அரசியல் உரிமை பெற்றிருக்கும் தோட்ட மகளிருக்கு தலைமைத்துவ பயிற்சி மிகவும் அவசியம்! | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் உரிமை பெற்றிருக்கும் தோட்ட மகளிருக்கு தலைமைத்துவ பயிற்சி மிகவும் அவசியம்!

பெருந்தோட்டப் பெண்களின் பொருளாதார நிலைமை, நில, உயர்கல்வி, வாழ்வாதார தொழிற்பயிற்சி உரிமைகள் சம்பந்தமான ஆய்வறிக்கையொன்றை மனித அபிவிருத்தி நிலையம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் மலையகப் பெண்களுக்கான சிவில், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி உரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்கள் என்பது நிறுவப்பட்டுள்ளது. இந்த மீளாய்வு பெருந்தோட்டப் பெண்களின் நிலைமையையும் அவர்கள் தொடர்பான கொள்கைகளையும், சவால்களையும் அவற்றை எதிர்கொள்ளக்கூடியதாக அவர்கள் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய தேவையையும் அறிவுறுத்தி நிற்கிறது.

சர்வதேச ரீதியில் பெண்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள நீண்டகாலம் போராட வேண்டியிருந்தது. வரலாற்று ரீதியாக அவர்கள் சமவாய்ப்புகளுக்காக களத்தில் குதிக்க வேண்டி நேர்ந்தது. 1400 ஆம் ஆண்டு முதல் 1789 வரையிலான காலகட்டங்களில் அடக்குமுறையை எதிர்த்து போராட்டங்கள் நடந்தேறின. இதில் மொழிவாரியான உணர்வு காணப்பட்டதாகவே ஆய்வாளர்கள் பதிவிட்டுள்ளார்கள். 1789 களில் பாரீஸ் நகரில் பெண்கள் ஒன்றுகூடி போர்க்கொடி ஏந்தினார்கள். ஆண்களுக்கு நிகராக தமக்கும் உரிமைகள் தரப்பட வேண்டும் என்ற தொனியில் 8 மணிநேர வேலை என்ற முழக்கத்தோடு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கை சர்வதேச ரீதியில் விரைவாகவே பரவலானது. ஐரோப்பிய நாடுகளில் அச்சுறுத்தலாகவும் மாறியது. அப்போது ஆட்சியிலிருந்த பிரெஞ்சு மன்னன் 2ஆம் லூயிஸ் 1878ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமையையும் அரச ஆலோசனை சபைக் குழுக்களில் பிரதிநிதித்துவமும் வழங்கி புதிய உதயமொன்றைத் தோற்றுவித்தார்.

