திசைமாறிய பறவைகள் | தினகரன் வாரமஞ்சரி

திசைமாறிய பறவைகள்

மதியம் நண்பகல் சுமார் பன்னிரெண்டு மணியிருக்கும் சனசந்தடி, வாகனப் போக்குவரத்து அங்கொன்றும் இங்கொன்றமாய் ஊசாடிக் கொண்டிருந்தன. போதாக்குறைக்கு ஆதவனும் தன் பொன்மயக் கதிர்களை என்று மில்லாதவாறு கொதிப் பேற்றி நிலைமைகளை வாட்டிவதைத்துக் கொண்டிருந்தான். உச்சிவெயில் உச்சந்தலையை பதம் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த வேளை, கல்யாண வீதி, ஒஸ்மன்ரோடு கடந்து, மெயின் வீதியையும் தாண்டி வனப்பம் பொலிவும் கொஞ்சிமகிழும் வெலிவேரியன் கிராமத்திற்குள் தடம் பதித்துக் கொண்டிருக்கின்றன.

பாத்தும்மாக் கிழவியின் ஆடிப்போன பாதச்சுவடுகள். சும்மாவிடுமா பழக்கதோஷம், மாண்டுபோனதன் பழைய காலநினைவுகளை மீண்டும் இன மீட்டிக்கொண்டாளோ என்னவோ கதிரவனின் சூட்டையும் மிஞ்சி உள்ளத்தில் கடும்பேறிய உணர்வலைகள் வெற்றிலை, புகையிலை குதப்பிய வாயின் ஊடாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தன அர்த்த புஸ்டியான வார்த்தைகளாக சிக்... என்ன உலகமடா இது, எல்லாமே சீரழிஞ்சி போய்க்கெடக்கு எங்க பாத்தாலும் ஒரே சண்டசச்சரவு மனித உயிர்களுக்கு கால்சல்லிக்கும் கூட மதிப்பே இல்லாமல் போச்சுது.

அப்ப இருந்த மனிசனையும், இப்ப வாழ்றவனையும் ஒப்பிட்டுப் பாக்கேக்க வகுத்தப் பொரட்டி வாந்தி வரப்பாக்குது. இப்ப அடிக்கிற வெயிலுக்கு, போறபோக்கப் பாத்தா என்னவோ நெருப்பால மழபெய்யும் போலான்கெடக்குது. தீஞ்சிபோன காலத்தில இக்கொடுமைகளை எல்லாம் பாக்கொனும் இண்டுதானோ என்னையும் படைச்சவன் உயிரோட போட்டு வெச்சிரிக்கான். அப்ப ஆறுமாசத்துக்கு மழ, ஆறுமாசத்துக்கு வெயில். இப்ப என்னடெண்டா நினைச்ச நேரம் மழ, நினைச்சநேரம் வெயில். காலத்தின் கொடுமைக்கி இத உட வேற என்னதான் ஈக்கி. முணுமுணுத்துக் கொண்டே அடிமேல் அடிவைத்து, பாலத்தையும் கடந்து, ஆற்றங்கரையை அண்மியபோது, நிமிர்ந்து பார்த்தாள் கிழவி.

அங்கே, வயலுக்குப் பயள எறிஞ்ச, குழிச்சி ஈரச்சாரனை வெயிலில் உலர்த்திக் கொண்டிருந்த இசுமான் காக்காகதான் அவள் கண்ணுக்குத் தென்பட்டான். முகத்தில் வடிந்து கொண்டிருந்த வியர்வைத் துளிகளை தன் முந்தானைச் சேவையால் துடைத்துக் கொண்டிருந்த கிழவியை முந்திக் கொண்டு இசுமான் கதையை ஆரம்பித்தான்.

என்னங்க...? ஏதோ உலகம் அது இது எண்டு தன்பாட்டிய கதைச்சது கொஞ்சம் என்ர காதுள்ளயும் விழுந்திச்சி. அதா என்றவள் பொக்கை வாய்க்குள்ள சுழியோடிய சிரிப்பை வெளியாக்கியவாறே, அது என்ர மனசிலபட்டதெத்தான் சென்னன். நீதான் செல்லன் பாப்பம் இசுமான். நாம வாழ்ந்த அந்தக் காலத்தில் இப்புடியெல்லாம் நடந்திரிச்சா? என்ன சோக்கா ஈந்திச்சி. இப்ப ஏன் எல்லாம் தலைகீழாப்போச்சுது? கிழவியின் ஆரோக்கியமான கேள்விக்கு இசுமான் பக்கவாத்தியம் இசத்துக் கொண்டிருந்தான். அதனுள் பகடியும் கொஞ்சம் இழையோட ஆமாங்க பாத்தும்மா நீங்கள சொல்றத்திலேயும் நூத்துக்கு நூறுவீதம் நியாயம் ஈக்கத்தான் செய்யிது.

