ஆதங்கம்; எதிர்பார்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஆதங்கம்; எதிர்பார்ப்பு

கட்சி அரசியல் அலசல்கள் எல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும். இந்த வாரம் எரிபொருள் விலையேற்றந்தான் நமது முக்கிய பேசு பொருளாக இருக்கிறது.

இதுவும் அரசியல்தானே என்று நீங்கள் கேட்கலாம். உண்மை, இது சற்று கட்சி அரசியலில் இருந்து மாறுபட்டது. அரசாங்க மட்டத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கை இது.

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கொஞ்சம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. பெற்றோல் 20 ரூபாவாலும் டீசல் 14 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 57 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

உலக சந்தையில் ஏற்பட்ட விலையேற்றமே காரணமாக இருக்கின்றதென அரசாங்கம் வழமையான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. என்றாலும், மீனவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசு சில சலுகைகளை அறிவித்திருக்கிறது.

பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பை விடவும் மண்ணெண்ணெய் விலை மிகவும் கூடுதலாக இருக்கிறது. மீனவர்களையும் விவசாயிகளையும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களையும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு வெகுவாகப்பாதிக்கும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. என்றாலும் பாதிக்கப்படுவோருக்கென 44 ரூபாவுக்கே விநியோகிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மண்ணெண்ணெய் மிகவும் மலிவு விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை சாதகமாகப் பயன்படுத்திய பஸ் ஓட்டுனர்களும் கனரக வாகனச் சாரதிகளும் டீசலுடன் கலந்து மண்ணெண்ணெயைப் பயன்படுத்தியதனால் அதன் நுகர்வு திடீரென அதிகரித்தது மட்டுமல்ல, சாதாரண மக்களைச் சென்றடையும் வீதமும் குறைவடைந்திருந்தது.

மண்ணெண்ணெய் தொடர்பில் அரசு எடுத்த நடவடிக்கை ஓரளவு திருப்தி கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.

இவை ஒரு புறமிருக்க, எரிபொருள் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி பஸ் கட்டணங்கள், ஓட்டோ கட்டணங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க முதலாளிகள் வரிந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பெற்றோல், டீசல் விலைகளின் அதிகரிப்பு 20 ரூபாவுக்கு மேற்படவில்லை. என்றாலும், இதனைப் பாரிய சுமையாகக் காட்டி மக்கள் மீது சுமையேற்ற இலாபமீட்டுவோர் எடுக்கும் முயற்சிகளை எந்த வகையில் நம்மால் ஏற்க முடியும்.

2015இல் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் உடனடியாக எரிபொருட்களின் விலையைக் குறைத்திருந்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அப்போது, 150 ரூபாவாக இருந்த பெற்றோல் 117 ரூபாவுக்கு குறைக்கப்பட்டது. அதாவது, 33 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அதே போல, 133 ரூபாவாக இருந்த டீசல் 110 ரூபாவுக்குக் குறைக்கப்பட்டது. அதாவது, 23 ரூபாவால் குறைந்தது. கடந்த மூன்று வருடங்களாக இந்த விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

உலக சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை மானியங்களை வழங்கி அரசாங்கம் ஈடுகொடுத்திருக்கிறதென்பது தெளிவாகின்றது.

சுமார் 33 ரூபா குறைத்த நிலையில் மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இப்போது 20 ரூபாய்தான் கூடியதொகையாக இருக்கிறது. அதாவது, 33 ரூபாய் குறைத்த அரசாங்கம் தற்போது 20 ரூபாவால் அதிகரித்திருக்கிறது. உண்மையில் இங்கே, எரிபொருள் விலைகள் கூடியிருப்பதை நாம் நியாயப்படுத்தவில்லை.

ஆனாலும், சிறியதொரு அதிகரிப்பை வைத்துக்கொண்டு, பஸ் கட்டணங்களையும் ஆட்டோக் கட்டணங்களையும் அதிகரிக்க முயல்வதை வெறும் அடாவடித்தனமாகவே பார்க்க முடிகிறது.

எரிபொருள் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி கட்டண அதிகரிப்புச் செய்ய முயல்வோர் விலைகளைக் குறைக்கும் போது கட்டணங்களை மீளாய்வு செய்வதுமில்லை; குறைப்பதுமில்லை. மக்கள் மீது சுமையேற்றி வதைப்பதே இவர்களது இலக்காக இருக்கிறது.

எரிபொருள் விலை அதிகரிக்கும்போது கட்டண அதிகரிப்பு செய்வோர், ஏன் குறைக்கும் போது குறைப்பதில்லை.

இது, இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைகளால் எழுப்பப்படும் கேள்வி மட்டுமல்ல, உள்ளக் குமுறலாகவும் இருக்கின்றது.

