மன்னாரில் ஆட்சிக்கு உதவி கோரிய கூட்டமைப்பு வவுனியாவில் அவ்வாறு நடக்கவில்லை | தினகரன் வாரமஞ்சரி

மன்னாரில் ஆட்சிக்கு உதவி கோரிய கூட்டமைப்பு வவுனியாவில் அவ்வாறு நடக்கவில்லை

வன்னி மாவட்ட எம்.பி  கே.கே.மஸ்தான்

கே.வசந்தரூபன்...

வவுனியா விசேட நிருபர்

 

ன்னாரில் ஆட்சியமைக்க உதவி கோரிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இதன் காரணமாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும், லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான கே.கே.மஸ்தான் எம்.பி தெரிவித்துள்ளார்.

தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவரது பேட்டி...

கேள்வி: நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தென்னிலங்கையின் பிரதான இரு தேசிய கட்சிகளும் வன்னியில் கணிசமான ஆசனங்களை பெற்றுள்ளன. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் எனக் கருதுகிறீர்கள்..?

பதில்: தென்னிலங்கையின் பிரதான இரு தேசிய கட்சிகளும் இணைந்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளதால் தமக்கான அபிவிருத்திக்காக அந்தக் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். அத்துடன் இதுவரை காலமும் தாங்கள் நம்பியிருந்த கட்சிகள் கைவிட்டதாலும், அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையில்லா தன்மையும் மக்கள் மத்தியில் இந்த மாற்றம் ஏற்பட வழிவகுத்துள்ளது. குறிப்பாக வன்னியில் லங்கா சுதந்திரக் கட்சிக்கு பொறுப்பாக நான் இருப்பதால் இன, மத ரீதியான முரண்பாடுகள் இல்லாது நாம் வேலைகளை செய்தோம்.

லங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் இல்லாத நிலையில் நாம் இந்த தேர்தலில் எதிர்கொண்டு தற்போது 31 ஆசனங்களை பெற்றுள்ளோம். இந்த நிலைக்கு எமது கட்சி, ஜனாதிபதி மற்றும் என்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையே காரணம். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையிலும் அவர்களும் அபிவிருத்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

கேள்வி: இந்த மாற்றம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனக் கருதுகிறீர்களா..?

பதில்: தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை ஒரு பின்னடைவு தான். எதை தாம் செய்தாலும் மக்கள் தம்முடன் இருப்பார்கள் என கருதினார்கள். ஆனால் அந்த நிலமைகள் மாற்றம் அடைந்து அவர்களது அரசியலுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: வன்னியில் சில சபைகளில் ஆட்சி அமைக்க புதிய கூட்டுக்களை உருவாக்கியுள்ளீர்கள். அந்த கூட்டுகள் என்ன அடிப்படையில் உருவானவை..?

பதில்: மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். மன்னார் நகரசபையில் எமது ஆதரவுடன் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது.

நானாட்டான் பிரதேச சபையிலும் எமது ஆதரவுடன் தான் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது. மக்களுக்கு நல்ல சேவையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் எதையுமே எதிர்பாராது ஆதரவு வழங்கியிருந்தோம்.

அதேபோக்கை வவுனியாவில் மேற்கொள்ள வவுனியாவில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஒத்துழைக்கவில்லை. அவர்கள் மன்னாரில் பேசியது போன்று வவுனியாவில் பேசாமையால் நாம் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வவுனியாவில் ஆட்சி அமைப்பதற்கு எமது ஆதரவை கேட்டு உரிய வகையில் பேச்சுக்களை முன்னெடுக்கத் தவறியிருந்தார்கள். ஆனால் எந்தக் கட்சியாக இருந்தாலும் எமது மக்களினுடைய தேவைகளை உள்ளூராட்சி சபைகள் ஊடாக நேர்மையாகவும், சரியாகவும் செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இருந்த ஊழல்களைப் போல் இல்லாது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதற்காகவே எமது உறுப்பினர்கள் கட்சி பாராது ஆதரவு வழங்கியிருந்தனர்.

கேள்வி: வவுனியவின் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கூட்டமைப்பு சார்பில் தங்களுடன் யார் யார் பேசியிருந்தார்கள்..?

பதில்: வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் முதலில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் பேசியிருந்தார்.

அதன் பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ, வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா சந்திரகுலசிங்கம் ஆகியோர் பேசியிருந்தனர். இதன்போது வவுனியா நகரசபையிலும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிலும் உதவி தவிசாளர் பதவி எமது கட்சிக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். முல்லைத்தீவிலும் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளில் உதவி தவிசாளரை கேட்டிருந்தோம்.

அடுத்த கட்டமாக இது தொடர்பில் பேசுவோம் என கூறியிருந்தார்கள். வவுனியா நகரசபையில் ஆட்சி அமைக்க முற்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் ஆகியோர் பேசியிருந்தனர்.

ஆனாலும் உதவி தவிசாளர் பதவி தராத காரணத்தினாலும், கூட்டமைப்பு உரிய பதிலை தராமையாலும் தான் நாம் இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டியிருந்தது.

அவர்கள் நாம் கேட்டதற்கு இணங்க உபதவிசாளர் பதவியை வழங்க முன்வந்தார்கள். எந்தக் கட்சியுடன் என்றாலும் இணைந்து பெறக் கூடியவற்றை பெற்று மக்களுக்கு சேவை செய்யுமாறு எமது கட்சி தலைமையும் கூறியிருந்தது.

அதனடிப்படையில் நாம் மக்களுக்காகவே இவ்வாறு செயற்பட்டோம்.

கேள்வி: உள்ளூராட்சி சபை தேர்தலின் பின் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது தங்களுக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அவ்வாறு வழங்கப்படாமைக்கான காரணம் என்ன..?

பதில்: உண்மையில் ஜனாதிபதி ஆகிய எமது கட்சித் தலைவர் தான் இது சம்மந்தமாக முடிவு எடுத்திருக்க வேண்டும்.

வன்னியில் லங்கா சுதந்திரக் கட்சி பெற்றுள்ள வளர்ச்சிகளைப் பார்த்தும், தேர்தல் வெற்றி குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்கள்.

நிச்சயமாக எதிர்காலத்தில் எனது சேவையை மேலும் வன்னி மக்களுக்கு வழங்கும் பொருட்டு நல்லதொரு பதவியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் எனது மக்களுக்கும் இருக்கிறது.

Comments