சண்டை வளர்க்கும் சங்க அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

சண்டை வளர்க்கும் சங்க அரசியல்

அருள் சத்தியநாதன்

 

காலா படத்தில் ஒரு பஞ்ச் வசனம் உள்ளது. பட விளம்பரத்துக்கு அதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

‘நா வேங்க மகன் ஒத்தையா நிக்கேன் தில் இருந்தா மொத்தமா வாங்கள...’ என்பதுதான் அந்த பஞ்ச். ரஜினி படத்தில் ரசிகர்களைக் கட்டிப் போடவும், படத்தை வாய்க்கு வாய் கொண்டுசெல்லவும் இத்தகைய தந்திரங்கள் பயன்படுத்தப்படுவது வாடிக்கை. பொழுதுபோக்கு வர்த்தகத்தில் இது சரியான ஆயுதம் தான்.

பிற்போடப்பட்ட மேதினம் ஏழாம் திகதி நாடெங்கும் நடைபெற்றபோது நுவரெலியா மாவட்டத்திலும் இரு பெரும் மே தினக் கூட்டங்கள் இடம்பெற்றன. இ.தொ.காவின் கூட்டம் நுவரெலியா நகரிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையிலும் நடைபெற்றது. இரண்டு கூட்டங்களிலும் பெருமளவு தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். தொழிலாளர்களை விட மே உழைப்பாளர் தினத்தோடு சம்பந்தமில்லாத ஏராளமானோரும் கலந்து கொண்டனர். மலையக மே தினக் கூட்டங்கள் தமது கருப்பொருளை விட்டு விலகி நீண்ட காலமாகி விட்டது. பாராளுமன்ற அரசியலுக்குள் தொழிற்சங்கங்கள் உள்வாங்கப்பட்டது சரிதான், இயல்புதான் என திலக்கராஜ் குறிப்பிட்டிருந்தாலும், மலையக மே தினம் இவ்வளவு தரந்தாழ்ந்த அரசியலுக்குள் சென்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

ஜனநாயக நாடொன்றில் பல்வேறு கொள்கைகள், இலட்சியங்கள் கொண்ட கட்சிகள் இருப்பதும் அவை ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு பதவிகளைப் பிடிப்பதற்கு முனைவதும் இயற்கையானது. இதற்கு பல்வேறு உபாயங்களை அவை கைகொள்ளும் இலங்கையின் பிரதான கட்சிகள், இனப் பிரச்சினையைத் தீர்ப்போம் எனத் தமிழர்களிடம் சொல்லிக் கொண்டு மறுபக்கம் பௌத்தம், ஒற்றையாட்சி, சிங்கள மேலாண்மை என சொல்லியபடியே தெற்கில் வாக்குகளைக் கவரும் உபாயத்தை வெற்றிக்கான கருவியாக இவ்வளவு காலமாக பயன்படுத்தி வந்திருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்.

வெறும் தொழிற்சங்க போராட்ட களமாக இருந்த மலையக அரசியல், 1977இன் பின்னரேயே படிப்படியாக தேசிய அரசியலுக்குள் வந்தது. ஏற்கனவே இருந்த தொழிற்சங்கங்களே அரசியல் முகம் பெற்றன. அதன் அங்கத்தவர்களை கட்சி உறுப்பினர்களாகவும் வைத்துக் கொள்வதில் அவை வெற்றியும் பெற்றன. எப்படி எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் முன்னர் தி.மு.க ஆதரவு மையங்களாகவும் பின்னர் அ.தி.மு.க ஆதரவு தளங்களாகவும் மாற்றம் பெற்றனவோ (இப்போது கமல், ரஜினி) அவ்வாறே மலையக தொழிற்சங்கங்களும் அந்தந்த அரசியல் கட்சிகளின் பிரதான ஆதரவு தளங்களாக மாறின. ஒரு அரசியல் கட்சியைத் தோற்றுவித்து ஆதரவாளர்களைத் திரட்டி அதை வளர்த்தெடுப்பது இலங்கை போன்ற சிறிய நாடுகளில் மிகவும் கடினமான பணி. ஆனால் கட்சி தொடங்கி அதை எளிதாக நிலை நிறுத்துவதென்பது மலையகத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கே வாய்த்த வரம். ஜெயலலிதா எவ்வாறு தி.மு.கவுக்கு எதிராக தனது கட்சிக்காரர்களை கொம்பு சீவி வைத்திருந்தாரோ அவ்வாறே இச் சங்கம் வளர்த்த அரசியல் கட்சித் தொண்டர்களும் சண்டைக் கோழிகளாக வளர்க்கப்பட்டிருப்பது இச் சங்கத் தலைவர்களின் திறமை என்றுதான் சொல்ல வேண்டும்.