பெண்ணுரிமை கொள்கை உலக மகளிரிடையே உத்வேகத்தை ஏற்படுத்தி விடுதலை வேட்கையை விதைத்தது. 1909ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி 120 பெண் தொழிலாளர்கள் தாம் பணிபுரிந்த ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இரக்கமற்ற நிறுவனம் அந்த 120 பேரையும் ஆலையோடு சேர்த்து தீக்கிரையாக்கியது. இது சர்வதேச ரீதியில் மகளிருக்கான ஒரு தினத்தை பிரகடனப்படுத்தும் அளவுக்குப் பிரபல்யமானது. ஆனால் இதன் தாக்கமானது தெற்காசிய நாடுகளில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பெண்களுக்கான சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு தூண்டப்படுவதற்குப் பதிலாக மழுங்கடிக்கப்பட்டே வந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா பெண்களுக்கான 33 சதவீத அரசியல் பிரதிநிதித்துவத்தை அமுலுக்கு கொண்டுவந்து ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கலானது. இது இலங்கையிலும் ஒரு சலனத்தை ஏற்படுத்தவே செய்தது. 2015 இல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் பெண்களுக்கு அரசியலில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதன் பின் நடந்த முதலாவது உள்ளூராட்சித்தேர்தலில் கிடைத்த அறுவடை 25 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமைப்படுத்தவில்லை. ஆயினும் இது நல்ல ஆரம்பம் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த பெண்களின் 25 சதவீத அரசியல் பிரவேசம் மலையகத்திலும் இடம்பெறவே செய்தது. அதிலும் பூரண பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. ஆனால் சகலதுறைகளிலும் பின்தங்கியுள்ள மலையக மாதர்களுக்கு இது புதிய விடிவு என்பதில் ஐயமில்லை. பெருந்தோட்டப் பெண்களில் பெருவாரியானோர் தேயிலைத் தொழிலை மட்டுமே மேற்கொள்ளக்கூடிய நிலையில் காணப்படுகின்றார்கள். தேயிலை, இறப்பர் உற்பத்தி முறையில் உழைப்பதும் தோட்டப் பாடசாலையில் அவர்கள் பெற்ற கல்வியும், தோட்ட முகாமைத்துவ அமைப்பும் அவர்களைத் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை மட்டுமே வாழ்வாதாராமாக வரித்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளியிருக்கின்றது என்ற விடயத்தை மீளாய்வு அறிக்கை சுட்டுகின்றது. 1993இல் இலங்கை பெண்களின் பட்டயத்தை ஏற்றுக்கொண்டது.

ஆனால் இது மலையகப் பெண்களை உள்வாங்கி கொண்டதாக பேணப்படவில்லை. இதற்கான அவசியத்தை ஆய்வாளர்கள் வலியுறுத்தியே வந்துள்ளார்கள். ஏனெனில் இன்று பெருந்தோட்டத்துறையில் பெண்களின் வகிபாகம் 70 சதவீதமாக மாறிக்கொண்டு வருகின்றது. வீட்டை நிர்வகிப்பதிலும் கூட இவர்களே பாரிய பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தேயிலைப் பறித்தல், இறப்பர் பால் வெட்டுதல் போன்ற பெருந்தோட்ட தொழில் புரிவதோடு கணிசமானோர் ஆடைத் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றார்கள். இன்னும் சிலர் வெளிநாடுகளிலும், கொழும்பு போன்ற நகரங்களிலும் வீட்டுப் பணிப்பெண்களாக வேலைசெய்கின்றார்கள். குடும்ப நிர்வாகம், வறுமை மீட்சிக்கான பொறுப்பினை இவர்களே பெற்றுள்ளபோதும் இதற்கான கெளரவமோ அங்கீகாரமோ இவர்களுக்கு கிடைப்பாதாயில்லை.

தவிர பெண்களை உப வருமானம் தேடுபவர்களாகவும் பிறரில் தங்கி நிற்கவேண்டிய நபர்களாகவுமே சமூகம் எடைபோடுகின்றது என்பதை ஆய்வு மீளவும் உறுதிப்படுத்துகின்றது.

தோட்டத் தொழிலைக் கைவிட்டு ஆண் சமூகம் வெளியேறும் நிலையிலும் ஆணாதிக்க சிந்தனையிலேயே பெருந்தோட்டப் பெண்கள் நடத்தப்படுகின்றனர் என்பது நிதர்சனமான நிஜம்.

குடும்பச் சூழலுக்குள்ளும் வேலைத்தளத்திலும் சமுதாய மட்டத்திலும் உரிமைகளை இழந்து நிற்கின்றது மலையக பெண்கள் சமூகம். அடக்குமுறை, பாலியல் ரீதியிலான சுரண்டல், சமத்துவமின்மை, கெளரவிக்கப்படாமை போன்ற காரணங்களால் இன்னும் கட்டுெபடித்தனமான வாழ்வியலை அநுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்தப் பெண்கள்.

