20 வருட லயத்துக் கல்விக்கு முற்றுப்புள்ளி | தினகரன் வாரமஞ்சரி

20 வருட லயத்துக் கல்விக்கு முற்றுப்புள்ளி

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெல்மதுளை பார்த்தக் கடை தமிழ் வித்தியாலயம் அமைந்திருந்த ஒரே கட்டடம் கடந்த 1997 ஆம் ஆண்டு இடம் பெற்ற இயற்கை அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்தது. இதனால் அப்பாடசாலை முற்றாக செயலிழந்ததுடன் பாடசாலை நடாத்துவதற்கு உரிய கட்டட வசதியின்மை காரணமாக கொழுந்து மடுவத்திலும் தற்காலிக மண் குடிசைகளிலும் இயங்கி வந்தது.

இப்பாடசாலை முறையாக இயங்கும் பொருட்டு புதிய கட்டடம் அமைக்க 1998 ஆம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அருகிலுள்ள ரில்ஹேன பார்த்தக்கடை தோட்டத்தில் 2 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. அக்காணியை அப்போதைய ஆளும் கட்சி ஆதரவாளர்கள் அபகரித்துக் கொண்டனர். அதன் பின்னர் மேலும் 2 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. இக்காணியும் அப்போதைய ஆளும் கட்சியை சேர்ந்த பெரும்பான்மையின ஆதரவாளர்கள் கைப்பற்றினர். இவ்வாறு பலமுறை காணி ஓதுக்குவதும் பின்னர் அக்காணியை வெளியார் ஒன்று சேர்ந்து கைப்பற்றுவதுமாக காணப்பட்டது.

இதனிடையே இப்பாடசாலைக்கென ஒதுக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட காணியில் அப்போதைய மாகாணசபை உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்கள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் அடிக்கல்லை நாட்டியதுடன் ஊடகங்கள் முன்னிலையில் தாம் தோட்ட மக்களின் பாதுகாவலர்கள், அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றனர்.

காலங்கள் கடந்தன கட்டடங்கள் மட்டும் கட்டப்படவில்லை. இதனால் இப்பாடசாலை (தோட்ட) மாணவர்கள் சொல்லொணாத துயரங்களை அனுபவித்தனர். இதேவேளை இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்த கொழுந்து மடுவத்தை தோட்ட நிருவாகம் மீளப்பெற்றுக்கொண்டது.இதன் பின்னர் இப்பகுதியிலுள்ள விகாரை ஒன்றுக்கு சொந்தமான மண்குடிசையொன்றுக்கு இடமாற்றப்பட்டது. சொற்ப காலம் அந்த மண்குடிசையிலியங்கிய இப்பாடசாலைக்கு மீண்டும் சோகம் வந்தது.. அதாவது அந்த குடிசை இனந்தெரியாதவர்களால் உடைத்தெறியப்பட்டதுடன் அதிலுள்ள ஆவணங்களும் களவாடப்பட்டன. அதன்பின்னர் அப்பாடசாலை மீண்டும் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு கொண்டுவரப்பட்டது. மாணவர்களின் வரவும் குறைந்தது.

இதன் பின்னர் இரத்தினபுரி வலயக்கல்வி காரியாலயம், பெல்மதுளை கோட்டக் காரியாலயம்,சப்ரகமுவ மாகாண கல்வித்திணைக்களம் என்பன தலையிட்டு இப்பாடசாலை இப்பாடசாலையிருந்து 10 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ரில்ஹேன தமிழ் வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்டது. பல வருடங்கள் இப்பாடசாலையில் இயங்கிய போதிலும் தொலைவை காரணம் காட்டி பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைக்கு சமுகந்தரவில்லை.

இந்த முயற்சியும் தோல்விகண்டது. அதன் பின்னர் ரில்ஹேன தமிழ்வித்தியாலய அதிபரின் கடுமையான கோரிக்கைக்கு மத்தியில் இப்பாடசாலைக்கு பார்த்தக்கடை தோட்ட லயன் தொகுயின் ஒருபகுதியில் தற்காலிக குடியிருப்பு (குடிசை) பாடசாலையாக உருப்பெற்றது. இதன்பின்னர் இப்பாடசாலை எவ்வித ஆரவாரமின்றி இயங்கியது எனினும் மாணவர்களுக்கு முறையாக கல்வி போதிக்க முடியவில்லை. இதன் பின்னர் பெல்மதுளை கோட்டக்கல்வி காரியாலயம் பல்வேறு பிரயத்தனத்திற்கு பின்னர் கட்டடம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இரத்தினபுரி தினகரன் நிருபர்  

Comments