ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் பொது வேட்பாளர்? | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் பொது வேட்பாளர்?

சர்வதேச குடும்ப சுகாதார சேவை தின நிகழ்வு அண்மையில் பொலன்னறுவையில் நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜிதவும் கலந்து கொண்டார். விழா முடிந்த பின்னர் அமைச்சர் ராஜிதவை ஜனாதிபதி பகலுணவிற்காக அழைத்திருந்தார்.

ஜனாதிபதி தன்னை சாப்பிட மாத்திரம் அழைக்கவில்லை. ஏதோ பேசத்தான் அழைத்திருப்பார் என்பது அமைச்சருக்கு புரியாமலில்லை. பகல் சாப்பாட்டின் பின்னர் இருவரும் பேச்சில் இறங்கினார்கள்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தான் பிரதானமாக தலைப்பாக இருந்தது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்‌ஷவை இறக்க ஒன்றிணைந்த எதிரணி தயாராவதாக ஜனாதிபதி பேச்சை ஆரம்பித்தவாறு கூறினாராம். இதற்கு அமைச்சர் பெரிய விளக்கமொன்றை கூறினாராம். கோடாபயவை இறக்குவது எமக்கு நல்லது. அவருக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது.பாதுகாப்பு செயலாளராக இருந்து அவர் செய்தவற்றை அவர்கள் மறக்கவில்லை. சிறுபான்மை வாக்குகள் இன்றி அவர் வெல்ல முடியாது. அவரின் வருகைக்கு சமூக வலைத்தளங்களில் சிறுபான்மையினர் எதிர்ப்பு தெரவித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டாராம்.

எம்மால் தனித்து செயற்பட முடியாது.இணைந்து செல்வோம். பிரிந்து செயற்பட்டதால் உள்ளூராட்சி தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டது. நீங்கள் பிரதமருடன் பேசி இதற்கான திட்டத்தை தயாரியுங்கள் என அமைச்சர் ராஜித கூறினாராம்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ராஜித ,பிரதமருடனும் பேச்சு நடத்தியதாக அறியவருகிறது. பிரதமரின் ஆலோசகர் தினேஷ் வீரக்கொடியும் இதில் பங்கேற்றிருந்தார்.

தற்போதைய நிலையில் கூட்டணியாகத் தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க ​வேண்டும் என அமைச்சர் ராஜித இங்கு எடுத்துரைத்துள்ளார். இதன் மூலம் தான் எம்மால் வெற்றி பெற முடியும். பொதுச் சின்னமொன்றில் ஐக்கிய தேசிய முன்னணியை பதிவு செய்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறிய கருத்தை பிரதமர் ஆமோதித்ததாக அறிய வருகிறது.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சித் தலைவர்களுடன் பேச முடிவு செய்யப்பட்டது. கடந்த வியாழன் மாலை இந்த கூட்டம் நடந்ததாக அறிய வருகிறது.

சுதந்திரக் கட்ச முக்கியஸ்தர்களுக்கும் அமைச்சர் ராஜிதவுக்குமிடையிலான பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. பொது கூட்டணியொன்றில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி இங்கு ஆராயப்பட்டது. இதற்காக இரு பிரதான கட்சிகளும் தனித்தனி திட்டங்களை தயாரித்து பின்னர் பொதுத் திட்டமொன்றை உருவாக்கி செயற்பட இங்கு முடிவு செய்யப்பட்டதாக அறிய வருகிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பொது வேட்பாளரை நிறுத்த அமைச்சர் ராஜித சேனாரத்ன முழு முயற்சி மேற்கொண்டு வந்தாலும் இரு கட்சியிலும் உள்ள ஏனைய தரப்பினர் இதனை விரும்பவில்லை என அறிய வருகிறது. தங்களது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும். பொது வேட்பாளரை நிறுத்தி இரு கட்சியும் தற்பொழுது மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது போன்று எதிர்காலத்திலும் நடக்க முடியாது என எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாம்.

ரவிக்கு அமைச்சு வழங்குவதை எதிர்ப்பது யார்?

அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சு பதவி கிடைக்கும் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அவருக்கு அழைப்பு வந்திருக்கவில்லை. முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கு மாத்திரமே புதிதாக அமைச்சு பதவி கிடைத்தது. இதனால் ரவி கருணாநாயக்க மிகவும் நொந்து போயுள்ளதாக அறிய வருகிறது. இந்த கவலையை அவர் அமைச்சர் ராஜிதவிடமும் கூறியிருந்தார். கடந்த வாரம் பொலன்னறுவையில் நடந்த நகழ்வொன்றில் இந்த விடயம் பற்றி அவர் ஜனாதிபதியிடம் நேரடியாக வினவினாராம். அமைச்சர் ரவி அடிக்கடி என்னை சந்திப்பார். இது பற்றியும் பேசுவார். உண்மையில் யார் இதற்கு தடையாக உள்ளனர் என வெளிப்படையாக அவர் கேட்டாராம். ஜனாதிபதி தான் அவருக்கு அமைச்சு வழங்க தடையாக இருப்பதாக அரசியல் அரங்கில் பேசப்படுவதால் அமைச்சர் ஜனாதிபதியின் பதிலை ஆவலாக செவிமடுத்தாராம். அவர் கூறிய பதில் அமைச்சருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஐ.தே.கவினர் தான் ரவிக்கு அமைச்சு பதவி வழங்குவதை எதிர்க்கின்றார்கள். என்னை சந்திக்க வரும் அமைச்சர்கள் பலரும் அவருக்கு அமைச்சு பதவி வழங்காதீர்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.ஒருநாள் பிரதமருடன் என்னை சந்திக்க வந்த இரு சிரேஷ்ட அமைச்சர்கள் கூட இதனை தான் கூறினார்கள் என ஜனாதிபதி நீண்ட விளக்கமொன்றையே கூறினாராம். ஐ.தே.க மத்திய குழுவில் ரவிக்கு அமைச்சு பதவி வழங்குவது குறித்து முடிவு செய்வதாக பிரதமர் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்திலும் குறித்த அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனராம்.

16 பேர் குழு எந்தப் பக்கத்திற்கு..

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 8 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வாக நடைபெற்ற இந்த நிகழ்வில் முக்கிய பல நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சு.க 16 எம்.பிகளும் எதிரணிக்கு தாவினார்கள். ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்து சபைக்குள் பிரசன்னமாக ஓரிரு நிமிடங்கள் உள்ள நிலையிலே இந்த தாவல் நிகழ்ந்தது. முன்னதாக இவர்கள் எதரணியில் தங்களுக்கு ஒதுக்கியுள்ள ஆசனங்களை சென்று பார்த்ததாக தகவல். சபை நடுவே எதிரணிக்கு செல்லாமல் நேரடியாக எதிரணியில் அமர்வோம் என 16 பேர் கொண்ட குழுவினர் கூறியிருந்தனராம். ஜனாதிபதியை அவமதிப்பதாக இது அமையும் எனவும் அவர்கள் எடுத்துரைத்ததாக தெரிய வருகிறது. ஆனால் ஆளும் தரப்பிற்கு சென்று அங்கிருந்த எதிரணிக்கு மாறுவது தான் நல்லது என கூடுதலானவர்கள் கோரியதால் சபை நடுவினால் எதிரணிக்கு செல்ல முடிவு செய்யப்பட்டதாம்.

சபை அமர்விற்கான மணி அடிக்கப்படுவதோடு ஆளும் தரப்பிற்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். சில ஐ.தே.க எம்.பிகள் அவர்களுடன் கைலாகு கொடுத்து சிரித்து பேசினார்கள். 16 பேரும் சபைக்கு வந்த பின்னர் ஒவ்வொருவராக மறுபக்கம் செல்ல ஆரம்பித்தார்கள். ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்கள் கரகோசம் எழுப்பி கைலாகு கொடுத்து அவர்களை வரவேற்றனர். ஐ.தே.கவில் சிலர் ஹூ சத்தம் எழுப்பி தமது எதிர்ப்பை வெ ளியிட்டார்கள்.

இவர்கள் 16 பேருக்கும் ஒன்றிணைந்த எதிரணி எம்.பிகளுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் ஒரே இடத்தில் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த குழப்பத்திற்கு மத்தியில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் ஆளும் தரப்பில் முன்வரிசைக்கருகில் வந்து ஏதோ சொல்ல முற்பட்டார். அவருக்கு முன்னதாக சத்தம் எழுப்பிய ஒன்றிணைந்த எதிரணி எம்.பி இந்திக அநுருத்த, நீங்கள் வர வேண்டாம். சலூன் கதவு மூடிவிட்டது. வேறு யாரும் வரவேண்டாம் என கூற சபையில் கொல்லென சிரிப்புச் சத்தம் பரவியது. ஐ.தே.கவிலுள்ள சில பின்வரிசை எம்.பிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்திக இவ்வாறு நகைச்சுவையாக கூறியிருந்தார்.

