ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“களைச்சிப் போய் வாறனீ போலக் கிடக்கு, எங்காலும் தூரப் பயணம் போனனீயோ...”

“அவசர அவசரமா ஸ்கூலுக்கு ஓடிப் போட்டு வாறனான்”

“ஏன் அவசரமா ஓடினனீ?”

“அடுத்த வீட்டு குஞ்சக்காவின்டா சின்ன மவன் ஸ்கூல்ல மயக்கம் போட்டு விழுந்தவன்”.

“உது ஏனப்பா?”

“அண்ணே.. உவன் காலையில எதும் சாப்பிடேல்ல வெறும் டீயோட ஸ்கூலுக்கு போனவனாம். காலை கூட்டத்தில வெயிலில நின்டவன். மயங்கிப் போட்டவன். யாரோ வந்து குஞ்சக்காவுக்கு சொல்லியிருக்கினம். குஞ்சக்காவ தெரியும் தான. சின்ன விஷயத்துக்கும் குய்யாமுய்யா என்டு அரட்டுறவாலென்ன பெரிசா சத்தம் போட்டு நாலு வீட்ட கூட்டிப்போட்டவள் அவவை ஸ்கூலுக்கு கூட்டிப்போனனான்”.

“பின்ன”

“பெடியன் காலையில சாப்பிடாமா வெறும் வயித்தில போனவன் இல்லே உதான் மயக்கிப் போட்டுது. ஒரு பனிசும் டீயும் குடிச்சாப் பிறகு சரியாப்போட்டுது”.

“ஒரு நாளைக்கு காலையில சாப்பிடாமப் போனா என்ன நடக்குது பாரன். பல இடங்களில பிள்ளைகள் காலையில சாப்பிடாமதானப்பா ஸ்கூல் வருகினம். 14 இலட்சம் பிள்ளையள் இப்பிடி காலையில சாப்பிடாம ஸ்கூல் வருகினமாம்”.

“14 லட்சமோ குஞ்சக்காவின்ட மகன் மட்டும் என்டு தான் நான் நினைச்சனான்”.

“உந்த 14 லட்சம் என்ட கணக்கு அவர் இவர் சொன்ன கணக்கு இல்ல சின்ன ராசு. இலங்கை மருத்துவ ஆராச்சி நிறுவனம் சொன்ன கணக்கு தெரியுமோ?”

“மருத்துவ சங்கம் சொல்லிச்சு தெண்டா உது சரியாத்தான் இருக்கும் என்ன?”

“பின்ன மருத்துவ சங்கம் என்டா பொறுப்பான ஆட்கள் என்ன. சரியாத்தானே சொல்லுவினம். உதுல பாரன் காலையில பிள்ளையள் பாடசாலைக்கு போற நேரத்தில வீட்டில சாப்பாடு எதுவும் செஞ்சிருக்க மாட்டினம். இல்ல தேவையான மாவோ பயிரோ இருக்காது. உதால வெறும் டீயோட பிள்ளையள் பாடசாலை செல்ல வேண்டிக் கிடக்கு. சில வீடுகளில என்டா காலைச் சாப்பாடே இல்ல. எல்லாம் ஒரு நேர சாப்பாடுதான் சில நேரம் தான் ரெண்டு நேரம்”.

“ஓமண்ணே. காலையிலேயே பான், பனிஸ் என்டு வேண்டித் தர ஏலுமே”.

“நிறைய இடங்களில அரிசி வடிச்சுத்தான் காலையிலயும் தின்பினம்”.

“ நாடளாவிய ரீதியில 10,162 பாடசாலைகள் கிடக்குது சின்ன ராசு.. உதில 43 லட்சம் மாணவர்கள் படிக்கினம். உதில 14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு கிடைக்குதில்ல என்டு சொல்லப்படுகுது”.

“எங்கட காலத்தில பனிஸ் கொடுத்தவையண்ண”..

“பனிஸ் அதுக்கு பின்னால பிஸ்கட் பால் என்டு கொடுத்தவை. அந்த காலத்தில கல்வி அமைச்சரா இருந்த தஹநாயக்க பனிஸ் கொடுத்தவர். அவர் கொஞ்ச காலம் பிரதமராவும் இருந்தவர். அவர் பனிஸ் கொடுத்ததால அவரை பனிஸ் மாமா என்டு தான் அழைப்பினம் பின்னால யுசெனிப் வழங்கிய கேர் பிஸ்கட் கொடுத்தவை. பால் கொடுத்தவை. உதுக்குப் பின்ன இலைக்கஞ்சி கொடுத்தவை என்ன?”

