இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் இரண்டாவது இன்னிங்ஸ்

1991ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக ‘குற்றப்பிரேரணை’ சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை தோற்கடிப்பதற்காக அவர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மை இல்லாமல்போய் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோது அவர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். 2009ஆம் ஆண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான குழப்பங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிமார் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்துள்ளனர்.

 

 

மகேஸ்வரன் பிரசாத்   
 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடப்படும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தைப் போன்றதொரு ஆட்டத்தை தற்போது ஆட்சியிலுள்ள இணக்கப்பாட்டு அரசாங்கம் ஆடுவதற்கு தயாராகி வருகிறது. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இணக்கப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்கியிருந்தன. பல்வேறு இழுபறிகள், தடங்கல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தாண்டி மூன்றரை வருடங்களை கடந்திருக்கும் இணக்கப்பாட்டு அரசாங்கம், தமக்கு எஞ்சியிருக்கும் ஒன்றரை வருடங்கள் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளது. தமக்கு கிடைத்த முதலாவது இன்னிங்ஸில் பெருமளவு ஓட்டங்களைக் குவித்திராத அரசாங்கம், இரண்டாவது இன்னிங்ஸிலாவது சிறப்பாக துடுப்பெடுத்தாடத் திட்டமிட்டிருப்பதாக அண்மைய செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் அரச தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டார். அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் (சுதந்திரக் கட்சி தவிர்ந்த) வழங்கிய ஆதரவு வெற்றிக்கு வழிவகுத்தது. இந்தக் கூட்டணி அந்த வருடம் ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னரும் தொடர்ந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து இணக்கப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்கி ஒருவாறு முன்நகர்த்தி வந்தன. ஆரம்பம் முதலே இரு தரப்பினரும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்தியபடியே அரசாங்கத்தில் இணைந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல், அரசின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளை பகிரங்கமாக்கியது. குறிப்பாக; தேர்தல் முடிவுகள் மஹிந்த தரப்பின் எழுச்சியை பறைசாற்றியதால் அரசியலில் தளம்பல் ஏற்படத் தொடங்கியது.

தேர்தலை ஒட்டியதாக ஏற்பட்ட இந்தத் தளம்பல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைவரை இட்டுச்சென்றது. உள்ளூராட்சி தேர்தலில் தமக்கு கிடைத்த சிறிய வெற்றியை பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி போட்டிருந்த கணக்கும் பிழைத்துவிட்டது. எனினும், இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான சுதந்திரக் கட்சிக்குள் பிளவு உறுதியானது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 16 பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்தமை குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கூடி அரசியல் நிலவரத்தை ஆராய்ந்ததுடன், இணக்கப்பாட்டு அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு இணங்கினர். தமது ஆட்சியில் ஏற்பட்ட பிழைகளைத் திருத்தி புத்தூக்கத்துடன் ஒரே தலைமையில், ஒரே நோக்கத்தில் திட்டங்களை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

தற்பொழுது உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கு முகங்கொடுக்க அதாவது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்துக்கு தயார்படுத்தும் முகமாக அரசாங்கம் முதற்கட்டமாக 8ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுத் தொடரை ஒத்திவைத்துள்ளது. அதாவது நிறைவேற்று ஜனாதிபதி என்ற முறையில் அரசியலமைப்பின் ஊடாக தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார் (prorogued). அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றம் முடியும்போது 19ஆம் திகதிக்கு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. 19ஆம் திகதி ஒரேயொரு நாள் மாத்திரமே சபை கூடுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை மே மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். சாதாரணமாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதைப் போன்ற நிகழ்வு அல்ல இது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வொன்றை ஒத்திவைப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் யாவும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பது போன்றதாகும். அதாவது தற்பொழுதுள்ள 8ஆவது பாராளுமன்றத்தின் இதுவரையான செயற்பாடுகள் யாவும் முடிவுக்குக் கொண்டுவரப்படும். குறிப்பாக ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வாய்மூல விடைக்கான கேள்விகள், தனிநபர் பிரேரணைகள், பாராளுமன்ற குழுக்கள் யாவும் இரத்தாகிவிடும். மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் புதிதாக கேள்விகள் முன்வைக்கப்படவேண்டியிருப்பதுடன், குழுக்களுக்கும் புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதே சட்ட ஏற்பாடாகும்.

துறைசார் மேற்பார்வைக் குழு, தெரிவுக்குழு மற்றும் உயர் பதவி குழு தவிர்ந்த சகல குழுக்களும் ஜனாதிபதியின் ஒத்திவைப்புடன் கலைக்கப்படும். சகல குழுக்களுக்குமான தலைவர்கள் உறுப்பினர்கள் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்பதை பாராளுமன்ற பிரதி செயலாளர்நாயகம் நீல் இத்தவெல உறுதிப்படுத்தியுள்ளார். கோப் மற்றும் அரச கணக்குக் குழு என்பவற்றுக்கும் புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இருந்தபோதும், அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஆராய்வதற்காக முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படாது.

எதிர்த்தரப்பு உறுப்பினர்களால் எழுப்பப்படுகின்ற வாய்மூல விடைக்கான கேள்விகள், தனிநபர் பிரேரணைகள் என்பன புதிதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேநேரம், ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒழுங்குப் புத்தகத்துக்கு கொண்டுவரப்பட்ட சட்டமூலங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. அவற்றை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு முடியும்.

