாருடி செய்றது. நான்னா வாறது வீட்லே போரடிக்கும்ணுதான். அங்கே சொல்றதைக் கேட்டுக்கிட்டு வர வேண்டியதுதான். இங்கே வந்து யாரு செய்வாங்களாம்?”

உரையாடல்கள் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தன. மாலை ஐந்து மணியளவில் கண்டியிலுள்ள விவசாயப் பயிற்சி நிலையத்தை அடைந்தார்கள்.

குளித்து உடை மாற்றிக் கொண்டு முன் மண்டபத்துக்கு வந்தார்கள். அவர்களைப் போலவே இன்னும் பலரும் பல நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் இருந்து பயிற்சிக்காக வந்திருந்தார்கள்.

“அங்கே பாருடி! யாரு வாறதுன்னு?” வனிதா வாசற்படியைக் காட்டினாள் அங்கே கம்புக்குச்சி எனப்படும் சரத் வந்து கொண்டிருந்தான்.

அந்த விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஐந்து நாட்களாக சேதன முறையில் விவசாயம் செய்வது எப்படி? வீட்டுத் தோட்டம் அமைப்பது காய்கறிகளை மூலிகைகளை எவ்வாறு பயிர்செய்வது கால்நடை வளர்ப்பு பற்றியெல்லாம் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சிகள் முடிந்து அனைவருமே வீடு திரும்பினார்கள். செல்வராணியும் வீடு திரும்பினாள். அவள் வசிக்கும் தோட்டக் குடியிருப்புக்கு அருகிலேயே சரத் சொந்த வீட்டில் குடியிருந்தான்.

தேயிலைத் தோட்டத்து மலைகளின் அடிவாரத்தில் சரத்தினுடைய தகப்பனாரின் வயல் நிலம் இருந்தது. சிறுது சிறுதாக தோட்டத்துத் தேயிலைச் செடிகளைப் பிடுங்கி அத்துமீறிப் பிடித்த தோட்டத்துப் பூமியில் சரத்தின் அப்பா சிறிய வீடொன்றைக் கட்டியிருந்தார்.

இது தோட்டப்புறங்களில் அனேகமாக நடக்கும் விடயம் என்றாலும் தோட்ட நிர்வாகிகள் அதனைக் கண்டும் காணாமல் இருந்து விடுவது வழக்கம்.

ஆனாலும் தோட்ட மக்களுக்கு இது பெரும் அநீதியாகவே படும். தாங்கள் பிழைப்பு நடத்தும் தோட்டத்தில் தேயிலைச் செடிகளைப் பிடுங்கியெறிந்துவிட்டு அதில் அத்துமீறிக்குடியேறும் போது தமது வாழ்வாதாரம் மட்டுமல்ல தமது வாழ்விடமும் பறிபோய்விடும் என்ற அச்சம் இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக்கொள்ள முடியாத நிலை.

மனதுக்குள் வெறுப்பிருந்தாலும் வெளியில் தோட்டத்து மக்களும் சரத்தின் குடும்பத்தினர்களும் அந்நியோன்யமாகவே பழகிக்கொள்வார்கள். சரத்துக்குச் செல்வராணி மீது கொள்ளை அன்பு. அவளிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவான்.

எந்தநாளும் மாலையானதும் மெதுவாக லயத்துப் பக்கம் போவான். செல்வராணியின் அப்பாவிடம் ஏதாவது கதைக்கும் சாக்கில் செல்வராணியை எட்டிப் பார்ப்பான். செல்வராணிக்கு அவனை அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அவன் எந்த நேரமும் மண்வெட்டியும் கையுமாக மண்ணைக் கொத்திக் கொண்டிருப்பது தான் காரணம்.

சேதன விவசாயப் பயிற்சி பெற்று வந்த பிறகு சரத் அங்கு படித்தவற்றை அப்படியே செயல்படுத்தினான். அவனது தோட்டத்தில் காய்கறிகளும், மூலிகை வகைகளும் செழித்து வளர்ந்திருந்தன.

அது ஒரு சித்திரைப் புத்தாண்டுக் காலம். தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு இன்னும் ஓரிரு தினங்களே இருந்தன. புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக வீட்டை அலங்காரம் செய்து கொண்டிருந்த சரத் மேலே லயத்தில் ஏதோ சத்தம் கேட்கவே ஓடிச் சென்று பார்த்தான்.

