பொதுநலவாய விளையாட்டு: இலங்கை 6 பதக்கங்கள் பெற்று வரலாற்றுச் சாதனை | தினகரன் வாரமஞ்சரி

பொதுநலவாய விளையாட்டு: இலங்கை 6 பதக்கங்கள் பெற்று வரலாற்றுச் சாதனை

எம். எஸ். எம். ஹில்மி     

 

21வது பொதுநலவாய விளையாட்டு விழா அவுஸ்திரேலிய கோல்ட்கோஸ்ட் நகரில் கடந்த வாரம் முடிவுற்றது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் மத்தியில் இடம்பெற்ற நிறைவுவிழா அணிவகுப்பில் கண்கவர் வாணவேடிக்கைகளும் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த இறுதி நிகழ்வுகளுக்கு பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார். நடனக் கலைஞர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளுடனும், பொதுநலவாய விளையாட்டுக் கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் மார்ட்டினின் உரையுடனும் நிறைவுபெற்ற இறுதிநாள் நிகழ்வின் போது அடுத்த 2022 ஆம் ஆண்டு 22வது பொதுநலவாய விளையாட்டு விழா நடைபெறும் இங்கிலாந்து பெர்மிங்ஹாம் பிராந்திய மேயரரிடம் விழா கட்டமைப்புக்கொடி கையளிக்கப்பட்டது.

71 நாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட சுமார் 7000 விளையாட்டு வீர வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் 275 பிரிவுகளில் 275 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 845 பதக்கங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட இப்போட்டித் தொடரில் முந்தைய உலக சாதனைகள் பல முறியடிக்கப்பட்டதோடு, பல புதிய சாதனைகளளை நிலைநாட்டியதுடன் வெற்றி தோல்விகளை சமமாக சுமந்துகொண்ட பசுமையான நினைவுகளுடன் வீரர்கள் கோல்கோஸ்டிலிருந்து பிரிந்துசென்றனர்.

சுமார் 10 நாட்களாக நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் இம்முறை போட்டியை நடத்திய அவுஸ்திரேலியாவே ஆதிக்கம் செலுத்தியது. அந்நாடு 80 தங்கம் உட்பட மொத்தமாக 198 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தையும், இங்கிலாந்து 45 தங்கம் உட்பட மொத்தம் 138 பக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், ஆசியப் பிராந்திய நாடான இந்தியா 25 தங்கங்களுடன் மொத்தம் 66 பதங்கக்ங்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

இலங்கை கடந்த 80 வருடகால பொதுநலவாய விளையாட்டு வரலாற்றிலேயே அதி கூடிய பதக்கங்களைக் இம்முறையே பெற்றுக்கொண்டது. 1 வெள்ளிப்பதக்கம் 5 வெண்கலப்பதங்களுடன் மொத்தமாக 6 பதக்கங்களை இம்முறை இலங்கை பெற்றுக்கொண்’டது.

கடந்த முறை 2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை பளு தூக்கல் போட்டியில் மட்டும் ஒரே ஒரு வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் பொதுநலவாய விளையாட்டு விழாவில் சிறந்த பெறுபேறாக 1950ம் ஆண்டு ஒரு தங்கம், இரண்டு வெள்ளி ஒரு வெண்கலம் வென்றதே உச்ச திறமையாக இன்றும் இருந்து வருகின்றது.

இம்முறை இலங்கையிலிருந்து 80 வீர வீராங்கனைகள் 15 விளையாட்டுப் பிரிவுகளில் கலந்து கொண்டாலும் பளு தூக்கல் மற்றும் குத்துச்சண்டை ஆகிய இரு பிரிவுகளிலேயே பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளன. பளுதூக்கலில் இந்திக திசாநாயக ஒரு வெள்ளிப் பதக்கமும், சதுரங்க லக்மால், கோமஸ் தலா ஒவ்வொரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை சார்பாக குத்துச்சண்டை மகளிர் பிரிவில் அனுஷா கொடிதுவக்கு முதன் முதலாகப் பதக்கமொன்று (வெண்கலம்) வென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. குத்துச் சண்டை வீரர்களான நிவங்க ரணசிங்க, இஷான் பண்டாரவும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர்.

21வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய 71 நாடுகளில் 43 நாடுகள் ஏதாவது ஒரு பதக்கம் பெற்றிருந்தது. இவ்வரிசையில் 31 இடத்தில் இருக்கும் இலங்கை அணி தெற்காசிய நாடுகளில் மொத்தப் பதக்கப்பட்டியலில் இந்தியா பெற்ற 66 பதக்கங்களுக்கு அடுத்த கூடிய (6) பதக்கங்களைப் பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் 1 தங்கம், 4 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று 24வது இடத்திலும், பங்களாதேஷ் 2 வெள்ளிப்பதக்களைப் பெற்று 30வது இடத்திலுமுள்ளன. 136 கிலோ பிரிவு பளுதூக்கல் போட்டியில் இந்திக திசாநாயக்க 297 கிலோ வரை தூக்கினார். இன்னும் இரண்டு கிலோ பளுவை அவர் தூக்கியிருந்தால் இலங்கை அப்போட்டியில் தங்கம் வெறன்றிருப்பதோடு பதக்கப்பட்டியலிலும் 24வது இடத்தைப் பிடித்திருக்கும்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் பெட்மின்டன் போட்டியில் இம்முறையே காலிறுதிவரை இலங்கை வீரர்கள் முன்னேறினர். ஆண்களுக்கான இட்டையர் ஆட்டத்தில் சச்சின் டயஸ்-புவனேக குணதிலக்க ஜோடி காலிறுதி வரை முன்னேறி மலேஷிய ஜோடியிடம் தோல்வியடைந்தனர்.

ஏழு பேர்கொண்ட ரக்பி போட்டியில் ஆரம்பச் சுற்றிலேயே பீஜி, வேல்ஸ், உகண்டா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வியடைந்தது. இப்போட்டிக்கான வீரர்கள் தெரிவின் போது பல குளறுபடிகள் நடைபெற்றிருந்தமையை பல ஊடகங்களும், முன்னாள் ரக்பி வீரர்களும் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஏதாவதொரு பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட 13 பேர்கொண்ட இலங்கை மெய்வல்லுநர் குழுவினரால் வெறுங்கையுடனேயே நாடு திரும்ப வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

என்றாலும் 68 வருடங்களின் பின் 100 மீட்டர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டிக்குத் தெரிவான இலங்கை அணி 39.08 செக்கன்களில் ஓடி முடித்து 6வது இடத்தைப் பெற்றது. இதில் குறுந்தூர ஓட்ட வீரர் முஹம்மட் அஷ்ரப்பும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நேரமானது இலங்கை சாதனையாகும். இதற்கு முன் 2015ம் ஆண்டு ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் இவ்வீரர்களே 39.38 செக்கன்களில் ஓடி முடித்ததே இலங்கை சாதனையாகவிருந்தது.

கடந்த காலங்களைப் போலல்லாமல் இம்முறை இலங்கை எல்லாப் போட்டி நிகழ்ச்சிகளிலும் சற்று திறமைகாட்டி முன்னேறியுள்ளது.

இது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு உந்துசக்தியாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

Comments