2015இல் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் சமையல் எரிவாயுவின் விலையை 800 ரூபாவினால் குறைத்தது. இதன் மூலம், 2440 ரூபாவாக இருந்த காஸ் சிலிண்டர் ஒன்று 1640 ரூபாவுக்கு குறைக்கப்பட்டது.

800 ரூபா குறைப்பினால் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். என்றாலும், சாதாரண மக்களைவிட, வர்த்தகர்களும் ஹொட்டல் உரிமையாளர்களுமே இதன் முழுமையான பலனை அனுபவித்தனர்.

800 ரூபாவை அரசாங்கம் குறைத்தும் ஹொட்டல் உணவுகளிலோ, உணவுப் பார்சல் விலைகளிலோ, ரொட்டி போன்ற உணவுகளிலோ எத்தகைய குறைப்பும் செய்யப்படவில்லை. மாறாக, எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் உற்பத்தி செலவுகள் அதிகமாக இருப்பதால் குறைக்க முடியாது என்பது ஹொட்டல் உரிமையாளர்களின் வாதமாக இருக்கிறது.

கொழும்பு மாநகர் உட்பட நாட்டின் நகர்ப்புறங்களிலுள்ள தொழிலாளர்கள் சாதாரண ஹொட்டல்களை நம்பியே வாழ்கின்றனர். சமையல், எரிவாயு விலைக்குறைப்பு மூலம் இவர்களால் எந்த பலனையும் பெறமுடியவில்லை.

ஆத்திர மிகுதியால் ஹொட்டல் உரிமையாளர்களுடன் மோதியவர்களும் கைகலப்பில் ஈடுபட்டோரும் ஏராளம். இந்த இடத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்பது கவலைக்குரியது.

விலையைக் குறைத்தால் மட்டும் போதாது, நடைமுறைப்படுத்தலும் நன்றாக இருக்க வேண்டும்.

சமையல் எரிவாயுவை 800 ரூபாவால் குறைத்த அரசாங்கம் இரண்டு ஆண்டுகளின்பின் (செப்டெம்பர் 2017) 110 ரூபாவால் அதிகரித்து. அதன் பின்னர், கடந்தவாரம் (ஏப்ரல் 2018) 245 ரூபாவால் அதிகரித்தது. 800 ரூபா குறைத்ததன் பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரு அதிகரிப்புக்களையும் பார்த்தால் 355 ரூபா மட்டுமே மொத்தமாகக் கூட்டப்பட்டுள்ளது. (ரூ.110 + ரூ. 245 = ரூ. 355).

சுருங்கச் சொன்னால் 2015இல் 800 ரூபாவைக் குறைத்த அரசாங்கம் 2018 வரைக்கும் 355 ரூபாவை மட்டுமே அதிகரித்திருக்கிறது. இந்த இடத்திலும் நாம் அரசாங்கத்தை நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் 800 ரூபா குறைத்தபோது விலைக்குறைப்பு செய்யாத இந்த வர்த்தகர்கள் எந்தவகையில் விலையை அதிகரிக்க முடியும். பலனை மக்கள் அனுபவித்திருந்தால் விலை அதிகரிப்பு அல்லது கட்டண அதிகரிப்பு செய்ய அவர்களுக்கு தார்மீகம் இருக்கும்.

உலக சந்தையில் ஏற்படும் மாற்றம் அரசாங்கத்துக்கும் நெருக்கடியை கொடுக்கும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

என்றாலும், இப்படியான தருணங்களில், மக்களைப் பாதிக்காத வகையில் எரிபொருளுக்கு விதிக்கும் வரிகளில் அரசு மாற்றம் செய்யலாமென பொருளியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மக்கள் நலன்கருதி சில அத்தியாவசிய பொருட்கள், குறிப்பாக சமையல் எரிவாயு, எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பதாகக் கூறும் அரசு, அவற்றின் பலன் மக்களைச் சென்றடைவதற்கு வழிவகுக்க வேண்டும்.

முறையாக நடைமுறைப்படுத்தப்படாத எந்தவொரு திட்டமும் நாட்டு நலனுக்கு நன்மையைத் தராது. ஒரு விடயத்தை நாம் சொல்லவேண்டும்.

எந்த, அரசு என்றாலும், வாக்கு வங்கிகளை மனதில் கொண்டு செயற்பட்டால் ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கு வழிவகுக்காது. கூட்டல், கழித்தல் பார்த்து எதனையும் சாதித்துவிடமுடியாது. ஆகவே,

போலி விலை அதிகரிப்பு, கட்டண அதிகரிப்பு செய்து மக்கள் மீது மேலும் சுமையேற்ற செய்து மக்கள் மீது மேலும் சுமையேற்ற ஏகபோக வர்த்தகர்கள் முயல்கிறார்கள். அரசுதான் இதன் மீது நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். மக்களைப் பகடைக்காயாக்கும் வர்த்தகர்களின் எந்தவொரு முயற்சிக்கும் இடம் கொடுக்கக் கூடாதென்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Comments