மே தினம் பாட்டாளிகளுக்கு முக்கியமானது. இன்றைய கட்சிகள் தமது அரசியல் பலத்தையும், ஆள் அம்பு சக்தியையும் வெளிக்காட்டுவதற்காக மட்டுமே மே தினத்தை பயன்படுத்தி வந்தாலும், மே தினம் கொள்கை ரீதியாகவும் முதலாளித்துவ வீரியங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்போது அது தொழிலாளர் சமூகத்தில் ஒற்றுமைையயும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உரிமைக் குரல்களுக்கான உந்து சக்தியாகவும் மாறுகிறது. ஆக்க சக்தியாக உருவெடுக்கிறது. 1977வரை அப்படித்தான் நிகழ்ந்து கொண்டும் இருந்தது. மே தினத்தன்று ஆளும் கட்சி தொழிலாளர்களின் நலன்களுக்காக எதையாவது அறிவிக்காதா என்ற எதிர்பார்ப்பு அன்று இருந்தது. அன்றைய மலையக தொழிலாளர் தினம் எழுச்சி மிக்கதாக இருக்கும்.

பிரிட்டிஷ் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராகவும், அவர்களது அடக்கு முறைக்கு எதிராகவும், அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசாங்கத்துக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் இம் மே தினங்கள் விளங்கின. சௌ. தொண்டமான், செல்லசாமி ஆகியோர் ஆவேசமாகப் பேசுவார்கள். ஜ.தோ.கா கூட்டத்தில் வி.பி. கணேசன், அப்துல் அஸீஸ் ஆகியோர் நிர்வாகங்களுடனான தமது பிரச்சினைகள் பற்றிப் பேசுவார்கள்.

தொழிலாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு தமது தோட்ட நிர்வாகிகளுக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பரிப்பார்கள். எனினும், ஐ.தொ.காவின் அஸீஸ், தரம் தாழ்ந்து தொண்டமானை விமர்சிக்கவும் மாட்டார், தொண்டமான் அஸீசை கடுமையாக சாடவும் மாட்டார். ஒரு கனவான் அரசியலை அப்போதெல்லாம் மலையகத்தில் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் இன்றிருப்பதைப் போல உயர்தர, பல்கலைக்கழக படிப்போ, இந்தியாவில் உயர் படிப்பு/ ஆங்கில வழிக் கல்வியோ கொண்டவர்கள் அப்போதெல்லாம் மலையக தொழிற்சங்கங்களில் இல்லை. தொண்டமான், சதாசிவம், சென்னன், செல்லசாமி போன்ற தலைவர்கள் வரிசையில் அண்ணாமலை, பி.பி. தேவராஜ் போன்ற மிகச்சில படித்தவர்களே இருந்தனர். அஸீஸ் கட்சியும் அப்படித்தான். ஆனால் அவர்கள் தனிப்பட்ட ரீதியாக முதிர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்ந்ததால் அந்தத் தனிமனித நாகரிகத்தையும் நற்பண்புகளையும் சங்க அரசியலிலும் வெளிப்படுத்தினார்கள். எனவே தொழிற்சங்கப் போட்டி இருந்ததே தவிர, தனிமனிதனை கடித்துக் குதறும் மனப்பான்மை காணப்படவில்லை.

ஆனால் இந்த அரசியல் நாகரிகமெல்லாம் செத்துப் போய் விட்டதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது இ.தொ.க.வும் தேசிய தொழிலாளர் சங்கமும் போடும் இந்த மூன்றாந்தர சண்டையைப் பார்க்கும் போது!

