பதவியை விட்டுக் கொடுப்பதே சம்பந்தனுக்கு கௌரவம் | தினகரன் வாரமஞ்சரி

பதவியை விட்டுக் கொடுப்பதே சம்பந்தனுக்கு கௌரவம்

தினேஷ் குணவர்தன  காட்டமான கருத்து

லக்ஷ்மி பரசுராமன்

 

ஆளுந்தரப்பில் இருந்தவாறு
பதவியை கோருவதற்கு தடையில்லை
 

எதிர்கட்சி தலைவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தால் அது அவருக்ேக சாதகமாக முடியுமென்றும் கூட்டு எதிரணியில் கூடுதலான உறுப்பினர்கள் இருப்பதால் அப்பதவியைத் தமது தரப்புக்கு விட்டுக் கொடுப்பதே திரு. சம்பந்தனுக்கு கெளரவமானதென்றும் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் அமைச்சு பதவி வகிப்பது எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கோருவதற்கு எந்தவிதத்திலும் தடையாக அமையாதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் தனது பலத்தைக் கொண்டு கூட்டு எதிரணியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"ஆர். சம்பந்தன் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை புத்தி சாதுரியமாக தக்க வைத்துக் கொள்வதற்காக கூட்டு எதிரணியிடமிருந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை எதிர்பார்க்கிறார். நாம் இதில் சிக்க மாட்டோம். அவர் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினராக நடந்து கொள்ள முன்வர வேண்டும். நாம் கேட்காமலேயே அவராக முன்வந்து தனது பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்" என்றும் தினேஷ் குணவர்தன எம்.பி கூறினார்.

பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்களும் கூட்டு எதிரணிக்கு 54 உறுப்பினர்களும் உள்ள நிலையில் யாருக்கு பலம் அதிகமென்பதை சிறு பிள்ளையால்கூட புரிந்து கொள்ள முடிந்துள்ளபோதும் சபாநாயகருக்கும் ஆர்.சம்பந்தனுக்கும் இன்னும் கணக்கு புரியாமலிருப்பது வேடிக்கையான விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டு எதிரணியில் 54 பேர் உள்ளபோதும் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர்களென்றும் அவர்களில் இன்னும் சிலர் அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிப்பதனால் அவர்களை எதிர்க்கட்சியாக ஏற்றுக்ெகாள்ள முடியாதென்றும் ஆர்.சம்பந்தன் கூறியிருப்பது பற்றி தினேஷ் குணவர்தன எம்.பியிடம் விளக்கம் கோரியபோதே, அவர் ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் அமைச்சுப் பதவி வகிப்பது எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு தடையாக அமையாதெனக் கூறினார்.

"ஆர்.சம்பந்தனுக்கும் எனக்கும் எந்தவொரு தனிப்பட்ட கோபமும் இல்லை. என்றாலும் பாராளுமன்றத்தில் அதிக பலத்தைக் கொண்டுள்ள கூட்டு எதிரணிக்கு எதிர்க்கட்சி பதவி கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். நாம் இந்த விடயத்தை அப்படியே விட்டுவிடப் போவதில்லை. அவர் தானாக தனது பதவியை இராஜினாமா செய்யும் வரை நாம் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் செய்வோம்" என்றும் அவர் கூறினார்.

"பாராளுமன்றத்தின் வரலாறு தெரியாதவர்கள் எம்மை ஏமாற்ற முடியாது. பிரிட்டிஷ் மற்றும் இந்திய பாராளுமன்றத்தில்கூட இடம்பெறாத வேடிக்ைக இந்த எதிர்க்கட்சி விடயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கமும் சபாநாயகரும் இலங்கை பாராளுமன்றத்தை வேடிக்ைகக்குள்ளாக்கியுள்ளனர். அரசாங்கம் தனது பலத்தை பயன்படுத்தி கூட்டு எதிரணியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது. தனக்ெகதிராக நம்பிக்ைகயில்லா பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டால் அரசாங்கத்தின் வாக்குகளைப் பயன்படுத்தி தொடர்ந்தும் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ளலாமென சம்பந்தன் நினைக்கிறார் போலும். அவருக்கு பதவியில் ஆசையிருக்கலாம். ஆனாலும் அவர் ஓர் எதிர் கட்சித் தலைவராக நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றவில்லை.

அதனால் பாராளுமன்ற முறை மற்றும் ஜனநாயகம் அடிப்படையில் அவர் தனது பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்" என்றும் தினேஷ் எம்.பி சாடினார்.

Comments