பத்தனை பூங்கந்தை தோட்டம் | தினகரன் வாரமஞ்சரி

பத்தனை பூங்கந்தை தோட்டம்

டி. சுரேன்- தலவாக்கலை

நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பத்தனை - மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் பூங்கந்தை பிரிவில் வசித்த 39 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தோட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டதையடுத்து கடந்த 2013 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறி மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் மேல் மற்றும் நடுப்பிரிவுகளில் வசித்து வருகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 5 வருடங்களாக இக்குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலும் மாதாந்த வாடகைப்பணம் செலுத்தி வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் ஜனாதிபதி வரை கடிதம் மூலமாக பல தடவைகள் அறிவித்தும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் அவல நிலையில் வாழ்ந்துவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். பூங்கந்தை பிரிவு மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக மவுண்ட்வேர்ணன் தோட்ட நிர்வாகத்தால் மவுண்ட்வேர்ணன் தோட்ட நடுப்பிரிவு S - 2 மலையில் பரிந்துரைக்கப்பட்ட 6 ஹெக்டெயர் காணியை தேசிய கட்டிட பொருள் ஆய்வு நிலைய அதிகாரிகளும் ஆய்வுக்குட்படுத்தி அவ்விடத்தில் வீடுகள் கட்டுவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. அதற்கமைய பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்த காணியில் வீடுகளை கட்டுவதற்கு தேவையான ஆரம்ப கட்ட வேலைகளை செய்துள்ளனர்.

மேலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 30,000 ரூபா கடனைக் கொண்டு தமக்கு வழங்கிய காணியில் தளங்களை வெட்டியுள்ளனர். தேசிய வீடமைப்பு அதிகார சபையானது ஒரு இலட்ச ரூபாவை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது. முதற் கட்டமாகவே இத்தொகை கடனாக வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பூங்கந்தை மக்கள் தெரிவித்தனர். இதில் ஒவ்வொரு குடும்பமும் 10 ஆயிரம் ரூபா வீதம் தரைத்தளத்தை அமைப்பதற்காக வழங்கியுள்ளது. மண் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு தளங்களை வெட்டுவதற்காக இதுவரை ரூ 6 லட்சம் ரூபாவை செலவழித்துள்ளதாகவும் மேலும் 2 லட்சம் ரூபா கடனாக செலுத்த வேண்டி இருப்பதாகவும் கூறினர்.

தற்போது இவர்களுக்கான வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த S 2 மலையின் ஒரு பகுதியில் மலைநாட்டு புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி அமைச்சினால் 55 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் இதில் பூங்கந்தையில் மண்சரிவு அபாயத்தால் வெளியேற்றப்பட்ட 39 குடும்பங்களில் 34 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவில்லை எனவும் 5 குடும்பங்களுக்கு மாத்திரமே வீடுகள் கட்டப்படுவதாகவும் கூறினர்.

எஞ்சிய 50 குடும்பங்களும் குறித்த அமைச்சரின் ஆதரவாளர்களாவார். அத்தோடு இங்கு குறித்த அமைச்சினால் கட்டப்படும் 55 வீடுகளும் அனர்த்தங்களினால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதோருக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பூங்கந்தை மக்கள் குற்றஞ்சாட்டினர். தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட காணியில் வீடுகளை நிர்மாணிக்க முடியுமா என்பதை பரிசோதிப்பதற்காக தேசிய கட்டிட பொருள் ஆய்வு நிலையத்தின் அதிகாரிகளை வரவழைத்து அதன் அறிக்கைகளை முழுமையாக பெற்றுக் கொள்வதில் பூங்கந்தை மக்களே அதிகமாக ஆர்வம் காட்டியது மட்டுமல்லாது பல கஷ்டங்களுக்கும் முகங் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் எவ்வித கஷ்டங்களையும் அனுபவிக்காத மக்களுக்கும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படாதோருக்கே புதிய வீடுகள் மவுண்ட்வேர்ணன் நடுப்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். கடந்த 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக குறித்த வீடமைப்புத்திட்டம் கைமாறி விட்டதாகவும் குற்றஞ் சுமத்தும் அவர்கள் அமைச்சர்களின் தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணம் செலுத்தினால் மட்டுமா வீடுகள் கிடைக்குமென்றும் கேள்வி எழுப்புகின்றனர். இதன்போது இக்குடும்பங்கள் 3000 ரூபா முதல் 5000 ரூபா வரையிலான தொகையை மாதாந்த வாடகையாகச் செலுத்தி வசித்து வருவதோடு பல அசெளகரியங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறி கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்துவரும்அந்த மக்களுக்கு நிரந்தரமாக வாழ்வதற்கான குடியிருப்பு வசதிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஆகியன உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Comments