சீர்தூர்க்கி பார்த்தால் தொழிலாளர் தேசிய சங்கம் தான் சண்டைகளை ஆரம்பிப்பதாகத் தெரிகிறது. பின்னர் இ.தொ.கா பதிலடி கொடுக்கிறது. ஏனெனில் இ.தொ.கா வலிந்து பிரச்சினைகளுக்குள் சென்று மாட்டிக்கொள்வதில்லை. அதன் தலைவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்றுதான் இருப்பார். அதிலும் இதிலும் மூக்கை நுழைத்தால் தங்களது குப்பைகளையும் தோண்ட ஆரம்பித்துவிடலாம் என்ற முன்னெச்சரிக்கை சுபாவமாகவும் இருக்கலாம்.

அமைச்சர் திகாம்பரம் தான் பேசும் கூட்டங்களில் இ.தொ.கா வையும் ஆறுமுகன் தொண்டமானையும் விமர்சிப்பதை ஒரு பகுதியாகவே (கிளைமெக்ஸ்?) வைத்திருக்கிறார் போலும், அவன், இவன், செய்தான்களா,

முடியுமானால் செய்துபாரு என்றெல்லாம் ஏக வசனத்தில் திட்டுவார். தனிப்பட்ட விவகாரங்களையும் இழுப்பார். ஆனால் ஆறுமுகன் தொண்டமான் இந்த அளவுக்கு திருப்பி அடித்ததாகத் தெரியவில்லை.

சங்கம், கட்சி அடிப்படையில் வேறுபாடுகள், விரோதங்கள், அரசியல் வெட்டு குத்துகள் இருப்பது சகஜம், ஆனால் இங்கே அமைச்சர் திகாம்பரமும் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் கீரியும் பாம்புமாக இருப்பது மிகச் சிறிய சமூகமான மலையக சமூகத்துக்கு நன்மை அளிக்காது. ஏற்கனவே இச்சமூகம் பல பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருப்பதோடு இந்த சங்க அரசியல் வேறு ஒற்றுமையை குலைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இவர்களது தனிப்பட்ட மோதல் மேலும் பின்னடைவுகளையே தோற்றுவிக்கும்.

இம் மூன்றாண்டு காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு கூட்டணி முக்கியமான சில விஷயங்களை – இ.தொ.கா சாதித்திருக்க வேண்டிய விஷயங்களை - சாதித்துக் காட்டியிருக்கிறது. உட்கட்டமைப்பு அமைச்சு என்ற சக்தி வாய்ந்த அமைச்சை வைத்துக் கொண்டு சாதித்திருக்க வேண்டியவற்றை. இவர்கள் சாதித்திருக்கிறார்கள். புதிய பிரதேச சபைகளை நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கித் தந்தத்தால்தான் அவற்றில் ஆட்சியை பிடிக்க இ.தொ.காவினால் சாத்தியமாயிற்று என்பதை இ.தொ.கா ஆதரவாளர்கள் உணரவேண்டும். பெருந்தோட்டங்களை கிராமமயப்படுத்தி வீடுகளை அமைத்து காணி உறுதியும் பெற்றுத் தரும் திட்டம் புரட்சிகரமானது. தற்போது பரவலாக வீடுகள் அமைக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. மலையக அபிவிருத்தி அதிகார சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை இக் கூட்டணி குறுகிய காலப்பகுதியில் ஆற்றியிருப்பது உண்மை. இது வாக்காளர்களுக்கு விளங்காமல் போனது துரதிர்ஷ்டம்.

இந்தப் பின்னணியில்தான் கடந்த 7ஆம் திகதி மலையகத்தில் இந்த இரண்டு கட்சிகளும் மே தினக் கூட்டங்களை நடத்தின. இவ்விரண்டு கூட்டங்களிலும் தொழிலாளர் தினம் பற்றி பேசப்படவில்லை. சம்பள அதிகரிப்பு, தொழில் உரிமைகள், பிரச்சினைகள் பற்றிப் பேசவில்லை. ஆறுமுகன் தொண்டமானும் ஏனையோரும் சௌ. தொண்டமான் படம் பொறித்த டீ ஷேர்டுகளை அணிந்து ‘மோதலுக்கு’ தயாராகத்தான் வந்திருந்தார்கள். டிஷேர்டின் முதுகுப்புறமாக ‘தில் இருந்தா மோதிய பார்’ என்றிருந்தது. ஒரு காளைமாட்டின் படமும் இருந்தது. மாடு ஏன் வந்தது என்று தெரியவில்லை.