சித்திரைப் புத்தாண்டுக்காகப் பலகாரம் சுட்டுக் கொண்டிருந்த செல்வராணியின் முகத்திலும் கைகளிலும் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் தெளித்துவிட, செல்வராணி எரிவு தாங்காமல் அலறித் துடித்துக் கொண்டு இருந்தாள்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதென்றால் தோட்டத்து ஆஸ்பத்திரியின் டாக்டர் லீவு. டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வாகனமில்லை. தோட்டத்திலிருந்த இரண்டு மூன்று திறிவீலர்களையும் சித்திரைக் கொண்ட்டாங்களுக்கு சாமான்கள் கொண்டுவர ஒருசிலர் வாடகைக்கு எடுத்துப் போயிருந்தார்கள்.

ஓடிப்போன சரத் அருகிலுள்ள கிராமத்திலிருந்த அவனது தாத்தாவான வெதமஹத்யா எனப்படும் நாட்டு வைத்தியரை அழைத்து வந்தான்.

நாட்டு வைத்தியரோ எரிகாயத்துக்குப் போடுவதற்கான சில பச்சிலை மூலிகைகளின் பெயரைச் சொல்லி அவை இருக்கின்றனவா என்று கேட்டார். யாருக்குமே அந்த மூலிகைகளின் பெயர் கூடத் தெரியவில்லை.

ஆனால், பெயரைக் கேட்டதுமே அவசர அவசரமாக ஓடிப்போய் தனது தோட்டத்திலிருந்த மூலிகை இலைகளைப் பறித்து வந்து கொடுத்தான் சரத். அந்த இலைகளைக் கசக்கிச் சாறு பிழிந்து எரி காயங்களில் பூசினார் வைத்தியர். எரிவு குறைந்தது செல்வராணி சற்று அமைதியானாள். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்க, காயங்கள் ஆறிவிட்டன. தொடர்ந்து ஒரு மாத காலம் அதே பச்சிலைச்சாற்றினைப் பூசிவர முகத்திலிருந்த தழும்புகள் எல்லாம் மாறி முன்போலவே செல்வராணி அழகியாக மாறிவிட்டாள்.

முகத்தில் ஏற்பட்ட தழும்புகளின் காரணமாக செல்வராணியின் முகம் விகாரமாகி அவளது எதிர்காலமே பாழாகி விடுமோ எனப் பயந்த பெற்றோரின் மனதும் மகிழ்வடைந்தது.

தினந்தோறும் பச்சிலைகளைப் பறித்து வந்த சாறுபிழிந்து கொடுத்து அன்போடு கவனித்த சரத்தின் மீது செல்வராணிக்கு உண்மையாகவே காதல் ஏற்பட்டது. செல்வராணியின் பெற்றோரும் கூட சரத்தின் மீது மிகுந்த அன்பு காட்டத் தொடங்கினர்.

சரத்தான் செல்வராணியைக் காதலிப்பதாக தனது பெற்றோரிடம் கூற தனது ஒரே மகனின் விருப்பத்தைத் தட்டமுடியாத சரத்தின் தாய், தகப்பனும் விருப்பம் தெரிவித்தனர்.

செல்வராணியின் அம்மாவும் அப்பாவும் கூட செல்வராணியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டனர். இரு வீட்டாரும் இணைந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

செல்வராணியும் சரத்தின் வீட்டுக்கு மருமகளாக வந்து சரத்தோடு இணைந்து தோட்டம் செய்ய ஆரம்பித்தாள்.

கடந்த சித்திரைப் புத்தாண்டின் போது ஏற்பட்ட அந்த நிகழ்ச்சி இருவரிடையே மட்டுமல்ல இரு இனத்தவர்களிடையேயும் ஒற்றுமையையும், அன்பையும் ஏற்படுத்திவிட்டது.

இந்த வருட தமிழ் சிங்களப் புதுவருடம் உண்மையான தமிழ் சிங்களப் புத்தாண்டாகச் செல்வராணிக்கும், சரத்துக்கும் அமைந்து, அவர்களின் உறவினர்களான இரண்டு இனத்தவர்களையும் குதூகலமாகக் கொண்டாட வைத்தது.

“ஏன் மச்சான் ஒங்க மகன் சரத் ஏம் மகளை மருந்து போட்டு மயக்கிப் புட்டான் பத்தியா?” இன்று கேலியாகச் சிரித்தார் செல்வராணியின் அப்பா சரத்தின் அப்பாவிடம்.

“ஆமா! ஓய்! அதனாலே தானே நீயும் நானும் சம்பந்தியாகினோம்” என்றவாறே விருந்துள்ள அமர்ந்தனர் அப்புஹாமியும், அய்யாசாமியும்.

Comments