அப்ப ஒரு கோட்டக் கீறி அந்தக் கோட்டுக்கங்கால போகாதேடா மகனே! எண்டா மரியாதையா அடக்க ஒடுக்கமா அடங்கி ஒடுங்கியிருந்த காலம் அது. இப்ப பொறக்கக்குள்ளேயே புள்ளையள் அம்மா எண்டு சொல்றதுக்குப் பதிலா ஐ லவ் யூ எண்டு கத்திக்கிட்டுத்தான் பொறக்குதுகள். இதுமட்டுமா நஞ்சடிச்ச உணவுப்பொருட்கள உண்கிறத்தால புதுப்புது நோய்களும் எவண்டிகளும் கூட இதுமட்டுமா? மொளைக்கக்குள்ளேயே மொபைபல்போன்வேனும் கண்ட நிண்டதுகளோ எல்லாம் கண்கெட்ட வேல பாக்க. கடன்பட்டாவது வாங்கிக் கொடுக்கல் வேண்டா அவ்வளவுதான் ஊட்டுக்குள்ள ஒரே பூகம்பமும், மல்லுக்காட்டலும் தொடர்கததான் பெற்றோர்கள்ள கழுத்தையே அறுத்துப் போட்றுவானுகள் கழுதைகள் இசுமான் கதையைத் தொடர்வதற்குள் இடைநிறுத்திய பாத்தும் மாக் கிழவி ஏதோ ஒன்றை அவனின் காதுக்குள் மெல்லக்கிசு கிசுத்துக் கொண்டாள் அமைதியாக கேட்டியா இசுமான். போன கிழம நம்ம அக்கம் பக்கத்துல நடந்த சம்பவத்த நினைச்சா என்ர ஈரல் இப்பவும் கொடுகுது.

விசுவாலாத்தாட இளையமகள் மூலைக்க அமைதியா அடக்கமா இருந்த அந்த வெள்ளைப் புள்ள, ஆரோடயோ போனில தொடர்பாகி ராவோட ராவா ஆருக்கும் தெரியாம சினிமாப் பாணியில ஓடிற்றாளாமே! இது ஆரால தெரியுமா இந்தக் கேடு கெட்ட மொபைல்போன் என்கிர கல்யாண புறோக்கர் மாமாவால தானே. இதுபோல எத்தனையோ சம்பவங்கள் ஒண்டுரெண்டா எம்புட்டுத்தான் நடந்து போச்சி. இத தட்டிக்கேக்க சமூகத்துல ஆருதான் ஈக்கி எல்லாமே பசுத்தோல் போத்திய புலியா கறுத்த ஆடா மேயக்க வெள்ள ஆட்ட எங்கதான் கண்டுபுடிக்கிற? பாத்தும்மாக் கிழவியின் அங்கலாய்ப்பை ஆமோதித்த இசுமான் காக்கா இன்னுமொரு அணுகுண்டை அவள் தலையில் தூக்கிப்போட்டார் கொஞ்ச நாளைக்கிமுன்ன. பேப்பரில ஒரு செய்தியப் பாத்த நான் உலகத்திலேயே கெட்டுப்போகத்துடிக்கும் இளவட்டங்களை தட்டிக் கொடுக்கிறத்தக் கெண்டு ஒரு தினத்த ஒதுக்கி இரிக்காகளாம் இந்தக்கேடு கெட்ட சமூகம் அது என்ன தினம் இண்டு தெரியுமா உனக்கு? அப்புடி என்னடாப்பா விசேட தினம் அது நீதான் செல்லன் பாப்பம் என்னெண்டு ஒண்ட அருமையான வாயால அங்கலாய்த்தாள் கிழவி, அதுக்கு முதல்ல நீ கொஞ்சம் ஜாக்கிரதையா நிண்டுக்க மயங்கி கீழ உழுந்திராம எச்சரிக்கையாக “ரெட்லைற்றைப்” போட்டவாறே தொடர்ந்தார் இசுமான் காக்கா. அதுக்குப் பெயர்தாண்டியம்மா “வலன் ரீன்டே” என்று இங்கிலிஸ்ல செல்றகறும காண்டம் பிடிச்ச காதலர்தினம். சும்மா கெடந்த சங்க ஊதிக்கெடுத்த மாதரி குமரிகளும், குமரர்களும், கூடிக்குலவி ஆடிப்பாடினத்தால எத்தனையோ புள்ளயள் அறாமில பொறந்திருக்காம் என்ர அசிங்கமான செய்தி தாண்டி அது. செய்தியக் கேட்ட பாத்தும்மாக் கிழவிக்கு தலை சுத்தல் உள்ளூர ஏற்பட்டாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

