கொடுக்கும் வாக்குறுதிகளில் சிலதையேனும் அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

கொடுக்கும் வாக்குறுதிகளில் சிலதையேனும் அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும்

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

டி.வசந்தகுமார்

150 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகளிலே வாழ்ந்து வரும் கண்டி மாநகர சபையின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் இன்னும் எந்த விதமான வீடமைப்புத்திட்டமும் இல்லாமல் தொடர்ந்தும் அதே குடியிருப்புக்களிலே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. எத்தனையோ அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சி செய்த போதிலும் இவர்களின் வாழ்வில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. முன்பு ஒரு காலத்தில் மாநகர சபையின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்பு அவர்கள் வாழ்ந்த குடியிருப்பை மீண்டும் ஓப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்ற நியதி இருந்தது என்றார் மகியாவை பகுதியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி மூலம் தெரிவு செய்யப்பட்ட சாத்தையா லக்ஷ்மேந்திரன். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.

 

கேள்வி: நீங்கள் ஏன் அரசியலுக்கு வர தீர்மானித்தீர்கள்?

பதில்: எனது அப்பா சாத்தையா அக் காலக்கட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தை ஆரம்பித்து முடிந்தளவு கண்டி நகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மகியாவ என்ற கிராமத்திற்கு பல அபிவிருத்தி வேலைகளை செய்தவர் என்பதால் எனக்கும் அவ்வாறு உதவவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனது தந்தையின் வழியை பின்பற்றி இக் கிராமத்திற்கு அரசியல் அணுசரணையுடன் முடிந்தளவு இம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கத்தின் காரணமாகத்தான் அரசியலில் ஈடுபட்டேன். இன்றைய காலகட்டத்தில் அரசியல் உதவியின்றி எதையும் செய்ய முடியாது. ஆகவேதான் அரசியலில் போட்டியிட்டேன்

 

கேள்வி: உங்களைப்பற்றி கூறுங்கள்

பதில்: நான் கண்டியிலுள்ள சில்வெஸ்டர் கல்லூரியில் கல்வி பயின்றேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் எனது மனைவி அரசாங்க தொழில் செய்கிறார். நான் தற்போது ஓரு தனியார் மருத்துமணையில் முகாமையாளராக கடமையாற்றுகிறேன்

 

கேள்வி: அரசியலுக்கு வருவது என்றால் ஓரளவு பணம் தேவைதானே? எப்படி இவற்றை எல்லாம் சமாளித்து வந்தீர்கள்

பதில்: இந்த புதிய தேர்தல் முறைப்படி கண்டி மாநகரத்தில் போட்டியிடுவது என்றால் முழு நகரத்தையும் சுற்றி அலையவேண்டியதில்லை. எனக்கு என்று கட்சியில் பூரணவத்தை (மகியாவ) வட்டாரத்தில் போட்டியிட ஏற்பாடு செய்தார்கள். நான் வாழும் மகியாவ வட்டாரத்தில் தமிழ் முஸ்லிம், சிங்களம், கிறிஸ்தவம் என பல்வேறு இனத்தையும் மதத்தையும் சேர்ந்த சுமார் 5600 பேர் வாழ்ந்து வருகின்றனர். எனது தந்தையைப்பற்றி ஊர் மக்களுக்கு நன்கு தெரியும் நான் தெரிவு செய்யப்பட்டால் என்ன செய்வேன் என்பதை நான் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு தெளிவுப்படுத்தினேன். அதன்மூலம் மக்கள் என்னை தெரிவுசெய்தார்கள். அதனால் நான பெரியளவில் பணம் செலவு செய்யவில்லை.

 

கேள்வி: நீங்கள் உங்கள் வட்டாரத்தை அபிவிருத்தி செய்ய என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?

பதில் : இங்கு குடியிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல். மக்களின் குடியிருப்புக்களுக்கு உறுதிகளைப் பெற்றுக்கொடுத்தல். ஆயுர்வேத வைத்திய நிலையம் ஓன்றை அமைத்தல். தாய்சேய், சிறுவர் பாரமரிப்பு பகுதிக்கு தமிழ் தெரிந்த மருத்துவத்தாதி ஓருவரை நியமித்தல், புதிய வீடமைப்பு திட்டமொன்றை முன்னேடுத்தல், வாழ்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக பெண்களுக்கு வீட்டில் இருந்தே கைத்தொழிலை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்தல் போன்றவற்றை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன்

 

கேள்வி: இது சம்பந்தமாக மேயரிடம் பேசினீர்களா?

பதில்்: இம் மக்களின் குடியிருப்பு சம்பந்தமாக மேயரிடம் பேசினேன். இவரின் தந்தையான முன்னாள் அமைச்சர் ஈ.எல்.சேனநாயக்க இம் மக்களுக்கு 30 வருட குத்தைக்கு வீட்டை பெற்றுக் கொடுத்தவர்.

இல்லாவிட்டால் தொழிலாளர்கள் மாநகர சபையில் வேலை செய்து ஓய்வு பெற்ற பின்பு குடியிருப்பை கையளித்து செல்லும் நிலை இருந்தது. கண்டி மாநகரசபையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தபோதும் இன்னும் முழுதாக தீர்க்கப்படவில்லை. உதாரணமாக இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் உடனடியாக சேவைக் காலப்பணத்தை பெற்றுக்கொடுப்பது உட்பட ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடமாடும் சேவையை ஏற்படுத்தி இங்குள்ளவர்களின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, திருமண அத்தாட்சி பத்திரம் மரண அத்தாட்சி பத்திரம் போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட ஆரம்ப வேலைகளில் ஈடுபடவுள்ளேன்

 

கேள்வி: இப்பொழுது குறிப்பாக தமிழ் மக்கள் அரசியலைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?

பதில்: அரசியலைப்பற்றி பொது மக்களுடன் பேசவே நான் விரும்பவில்லை. எல்லா தேர்தல் காலங்களிலும் வாக்கு கேட்டு பலர் மக்களை சந்திக்க வருவார்கள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின்னரோ அல்லது தோல்வி அடைந்த பிறகோ இப் பக்கம் வருவதில்லை. இதனால் இம் மக்களுக்கு அரசியல் என்றாலே வேப்பெண்ணெய் போன்று கசக்கிறது.

இந்நிலையிலிருந்து அவர்களை மாற்றவேண்டும் என்றால் தேர்தல் காலங்களில் கூறும் வாக்குறுதிகளில் சிலவற்றையாவது வெற்றி பெற்ற பின் செய்து கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைப்பார்கள் அந் நிலையை ஏற்படுத்த வேண்டும்

 

கேள்வி: உங்களை பொதுமக்கள் எவ்வாறு சந்திக்க முடியும்?

பதில். ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் கண்டி மாநகர சபைக் காரியாலயத்தில் சந்திக்க முடியும் மற்றப்படி எந்தநேரத்திலும் வீட்டிலும் சந்திக்க முடியும்.

Comments