21வது பொதுநலவாய விளையாட்டு இன்று நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

21வது பொதுநலவாய விளையாட்டு இன்று நிறைவு

எம். எஸ். எம். ஹில்மி

அவுஸ்திரேலியா கோல்கோஸ்ட்டில் கடந்த 4ம் இதிகதி ஆரம்பமான 71 நாடுகள் கலந்துகொண்ட 21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்று நடைபெறும் இறுதிநாள் நிறைவு விழாவுக்கு அவுஸ்திரேலிய விளையாட்டு அமைச்சர் உட்பட அந்நாட்டுப் பிரதமரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வழமைபோல் இம்முறையும் போட்டியை நடத்தும் நாடான அவுஸ்திரேலியாவே பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆரம்ப நாளான கடந்த 4ம் திகதி பதக்கப்படடியில் இங்கிலாந்து அணி முனனிலை பெற்றிருந்தாலும் சொந்த நாடு என்பதால் எல்லாப் போட்டி நிகழ்ச்சிகளிலும் தன் சொந்த நாட்டு ரசிகர்களின் கரகோஷத்தின் மத்தியில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இவ் விளையாட்டு விழாவில் அவுஸ்திரேலிய அணி நீச்சல் போட்டிகளிலேயே தங்களது ஆதிக்கத்தை அதிகம் செலுத்தியது. நீச்சல் போட்டிகளில் ஏனைய நாட்டு வீர வீராங்களைகளுக்கு அவுஸ்திரேலிய வீரர்கள் கடும் சவாலாக இருந்தனர். பதக்க குவியலில் இங்கிலாந்து அணி இரண்டாமித்திலுள்ளது. கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை ஆசியப் பிராந்திய நாடான இந்திய அணியும் பதக்கக் குவியலில் மற்றைய நாடுகளுடன் கோதாவில் இறங்கியுள்ளது. இந்தியாவிலிருந்தும் இம்முறை எல்லாப் போட்டி நிகழ்ச்சிகளிலும் கூடுதலான வீர வீராங்கனைகளை கலந்து கொண்டுள்ளனர். 7வது நாளன்று பிரபல கனடா, நியூசிலாந்து, தென்னாபிரிக்க ஆகிய நாடுகளைப் பின்தள்ளிவிட்டு பதக்கப்பட்டியில் 3ம் இடத்துக்கு முன்னேறியது இந்தியா.இன்று இறுதிநாளில் சில தடகளப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளும், பெட்மின்டன், கூடைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், ரக்பி, மேசை பந்து, ஸ்கொஷ் போட்டிகளின் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளதால் இறுதிநாளான இன்று கூட பதக்கப்பட்டயலின் நிலைகளில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

21வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை அணியில் எதிர்பார்க்கப்பட்ட திறமை வெளிப்படவில்லை. வழமைபோல் ஓரிரு பதக்கங்களுடன் திருப்தி கொள்ள வேண்டிய நிலையே இம்முறையும் ஏற்பட்டது. அதிகமாக பதக்கம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பளூ தூக்கும் போட்டியில் இலங்கை அணி சார்பாக முதல் நாளான கடந்த 4ம் திகதி ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவில் சதுரங்க லக்மால் வெண்கலப் பதக்கம் பெற்றார். இவர் இப்பிரிவில் 255 கிலோ எடையைத் தூக்கி பிஜி வீரரை தோற்கடித்ததன் மூலம் 21வது பொது நலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக முதல் பதக்கத்தைப் பெற்றார். அன்றைய தினம் மகளிர் பிரிவிலும் பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் இலங்கை வீராங்கனை திலூஷா 155 கிலோ எடையைத் தூக்கி மூன்றாம் இடத்தைப பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார். இது பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பளுதூக்கும் போட்டியில் மகளிர் பிரிவில் இலங்கை பெறும் முதல் பதக்கமாகும். பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திக்க திசாநாயக்க 69 கிலோ எடைப் பிரிவில் 267 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இலங்கைக்கான மேலுமொரு வெண்கலப் பதக்கத்தை குத்துச் சண்டை வீராங்கனை அனுஷா கொடிதுவக்கு பெற்றார், மகளிருக்கான 45-−48 கிலோ எடைப்பிரிவில் சொலமன் தீவு வீராங்கனை பிரண்டி கபான்லஸும் இலங்கை வீராங்கனை அனுஷா கொடித்துவக்குவும் காலிறுதியில் மோதினர் ஆக்ரோஷமாக மோதிய இலங்கை வீராங்கனை எதிராளிக்கு சந்தர்ப்பம் வழங்காமல் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றார். இது பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை அணி பெறும் முதல்பதக்கமாகும். இவர் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோமை எதிர்த்தாடினார். சுமார் 68 வருடங்களின் பின் ஆண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை பதக்கமொன்றைப் பெற்றுள்ளது. திவங்க ரணசிங்க 46-−69 எடைப்பிரிவில் காலிறுதிப் போட்டியில் வனுஅடா ராஜ்ய வீரர் நம்ரி பெரியை 5.0 என்ற ரீதியில் வெற்றி பெற்று பதக்கம் பெற்றுள்ளார். குத்துச் சண்டை போட்டிகளில் 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெறும் பதக்கம் இதுவாகும். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக குத்துச்சண்டை கள நடுவராக பெண் ஒருவர் களமிறங்கினார். கானா தென்னாபிரிக்க வீரர்களுக்கு எதிரான போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நெல்கா ஷிரோமாவே இச்சாதனையைப் புரிந்தார்.

மேலுமொரு பதக்க எதிர்பார்ப்பான ஆண்களுக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் களமிறங்கிய மெத்தியூ அபேசிங்க அரையிறுதி வரை முன்னேறி அரையிறுதியில் 49.43 வினாடிகளில் போட்டித் தூரத்தைக் கடந்தார். என்றாலும் அவரால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற முடியவில்லை. அரையிறுதில் ஐந்தாமிடத்துக்கே அவரால் வர முடிந்தது. அபேசிங்கவின் இக்காலமானது தேசிய சாதனையாகவும் அமைந்தது. அவர் பங்கு கொண்ட 100 மீற்றர் பிரீஸ்டைல் நீச்சல் அஞ்சலோட்டப் போட்டியில் அபேசிங்க சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தாலும் ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 3.22.84 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து 9 அணிகள் கலந்து கொண்ட அப்போட்டியில் 8 இடத்தையே பெற முடிந்தது.

 

Comments