மேர்ச்சன்ட் வங்கியின் MBSL "விதுபியச” சமூக பொறுப்புணர்வு திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

மேர்ச்சன்ட் வங்கியின் MBSL "விதுபியச” சமூக பொறுப்புணர்வு திட்டம்

இலங்கை வங்கியின் துணை நிறுவனமான மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா (MBSL) தனது புதிய சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையான “MBSL விதுபியச” திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

தேசத்தின் பிள்ளைகளுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அவர்களின் அறிவை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு மோர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா இந்த புதிய சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதன் பிரகாரம், முதலாவது “MBSL விதுபியச கணனி நிலையம் மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சுஜீவ லொகுஹேவா மற்றும் இராணுவத்தின் விமான படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேர்ணல் நிசங்க ஈரியகம ஆகியோர் பங்குபற்றலுடன் எம்பிலிபிட்டிய துங்கம ஸ்ரீ குணாநந்தராம விஹாரையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சுஜீவ லொகுஹேவா, MBSL விதுபியச கணனி நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றுகையில், நாடு புதிய அபிவிருத்திப் பாதையில் பயணிக்கிறது.

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள சிறுவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என்றார்.

இந்த சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைக்காக எம்முடன் கைகோர்த்துள்ள இராணுவத்தின் விமானப் படைப்பிரிவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் வெவ்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியிருந்தனர். குழந்தைகளுக்கு வழிகாட்டும் விஹாரையில் இந்த நவீன தொழில்நுட்பத்தை பயில்வதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் பெற்ற பேறாக கருத வேண்டும்.

மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா இலாப நோக்கமின்றி, நாம் உயிர் வாழும் சமூகத்தில் பொது அபிவிருத்திக்காக வெவ்வேறு சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறோம். எதிர்வரும் காலங்களில் இது போன்ற பல கணனி மையங்களை நிறுவ நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Comments