சு.க 16 பேர் குழு எதிரணிக்கு வருவதோடு ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் ஆசன ஒதுக்கீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. த.தே.கூ மற்றும் ஜே.வி.பி ஆசனங்களில் பெரிய மாற்றம் இடம்பெறவில்லை. ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஒதுக்கிய பகுதியில் முன்வரிசை ஆசனம் இ.தொ.க தலைவருக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தது. அவர் ஆளும் தரப்பு சார்ந்த எதிரணி எம்.பி என்பதால் அவருக்கு ஜே.வி.பி தரப்பு அமரும் பகுதியில் ஆசனம் ஒதுக்குமாறு தினேஷ் குணவர்தன கோரியிருந்தராம். இந்த நிலையில் அவருக்கு ஜே.வி.பி தலைவருக்கருகில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

பிறந்த நாள் விழாவில்

பங்கேற்ற புது முகம்

16 பேர் அணி ஜனாதிபதியுடனா ஒன்றிணைந்த எதிரணியுடனா இருக்கும் என்பது தொடர்பில் பலத்த விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்களான காமினி லொகுகே மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரின் பிறந்த நாள் கொண்டாட்டம் கல்கிஸ்ஸ பகுதி ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி தான் பிரதம அதிதி. கட்சி கூட்டம் நடக்க இருப்பதாக கூறி தான் இரு எம்.பிகளும் அழைக்கப்பட்டிருந்தார்களாம். இங்கு இரு எம்.பிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி கேக் ஊட்டி விட்டாராம். இந்த பார்ட்டியில் வழமையாக பங்கேற்காத ஒருவரும் இருந்தார். அவர் வேறு யாருமல்ல முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தான். இவர் கேக் சாப்பிட மாத்திரம் வரவில்லை. கொண்டாட்டத்திற்கு மத்தியில் பேச்சு நடந்தாம். 16 பேர் குழுவும் ஒன்றிணைந்த எதிரணியும் இணைந்து செயற்படுவது பற்றி ஆராயப்பட்டதாம்.

இதே நாளில் தான் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் நடைபெற்றது.இதில் பங்கேற்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்றிருந்தார்.

சாவிலிருந்து மீண்ட டிலான் பெரோரா எம்.பி

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தூதுக் குழுவில் இடம் பிடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட கிஹானி வீரசிங்க தொடர்பான சலசலப்பு சற்று அடங்கியுள்ளது. இவருடன் இணைத்துப் பேசப்பட்ட அரசியல்வாதிகளில் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவும் அடங்குகிறார். ஜனாதிபதியுடன் சென்று குழுவில் இவர் இல்லாத போதும் 16 பேர் குழுவின் பிரச்சினை தொடர்பில் பேச மூன்று சு.க எம்.பிகள் லண்டன் விரைந்திருந்தார்கள். கிஹானியுடன் டிலான் பெரேரா இருக்கும் படங்களும் சமூக வளைத்தளங்களில் பரவியிருந்தன.

டிலான் பெரேரா லண்டனில் இருந்த போது வந்த தொலைபேசி அழைப்பு அவருக்கு உடனே நாட்டுக்கு திரும்ப வைத்தது. மனைவியின் தந்தை இறந்து விட்டார் என்பது தான் அந்தச் செய்தி.

தந்தை இறந்த பரபரப்பில் அவரின் மனைவியாருக்கு கிஹானி பற்றிய கிசுகிசு காதில் எட்டியிருக்கவில்லையாம். இல்லையென்றால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தான் தனது இறுதிக் கிரியை நடந்திருக்கும் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் வைத்து தனக்கு நெருக்கமான சில ஊடகவியலாளர்களிடம் நகைச்சுவையாக கூறினாராம்.

அவர் இவ்வாறு அளவளாவிக் கொண்டிருக்கையில் தூரத்தில் தன்னுடைய குழுவைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் அநுராத ஜெயரத்ன வந்து கொண்டிருந்தார். அவர் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடனும் ஜே.விபி உறுப்பினர் ஒருவருடன் தான் வந்து கொண்டிருந்தார்.

நீங்கள் எவ்வாறான குழுவுடன் சேர்ந்துள்ளீர்கள் என்று புரியவில்லை என்று டிலான் பெரேரா கூற அநுராத ஜெயரத்னவும் இல்லை இல்லை..இப்பொழுதே எதிரணி செயற்பாடுகளை ஆரம்பித்து விட்டேன் அது தான் என அவரும் சிரித்தவாறு கூறினாராம்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையை தொடர்ந்து அன்று மாலை சபாநாயகரினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றுண்டி விருந்து வழங்கப்பட்டது. இதில் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.வெளியில் மோதிக் கொள்ளும் பலரும் சுவாரஷ்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்திருந்த அதிகாரிகளுக்கு இது சற்று புதிராகத் தான் இருந்தது.

Comments