ஆறுமுகனார், ‘தில் இருந்தா மோதிப்பார், மூக்கை உடைப்பேன்’ என்று கொக்கரித்தார். செப்டம்பரில் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தித் தருவோம் என்றும் சொன்னார். எனவே, உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றிப் பெருமிதமே, டி ஷேர்ட் அணிந்து இவரை தில் கதை கதைக்க வைத்தது என்பது வெளிப்படையானது என்றாலும் முன்னர் சாதாரண எம்.பியாக இருந்த திகாம்பரத்தை இவர் இப்போது மோதிப்பார் என்று அழைத்ததன் மூலம் தனக்கு நிகரான சக்தியாக அடையாளப்படுத்தி விட்டார் என்பதையும் எம்மால் விளக்கிக்கொள்ள முடிகிறது.

தலவாக்கலை கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திகாம்பரமும், சாராயமும் சோற்றும் பார்சலும் கொடுத்து ஏமாற்றிய காலம் எல்லாம் முடிந்துவிட்டது. முன்னர் உங்களை எல்லாம் அடித்து அடக்கி வைத்தார்கள்.

இனி எவனாவது அடிக்க வந்தால் என்னிடம் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டார். வாழ்ந்தாலும் இறந்தாலும் நான் உங்களுடன்தான் இருப்பேன் என்று சொன்னது இளைஞர் மனதை தொட்டிருக்கும்.

 

தொழிலாளர் தினத்தில் இவர்கள் போட்ட குழாயடிச் சண்டை மோசமான உதாரணமாகி இருக்கிறது.

இங்கு உருப்படியாகப் பேசியவர் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மட்டுமே. வடக்கு அபிவிருத்தி, கண்டி அபிவிருத்தி, வயம்ப அபிவிருத்தி என பிராந்திய அடிப்படையில் அபிவிருத்தி அமைச்சுகள் அமைக்க முடியுமானால் ஏன் மலையக அபிவிருத்திக்கு ஒரு அமைச்சு அமைத்துத்தர முடியாது? என்று அவர் எழுப்பிய கேள்வி,

வரவேற்கத்தக்கது என்பதோடு மே தினத்துக்கு உரியதுமாகும். தலவாக்கலை கூட்டத்துக்கு வந்தவர்கள் மனதில் அது கலைந்து போகாமல் பதிந்திருக்கும் என்றும் நம்பலாம். இந்த சவாலும், எதிர் சவாலும் மலினமான பேச்சுகளும் இத்தோடு நிறுத்திக் கொள்ளப்படுமானால் நன்றாக இருக்கும்.

கடைசியாக, பலர் மனதிலும் படும் ஒரு விஷயத்யைம் இங்கே சொல்ல வேண்டியுள்ளது.

ஆறுமுகன் தொண்டமான் வரும்போது ஒரு பூனைப்படையும் சுற்றி வளைத்துக் கொண்டு வரும். நுவரெலியாவில் தொழிலாளர்கள் மத்தியில் அவர் நடந்து வரும்போதும் அவரை நெருங்கவிடாமல் பூனைப்படையினர் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு தொழிலாளர் தலைவர் மே தினத்தன்றாவது தொழிலாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு வரலாமா? இது ஒரு ஷோ போலத்தான் தெரிகிறது.

அக்காலத்தில் பெரிய தொரை நடந்து வந்தால் எதிரில் வருபவர் காலில் இறங்கி நின்று வழிவிட வேண்டும். அந்த ஆண்டான். அடிமை மனப்பான்மைத்தான் இங்கே திரும்புவம் பார்க்கிறோம். இந்த ஷோ களையப்பட வேண்டும். ஒரு விஷயம்,

அமைச்சர் திகாம்பரம் தனியாகத்தான் வருகிறார். மக்களுடன், தொழிலாளர்களுடன் பந்தா இல்லாமல்தான் உரையாடுகிறார். இது வருவேற்கத்தக்க முன்மாதிரி.

 

 

Comments