இலங்கை பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் இவ்வாறு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகள் முன்னரும் நிகழ்ந்துள்ளன. 1991ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக ‘குற்றப்பிரேரணை’ சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை தோற்கடிப்பதற்காக அவர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மை இல்லாமல்போய் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோது அவர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். 2009ஆம் ஆண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான குழப்பங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிமார் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்துள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒத்திவைப்பையும் பார்க்க முடிகிறது. இணக்கப்பாட்டு அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள மனஸ்தாபங்களை களைந்து எஞ்சியிருக்கும் 18 மாதங்களை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்லும் வகையிலேயே அவருடைய இந்த நடவடிக்கையை பார்க்க முடியும். குறிப்பாக பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட அரசியல் சூழலில் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. எனினும், எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்காது தற்பொழுது இருக்கும் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை வினைத்திறனுடன் முன்னெடுக்க இரு தலைவர்களும் இணங்கியே அதற்கான செற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவையில் முழுமையான மறுசீரமைப்பு, பொதுவான திட்டம் தயாரிப்பு என மும்முரமான அரசியல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. லண்டனில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. எஞ்சிய 18 மாதங்களிலும் அரசாங்கத்தை வினைத்திறனுடன் கொண்டு செல்வதற்கு பொதுவான திட்டத்தை தயாரிப்பதற்கு இரு கட்சிகளும் அமைச்சர்கள் குழுக்களை நியமித்துள்ளன. இந்தக் குழுக்கள் பொதுவான திட்டமொன்றை தயாரித்து ஜனாதிபதி, பிரதமரிடம் இணக்கப்பாட்டுக்கு சமர்ப்பிக்கும்.

இந்த சகல நடவடிக்கைகளும் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் 8 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வு இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தின் ஆரம்பமாகவிருக்கும். அன்றைய அமர்வு விசேட அமர்வாக இடம்பெறவிருப்பதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிம்மாசன உரையாற்றவுள்ளார். இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் திட்டங்கள், எதிர்கால செயற்பாடுகள் என்பன ஜனாதிபதியால் அன்றையதினம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும்.

இது மாத்திரமன்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவைகள் புதிதாக தயாரிக்கப்படவுள்ளன. இவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த 15ஆம் திகதிக்கு முதல் அமுலுக்கு வருகின்றன. அரசாங்கத்தின் திட்டங்கள் மாத்திரமன்றி பாராளுமன்றத்தின் செயற்பாடும் புதிதாக அமையவுள்ளது. எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் பல்வேறு புதிய எதிர்பார்ப்புக்களுடன் ஆரம்பமாகவுள்ளது மாத்திரமன்றி, ஏற்கனவே பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கத்துக்கு சவாலாகவும் அமையவுள்ளது.

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரையான காலப் பகுதியில் முன்னெடுக்காத நடவடிக்கைகளை எஞ்சிய 18 மாதங்களில் அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி பலரிடத்தில் காணப்படுகிறது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நாடு எதிர்கொள்ளவிருக்கும் சூழ்நிலையில் இரு கட்சிகளும் மீண்டும் இணைந்து செயற்படுவது அவர்கள் சார்ந்த கட்சிகளின் எதிர்காலத்துக்கு எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும் என்பதும் நோக்கப்பட வேண்டியுள்ளது. தற்பொழுதிருக்கும் அரசியல் சூழ்நிலையில் இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கை ஓங்கியிருப்பதாகவே தெரிகிறது. காரணம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை களைவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது. குறிப்பாக அந்தக் கட்சியின் முக்கிய பதவிகளில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை அந்தக் கட்சி சரியாகப் பயன்படுத்துமாகவிருந்தால் அடுத்த தேர்தலுக்கு தன்னை தயார்ப்படுத்த ஐ.தே.க ஆரம்பித்துவிடும்.

மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தால் பிளவடைந்துள்ளது என்றே கூறமுடியும். 16 பேர் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர். சுதந்திரக் கட்சியில் எஞ்சியவர்கள் இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் இருக்கும் சூழ்நிலையில் 2020 ஆம் ஆண்டு தேர்தலை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் என்றதொரு கேள்வியும் காணப்படுகிறது. எஞ்சியிருக்கும் 18 மாதங்களை அவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த முயல்வார்களாயின் இணக்கப்பாட்டு அரசாங்கம் மீண்டும் தனது இலக்கை அடையுமா என்ற கேள்விக்கும் விடை காணப்பட வேண்டியிருக்கும்.

தனிப்பட்ட கட்சிகள் என்ற கோணத்தில் இருந்து பார்க்கும்போது வெவ்வேறு நோக்கங்கள் இருந்தாலும், இணக்கப்பாட்டு அரசாங்கம் என நோக்கும்போது பொதுவான குறிக்கோளொன்று அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை இரு பிரதான கட்சிகளும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நல்லாட்சியை நிலைநாட்டுவோம் எனக் கூறிவந்த கட்சிகளும் தமக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தத் தவறினால் எதிர்கால அரசியலில் இணைந்த இரு கட்சி ஆட்சிக்கான வாய்ப்புக்கள் இல்லாமலேயே போய்விடும்.

Comments