“ஓமண்ண. திங்கட்கிழமை கௌப்பி, செவ்வாய்க்கிழமை குரக்கன், புதன்கிழமை கஞ்சி என்டு மாத்தி மாத்தி கொடுத்தவை. இப்பதான் ஒன்டும் கொடுக்கிறதில்ல போல கிடக்கு”

“ஒரு சில கஷ்டப் பிரதேசங்களில காலையிலையும் இலைக்கஞ்சி கொடுக்கினமாம். ஆனால் எஙுகெங்க கொடுக்கினம் என்டு சரியா தெரியல்ல. ஆனா காலை உணவை தவிர்க்கிறதால மாணவர்களின்ட ஞாபகசக்தி, அறிவுத்திறன் எல்லாம் குறைஞ்சி கிடக்குதென்டு மருத்துவ சங்கம் சொல்லிப்போட்டுது”.

“காலையில சாப்பிடாம இருந்தம் என்டா எங்களுக்கும் மயக்கம் போலத்தான் கிடக்குது. பிள்ளையளுக்கு தாங்கேலுமே.”

“இங்க பார் சின்ன ராசு இரவு முழுவதும் சாப்பிடாம கிடக்கேக்க அடுத்த நாள் உடம்பு சுறுசுறுப்பா வேலை செய்ய தேவையான சக்தியை கொடுக்கிறது காலைச் சாப்பாடுதான். குலைச் சாப்பாட்டோட நிறைய தண்ணி குடிக்க வேண்டும். உதை தான் எம்.ஜி.ஆர். தமிழ் நாட்டுக்கு சொன்னவர்”.

“எம்.ஜி.ஆரோ?”

“ஓம் சின்ன ராசு உந்த சத்துணவு திட்டத்த ஆரம்பிச்சவர் கர்ம வீரர் காமராஜர் ஐயா தான். அவர் முதலமைச்சரா வந்தவுடன் ஒவ்வொரு கிராமத்திலயும் பள்ளிக்கூடம் இருக்க வேணும் என்டு சட்டம் போட்டவர். பாடசாலைக்கு வாற பிள்ளையளுக்கு மதிய உணவு கொடுக்க வேணும என்டு காமராஜ் ஐயா சட்டம் போட்டவர். உதுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் ஐயா முதலமைச்சரா வந்த பிறகு உந்த திட்டத்தை சிறப்பா செய்ய வேணுமென்டு நினைச்சவர். உதுக்கு சத்துணவு திட்டம் என்டு பேர் வச்சு. உதுக்கென்டு ஆக்கள நியமிச்சதோட பள்ளிக்கூடம் இல்லாத நாட்களிலயும் பிள்ளையளுக்கு சத்துணவு கொடுக்க வேணும் என்டு சட்டம் போட்டவர். உந்த சத்துணவு ஆரம்பிக்கப்பட்டதை பத்தி நல்ல கதை கிடக்குது”.

“கதையோ சொல்லுங்கோவன்”;

“உது காமராஜர் ஐயா காலத்தின்ட கதை. 1954ல் நடந்தது. காமராஜர் ஐயா மோட்டார் காரில ஏர்க்காடு பக்கம் போனவராம். அந்த காலத்தில் கார் என்டா லேசுல காணக் கிடைச்சதில்ல. என்ட படியா காரைப் பார்க்க சனம் கூடிட்டுது. அதில ஆடு மேய்க்கிற பெடியன்களும்; இருந்தவை. நீங்க பாடசாலைக்கு போகேல்லயோ என்டு அந்த பெடியன்களிட்ட காமராஜர் ஐயா கேட்டவராம். எங்களுக்கு மதிய உணவு கொடுத்தா பாடசாலைக்கு போவன் என்டு பெடியன்கள்; சொன்னவை. மதிய உணவு கொடுத்தா பாடசாலைக்கு போவியா என்டு காமராஜர் ஐயா கேட்க பெடியனமார்; ஓம் பட்டவை. அன்டைக்கு சேலத்துக்கு வந்த காமராஜர் ஐயா மதிய உணவு திட்டத்தை பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில ஆரம்பிச்சவர். உந்த நேரத்தில மெட்ராஸ் என்டுதான் தமிழ்நாட்டை சொன்னவை. உதில இருந்து அப்பதான் ஆந்திரா பிரிஞ்சிது. காமராஜர் ஐயா என்ன செஞ்சவர் தெரியுமோ? தமிழ்நாட்டில மூடியிருந்த பாடசாலையளை திறந்தவர். ஆயிரக்கணக்கில புதுசா பாடசாலையளை கட்டினவர். இலவச கட்டாய கல்வியை தமிழ்நாட்டில உருவாக்கினவர் காமராஜர் தானப்பா”

“மெய்யாலுமே?”

“ஓம் சின்னராசு அதன் பின்னால் தான் எம்.ஜி.ஆர் ஐயாவின்ட சத்துணவு திட்டம் வந்துது.”

Comments