அரசியலில் இப்போது கிடைத்துள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது புதிய சிந்தனைகளின் வெளிப்பாடாக மாறுமிடத்து மாற்றம் நிகழலாம். ஆயினும் அங்கும் கூட இவர்களை கெளரவமாக நடத்தும் பண்பு இன்னும் தோற்றம் பெறவேயில்லை.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்க பெண்களை பிடிப்பதற்கு மலையக கட்சிகள் பெரும் பாடுபட்டன.

ஏற்கனவே பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகளை முறையாக வழங்காதது இக்கட்சிகளின் தவறு. ஒப்புக்காகவும் கண்துடைப்புக்காகவும் இவ்வாறான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் துவுமே ஆகப்போவதில்லை. தலைமைத்துவ பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கை வளரும் பட்சத்தில் அது ஆணாதிக்க சிந்தனைக்கு வைக்கப்படும் ஆப்பாக மாறிவிடுமோ என்று அஞ்சுகிறார்களோ என்னவோ!

ஏனெனில் பாரம்பரிய ஆணாதிக்க கட்டுப்பாடு, பால்வேறுபாடு இவைகளோடு சமூக விழுமியங்கள், சுகாதாரம், போஷாக்கின்மை, வறுமை, வசதிவாய்ப்பற்ற தொழில் நிலை, குறைந்தபட்ச மனிதவுரிமை வழங்கப்படாமைப் போன்ற பின்னடைவுகளை ஆண் சமூகம் அறியாமலில்லை. ஆயினும் குடும்பச் சூழலிலிருந்தே ஏற்படுத்தப்படும் நெருக்கு தல்களால் ருசி கண்டவர்களாக இருப்பதால் பெண்ணடிமைத்தனத்தைத் தடுக்க வழி காணும் முயற்சியில் ஆண் வர்க்கம் இறங்குமென்பது எதிர்பார்க்க முடியாது. முழு சக்தியுடையவர்களாகப் பெண்கள் அனைத்து அம்சங்களிலும் உள்வாங்கப்பட்டு சமபங்காளர்களாக மாறும்போது மட்டுமே அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படும்.

அதேநேரம் பெண்களுக்கான நிலவுரிமை வாய்ப்பை மட்டுப்படுத்துவதாகவே பெருந்தோட்டக் கட்டமைப்பு முறை அமைன்றது. இன்று அரசியலில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மலையகப் பெண்கள் பலர் அரசியல் பிரவேசம் செய்துள்ளார்கள். இவர்களில் பலர் தோட்டக்கமிட்டித் தலைவி, மாதர்சங்க தலைவிகளாக இருந்தவர்கள். இனியும் இவர்கள் கொழுந்துக் கூடையைத் தூக்கிக் கொண்டு மலைமலையாக அலைய வேண்டுமா என்ற கேள்வி எழவே செய்கிறது. அவர்களுக்கான விசேட வரப்பிரசாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்பார்வையாளர்கள் போன்ற பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்ற பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் கோரிக்கை நியாயமானதுதான். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற சலுகை அடிப்படையிலான சட்ட விதி மலையகப் பெண் உறுப்பினர்களுக்கு பொருந்தவே செய்யும்.

இப்பெண் உறுப்பினர்களை தேயிலை மலை மேற்பார்வையாளர்களாக (சூபர்வைசர்) நியமிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்கின்றது.

இதேநேரம் மலையகப் பெண்கள் சமூக, கலாசார தாக்கத்துக்குள்ளாக்கப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டியது முக்கியம். அதற்கான பின்புலம் உருவாக்கப்படுவதற்கு பெருந்தோட்டப் பெண்களின் அரசியல் பிரவேசம் வழிவகுக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்குத் தலைமைத்துவம், தீர்மானம் எடுக்கும் துணிச்சல் வழங்கக்கூடிய தலைமைத்துவ பயிற்சி வழங்கி அதிகாரத்தை பிரயோகிப்பது சம்பந்தமான ஆளுமையை மேம்படுத்துவது முக்கியமானது.

Comments