20ஆவது திருத்தச்சட்டம் நாட்டைச் சீர்குலைக்கும் | தினகரன் வாரமஞ்சரி

20ஆவது திருத்தச்சட்டம் நாட்டைச் சீர்குலைக்கும்

நமது நிருபர்

 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தால், நாட்டில் சிக்கலுக்கு மேல் சிக்கல் உருவாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான 20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் ஒப்பந்தத்தைத் தற்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஏற்றுக் ெகாண்டுள்ளது. அதற்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்திருக்கிறது.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவவேற்றப்பட்டதும் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்பது அவர்களின் நிபந்தனையாக உள்ளது. எனினும், அவ்வாறு ஓர் உத்தியோகபூர்வ தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள விமல் வீரவன்ச, அப்படியொரு முடிவை எடுப்பதற்கு முயற்சிக்கப்படுமானால், தேசிய சுதந்திர முன்னணி அதனைக் கடுமையாக எதிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும்போது நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதென்பது எவ்விதத்திலும் சரியான முடிவாகாது. அது நாட்டை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். வடகிழக்கு மாகாண முதல்வராக இருந்த வரதராஜப் பெருமாள், தன்னிச்சையாக செயற்பட முனைந்தபோது, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியே மாகாண அரசைக் கலைத்து ஆளுநரின் கீழ் கொண்டு வர முடிந்தது.

எனவே, நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்கக் கூடாது என்று விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Comments