சிக்... நாகரிகம் எண்டேபோர்வையில இப்படியும் ஒரு தினமா? இந்தக் காலத்தில? அப்ப ஒரு கொமர வெளியில பாக்குறதெண்டா காணிக்க வெச்சாலும் கண்டுக்க ஏலா அவ்வளவு கஷ்டம். இப்ப என்னடாண்டா அவுட்டுட்ட ஆடு, மாடுகள் போல அலமோதுதுகள் ஆரும் தன்னப்பாக்க மாட்டானுகளா என்ர அலுகோசு கோலத்தில. அனைத்தையும் அமைதியோடு ஆமாப் போட்டுக்கேட்டுக் கொண்டிருந்த உதுமான் காக்கா மேலும் சில தகவல்களை மெல்லக் கசியவிட்டார் கிழவியின் காதுகளுக்குள் கஷ்டப்பட்டு அஞ்சாறு மாடிவீடுகட்டி, காணி, பூமி கொடுத்து மருமக்களும் எடுத்து, அதனால ஓட்டாண்டியாய்ப் போன இசுமா லெவ்வைப் போடிக்கி இரிக்க இல்லிடம் இல்லாம பெத்ததுகளே சண்ட புடிச்சி எழிப்புட்டதால அந்த மனிசன் ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் தஞ்சமடைஞ்சி கிடக்காராண்டி கதையக் கேட்ட மாத்திரத்தில ஆடிப்போன கிழவியின் கண்களில் இருந்து நீர் ததும்புவதைப் பார்த்த உதுமான் காக்காவின் கண்களிலும் நீர் அலைமோதிய அந்த நேரம் சுமார் இரண்டு மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது. இருவருக்குள்ளும் மாறிமாறி இடம்பெற்ற சமூக அலசலை கொஞ்சம் தள்ளி நின்று அவதானித்துக் கொண்டிருந்த சமூக ஆர்வலரும், ஆலிமும் ஆகிய இஸ்மா லெப்பை ஹஸரத் அவர்கள் இருவரையும் நெருங்கி இனிய சலாம் கூறிய பின் தனக்கே உரிய பாணியில் தனது கருத்தை உதிர்க்கத் தொடங்கினார்.

நீங்கள் இருவரும் சொல்லுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. இருந்தும் சமூகம் என்பது யார்? மொத்தமாக எல்லாவற்றையும் சமூகத்துர தலையில தூக்கிப்போட்டா இந்தப் பின்னடைவுகளுக்கெல்லாம் நாளை மறுமையில பதில் சொல்றது யார்? இதுக்கெல்லாம் முழுப்பொறுப்புமே நானும், நீங்களும் தான் இத உட்டுப் போட்டுவாய்க்கு வந்த மாதிரி சமூகம் சமூகம் என்று கத்துறதால ஒன்றுமே ஆகப்போறதில்ல. முதல்ல நாம் வாழுற சூழலமாத்தனும், சூழல் மாசடைஞ்சா அதனால டெங்குநுளம்பு பெருகி மரணங்கள் சம்பவிப்பதுபோல அனாச்சாரங்கள் கனத்து இதைவிடப் பெரிய ஆபத்தில எல்லாரும் சிக்கவேண்டிவரும். அதனாலதான் ஆலிம்களாகிய நாமும் படிச்சிப் படிச்சி கத்திக் கொண்டுதான் இருக்குறம். இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக, விழலுக்கிறைத்த நீராகப் போகிறதே தவிர மனித மண்டைகளுக்குள் ஏறுவதாக இல்லை.

இதற்குப் பரிகாரம் முதல்ல சூழலை சுத்தமாக மாத்தனும் இதற்குச் சிறந்த இடம் மத்ரஸாக்கள் தான். அங்கதான் இளமைப் பருவத்தில் இருந்தே வாழ்க்கையின் அத்திவாரம் ஆன்மிக ரீதியில் வித்திடப்படுகின்றன.

இதனை அலட்சியமாக விட்டுவிட்டு மேலைத்தேசத்தினரின் கலாசார ஆதிக்க சூழலுக்குள் சிக்குண்டு, சிதறுண்டு அவற்றில் இருந்து மீள முடியாமல் திசை மாறிய பறவைகளாக திக்குத் தெரியாத திசைகளில் சமூகம் அலைமோதிக் கொண்டிருக்கிறது என்ற ஹஸரத் அவர்களின் ஆழமான உபதேசத்தை சூடாமல் அசையாமல் கேட்டுக் கொண்டிருந்த ஆதம் காக்காவும் பாத்தும்மாக் கிழவியும் நின்ற நிலையைப் பார்த்த போது ஆலிம்சாப் கூறிய அனைத்தும் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துவதுபோல வெலிவேரியன் கிராமத்தில் அன்று வீசிய இளம்தென்றல் இச்செய்தியை தூதாக எடுத்துக் கொண்டது திசை மாறிய பறவைகளின் இரு காதுகளுக்குள்ளும் ஊதுவதற்காக.

Comments